Vatican News
புனித அகுஸ்தீன் அவர்களின் அக்கால ஓவியம் புனித அகுஸ்தீன் அவர்களின் அக்கால ஓவியம்  (©zatletic - stock.adobe.com)

சாம்பலில் பூத்த சரித்திரம்: மத்தியகால கிறிஸ்தவ கலைகள்– பகுதி 3

இத்தாலிய கவிப்பேரரசாக விளங்கிய தாந்தே அல்கியெரி எழுதிய La Divina Commedia என்ற மகா காவியம், இத்தாலிய மொழியில் வெளிவந்த மாபெரும் இலக்கியமாகவும், உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாகவும் கருதப்படுகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

மத்திய காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்கள் என அனைத்தின் வளர்ச்சியில் கிறிஸ்தவர்களின் பங்கு வரலாற்று ஏடுகளில் அழிக்கப்பட முடியாதவை. இத்தாலியில் புகழ்பெற்ற கவிஞர் தாந்தே அல்கியெரி (Dante Alighieri) அவர்களும், இங்கிலாந்தில் கப்புச்சின் துறவி ரோஜர் பேகன் (Roger Bacon OFM) அவர்களும், பிரான்ஸ் நாட்டில், தொமினிக்கன் துறவி புவே நகரின் வின்சென்ட் (Vincent of Beauvais) அவர்களும் மாபெரும் மேதைகளாக விளங்கினர். தாந்தெ அல்கியெரி (1265 – செப்.14, 1321) அவர்கள், மத்தியகால ஐரோப்பாவில் அறிவில் சிறந்த மற்றும் திறமைமிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மத்திய காலத்தின் இறுதிக் கட்டத்தில், இத்தாலியில் மறுமலர்ச்சி ஏற்பட்ட துவக்க காலத்தில், இத்தாலிய கவிப்பேரரசாக விளங்கிய இவர் எழுதிய La Divina Commedia (Divine Comedy) என்ற மகா காவியம், இத்தாலிய மொழியில் வெளிவந்த மாபெரும் இலக்கியமாகவும், உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாகவும் கருதப்படுகிறது. இத்தாலியில் இவர், "உன்னத கவிஞர் (il Sommo Poeta)" என்று அறியப்படுகிறார். மேலும், இவர், "இத்தாலிய மொழியின் தந்தை" எனவும் மதிக்கப்படுகிறார். இவர் எழுதிய Divine Comedy, ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு, கலை உலகினர்க்குத் தூண்டுதல் அளித்து வந்தது. தாந்தெ, Petrarch, Boccaccio ஆகிய மூவரும், இத்தாலியின் மூன்று நீரூற்றுகள் என போற்றப்படுகின்றனர்.

தாந்தெ அல்கியெரி அவர்களின் வாழ்வு பற்றிய விவரங்கள் அவ்வளவாகத் தெரியவில்லை. இவர், 1265ம் ஆண்டில் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்தார். இவரின் குடும்பம், பிளாரன்சில் முக்கியத்துவம் பெற்றதாய், திருத்தந்தையின் தலைமைப் பணிக்கும் ஆதரவாக இருந்தது. பிளாரன்ஸ் நகரில் பிரான்சிஸ்கன் மற்றும் தொமினிக்கன் சபைகளின் பள்ளிகளில் பயின்ற இவர், அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற பேச்சாளரும், மெய்யியலாளருமான, Brunetto Latini என்பவரிடம் கல்வி கற்றார் என, இவரைப் பற்றிய வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. 1285ம் ஆண்டுவரை, பொலோஞ்ஞாவில் தங்கியிருந்து, அந்நகர் பல்கலைக்கழகத்தில், சட்டக்கல்வி பயின்றார். அச்சமயத்தில்தான், இவரின் முதல் படைப்பான “புதிய வாழ்வு (La Vita Nuova)” என்ற நூலை எழுதினார். 1285க்கும், 1301ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிளாரன்ஸ் நகரில் பல்வேறு முக்கிய அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்தார் எனவும், 1302ம் ஆண்டில் அவற்றிலிருந்து தடை செய்யப்பட்டார் எனவும் சொல்லப்படுகிறது. 

தாந்தெ அல்கியெரி அவர்கள், ஏறத்தாழ 1307ம் ஆண்டில் எழுதத் தொடங்கிய Divine Comedy மகா காவியம், 1321ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இந்தக் காவியம், நரகம், தூய்மை நிலை, விண்ணகம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்த காவியத்தில், Inferno என அழைக்கப்படும் முதல் 34 கவிதைகள், தாந்தெ அவர்கள், நரகம் பற்றி கொண்டிருந்த கண்ணோட்டத்தை விளக்குகின்றன. தாந்தெ அவர்களின் இந்தச் சிறந்த படைப்பு பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் காலத்து அறிவியல், மெய்யியல் மற்றும் அரசியல் சூழல் பற்றிய விரிவான அறிவு அவசியம் எனச் சொல்லப்படுகின்றது. இவர் 1321ம் ஆண்டில், ரவென்னாவில் காலமானார்.

மத்திய கால ஐரோப்பாவில் சிறந்து விளங்கிய மெய்யியலாளர்களில், ஆங்கிலேய கப்புச்சின் துறவி ரோஜர் பேகன் (Roger Bacon OFM) அவர்களும் ஒருவர். 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தின் Ilchester நகரில் பிறந்த இவர், வியப்புக்குரிய முனைவர் என பலராலும் வியந்து பாராட்டப்பட்டார்.

மேலும், மத்திய காலத்தில் திருஅவையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. திருத்தந்தையரின் அதிகாரம் விரிவடைந்தது. பல நாடுகளில் திருத்தந்தையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வழியாக திருத்தந்தையர், தங்களின் அதிகாரத்தைச் செயல்படுத்தி வந்தனர். துறவு ஆதீனங்களின் தலைவர்களை நியமித்தல், குறிப்பிட்ட பாவங்களுக்கு மன்னிப்பளித்தல், புனிதர் நிலைக்கு உயர்த்துதல் என்பன, திருத்தந்தையருக்கு மட்டுமே உரியனவாக இருந்தன.

1048ம் ஆண்டு முதல் 1257ம் ஆண்டுவரை, திருத்தந்தையரின் தலைமைப்பணி, புனித உரோமைப் பேரரசு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசாகிய பைசான்டைன் பேரரசின் தலைவர்கள் மற்றும் திருச்சபைகளோடு தொடர்ந்து மோதல்களை அனுபவித்தது. இந்நிலை கிறிஸ்தவத்தில், கிழக்கு மற்றும் மேற்கில் இடம்பெற்ற பெரும் பிரிவினையில் முடிவுற்றது. திருத்தந்தை, உரோம் ஆயராக இருந்தபோதிலும், அவர், 1257க்கும் 1377ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், வித்தெர்போ, ஓர்வியெத்தோ, மற்றும் பெருஜியா நகரங்களிலும், பின்னர் பிரான்சின் அவிஞ்ஞோனிலும் தங்கியிருந்தார். திருத்தந்தை அவிஞ்ஞோனிலிருந்து திரும்பி உரோம் வந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தையரின் அதிகாரம் தொடர்பாக, மேற்குப் பகுதி கிறிஸ்தவத்தில் பிரிவினை உண்டானது.

10 April 2019, 15:58