தேடுதல்

Vatican News
புனித வியாழன் எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி புனித வியாழன் எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி   (Vatican Media)

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி

புனித வியாழன் - இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல், இயேசு தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவுதல், இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல். புனித வியாழன் திருப்பலியில் மூன்று பெரிய ஜாடிகளில் அர்ச்சிக்கப்படும் எண்ணெய், திருமுழுக்கு, நோயில்பூசுதல், குருத்துவம் ஆகிய அருளடையாளங்களின்போது பயன்படுத்தப்படுகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான்  

இன்று புனித வியாழன். பாஸ்கா விழாவின் முப்பெரும் நாள்களின் முதல் நாள். இப்புனித நாளில் இயேசு தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவியது, திருநற்கருணையை ஏற்படுத்தியது, மற்றும் அன்புக்கட்டளை அளித்தது என, எல்லாவற்றிலும் இயேசுவின் பேரன்பு மையப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் இயேசுவின் வழி செல்ல நம்மைத் தூண்டுகின்றன. இச்சிந்தனையுடன் இப்புனித முப்பெரும் மூன்று நாள்களைத் தொடங்குவோம்

புனித வியாழன் 

புனித வியாழக்கிழமை என்றவுடனேயே நம் அனைவருக்கும் நினைவில் வருவது, இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவிய அந்தச் சடங்கும், அவர் தம் சீடர்களோடு தமது இறுதி இரவு உணவை உண்டபொழுது அவர் கூறிய “எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” (லூக்.22,19) என்ற வார்த்தைகளுமாகும்.

புனித வியாழக்கிழமை நடைபெறும் மாலைத் திருப்பலி வழிபாடும் நற்கருணைப் பவனியும் திருஅவையினுடைய திருவழிபாட்டில் தவக்காலம் நிறைவுற்று இயேசுவினுடைய உயிர்ப்பைக் கொண்டாட நம்மையே நாம் தயாரிக்கின்ற விதமாக பாஸ்காவுக்கான மூன்று நாள் தயாரிப்புக்கான ஒரு வழிபாடாக அமைகிறது. இந்த மாலைப்பொழுது மனுக்குல வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், இது இஸ்ரயேல் மக்களுடைய விடுதலைக்கானதொரு பயணத்தின் தொடக்கமாகவும், இயேசு தம் பாடுகளை நினைத்து, தம் தந்தையிடமும், தம் அன்புச் சீடர்களிடமும் தனிமையில் மனம்விட்டு உரையாடிய நேரம், அவருடைய விடுதலைப் பணியைத் தொடர்வதற்காக அன்பின் சின்னமாக, அமைதியின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக, பகிர்வின் சின்னமாக, ஒன்றிப்பின் சின்னமாக, மற்றும் ஒற்றுமையின் சின்னமாக இருக்கின்ற நற்கருணையை ஏற்படுத்திய நாள். தம்முடைய பணியைத் தொடரவிருக்கின்ற அந்தச் சீடர்களிடம் “நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13,14) என்று சொல்லி தமது பணியின் அடித்தளமாக இருக்கின்ற பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய நாளாகும்.

பல மொழிகளில் பெரிய வியாழன்

இந்த நாளை நாம் தமிழில் பெரிய வியாழன் என்றும், புனித வியாழன் என்றும் கூறுகின்றோம். இலத்தீன் மொழியில் Feria quinta in Coena Domini அதாவது ஆண்டவரின் இரவு உணவின் வியாழன் என்றும் ஆங்கிலத்தில் Holy Thursday அல்லது Maundy Thursday என்றும் அழைப்பார்கள். இந்த in Coena Domini மற்றும் Maundy Thursday ஆகிய சொல்லாடல்கள் ஆழமானதொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இதை நாம் புறிந்து கொள்கின்றபோது இந்த நாளை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடலாம்.

Maundy Thursday என்ற சொல்லாடலானது இரு வேறு அர்த்தங்களில் ஆனால் ஒரே கருத்தைக் குறிக்கும் வகையில் மிகவும் ஆழமானதொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.

முதல் அர்த்தம், Maundy என்ற ஆங்கில வார்த்தையானது Maundatum என்கின்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதனை நாம் ஆங்கிலத்தில் commandment என்றும் தமிழில் கட்டளை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர்களோடு தம் இறுதி இரவு உணவை உண்ணுகையில், “புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”  (லூக்.13,34) என்று கூறி அன்பினால் கட்டப்பட்ட ஒரு புதிய இறைச் சமூகத்தைக் கட்டியெழுப்ப அழைக்கின்றார்.

