தேடுதல்

மவுரீசியஸ் கர்தினால் Maurice Piat மவுரீசியஸ் கர்தினால் Maurice Piat  

சிறாரின் பாதுகாப்பிற்காக அனைவரும் உழைக்கவேண்டும்

இத்தவக்காலத்தில், நம் தவறுகள் குறித்து மன்னிப்பை வேண்டவும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், சிறாரைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து உழைக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் - மவுரீசியஸ் கர்தினால் Piat

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மவுரீசியஸ் நாட்டின் தலத்திருஅவை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை நடவடிக்கைகளால் சிறார் அடைந்துள்ள பாதிப்புக்களின் முக்கியத்துவம் குறித்து உணராமல் திருஅவை செயல்பட்டதற்காக, தன் ஆழ்ந்த வருத்தத்தை, அந்நாட்டு கர்தினால் Maurice Piat அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயேசுவின் பாடுகளைக் குறித்து கிறிஸ்தவர்கள் தியானித்துவரும் இத்தவக்காலத்தில், நம் தவறுகள் குறித்து மன்னிப்பை வேண்டவும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், சிறாரைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து உழைக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்று, கர்தினால் Piat அவர்கள், தன் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளார்.

சிறாரைப் பாதுகாப்பது குறித்து, Port-Louis மறைமாவட்டத்தில் வழிகாட்டுதல் விதிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள போதிலும், சிறப்புப் பயிற்சிகளுக்கென வல்லுனர்களின் உதவிகள் நாடப்பட்டுள்ளதாக, கர்தினால் Piat அவர்கள் தெரிவித்துள்ளார்.

"ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும்" என்ற விவிலியச் சொற்களை மேற்கோளாகக் கூறியுள்ள மவுரீசியஸ் கர்தினால் Piat அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவும், செபமும் தேவைப்படும் அதே வேளையில், உண்மையை வெளிக்கொணர்ந்து, அரசின் சட்டத்தோடு ஒத்துழைக்கும் மன உறுதியும் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2019, 16:25