மேலும், Maundy என்கின்ற ஆங்கில வார்த்தையானது maundsor baskets என்கின்ற சொல்லாடலிலிருந்து வந்ததாகும். அதாவது இந்த நாளில் இங்கிலாந்து அரசர்கள் சில ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் சிறு நிதி உதவியை இந்த maundsor basket பரிசுப் பையில் வைத்து வழங்குவது வழக்கமாக இருந்துவந்தது. இந்த வார்த்தையானது mendier என்ற பிரெஞ்சு வார்த்தையைக் குறிக்கிறது. அதாவது, Mendicare என்ற இலத்தீன் மொழியிலிருந்து வரும் இந்த வார்த்தையின் அர்த்தம் “பிச்சை கேட்டல்” என்பதாகும். கிறித்தவ பாரம்பரியத்தில் இந்த நாளில் ஏழைகளுக்கு உதவுவது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கி.பி. 597-ல் புனித அகுஸ்தினார் இந்நாளில் ஏழைகளுக்கு பொருளுதவி வழங்கினார் என்ற குறிப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும்கூட நமது சமூகத்தில் பல இடங்களில் குறிப்பாக கிராமங்களில் இந்த நாளில் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் அன்னதானமிடுவதையும் இந்த தவக்காலத்தில் தாங்கள் தங்களுடைய ஒறுத்தல் முயற்சிகளால் சேமித்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவுவதையும் நாம் காண முடியும்.

பாதம் கழுவுதல் சடங்கு

பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் அந்த இறுதி இராவுணவுக் கொண்டாட்டம் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்காமல் ஒன்றை மற்றதோடு தொடர்புபடுத்தியும் ஒப்பிட்டும் பார்க்கின்றபொழுது இந்தக் கொண்டாட்டங்களுடைய முழுமையான அர்த்தங்களை நாம் நன்கு புரிந்துகொள் முடியும் மற்றும் அந்தப் புரிதல், இந்த வழிபாட்டுக் கொண்டாட்டங்களை நம் வாழ்வாக்க உதவும்.

பாதம் கழுவுதல் சடங்கானது காலணி அணிகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்த கிட்டத்தட்ட எல்லா நாகரீகங்களிலுமே விருந்தோம்பலுக்கானதொரு வழக்கமாக இருந்து வந்துள்ளது. யூதச் சமூகத்தில் ஒரு விருந்தினர் வருகின்றபொழுது அவரை வரவேற்கின்ற விதமாக அடிமைவேலை செய்கின்ற ஒரு வேலையாள் அந்த விருந்தினருடைய பாதங்களைக் கழுவுவதும் விருந்தளிப்பவர் விருந்தினருக்கு பருக நீர் தருவதும் வழக்கத்தில் இருந்தது. இதை நாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பல இடங்களில் வாசிக்கலாம். இன்றும்கூட ஒருசில பண்டைய சமூகங்களில் இது வழக்கத்தில் இருக்கலாம். நம் தழிழ் சமூகத்தில் ஒரு விருந்தினர் வந்தவுடன் அவர் முகம் கழுவ தண்ணீர் தந்து அவருடைய களைப்பைப் போக்கும் விதமாக முதலில் ஒரு குவளைத் தண்ணீரையோ அல்லது குளிர் பானங்களையோ தருவதை நாம் இன்றும் கவனிக்கலாம்.

இயேசு, சீடர்களுடைய பாதங்களை ஏன் கழுவினார்?

இன்று நாம் செய்கின்ற பாதம் கழுவுதல் நிகழ்வானது ஒரு சடங்காக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இயேசு எந்த நோக்கத்திற்காக அதைச் செய்தாரோ அந்த நோக்கம் பல நேரங்களில், பல இடங்களில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. எனவே, இயேசு ஏன் தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவினார் என்பதைப் பற்றி இந்நாளில் சிந்திப்போம்.

இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவியதை அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில், அவருடைய சமூக-சமயப் பின்னணியில் ஆராய்ந்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய சமய மற்றும் சமுதாயப் புரட்சியாகும். ஏனெனில் அவருடைய யூதச் சமயமானது மிக மோசமானதொரு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. எவ்வாறு, நம்முடைய இந்தியச் சமூகம் சாதிய அடுக்குநிலைகளைக் கொண்டதொரு சமுதாயமாக இன்றும் இருந்து வருகின்றதோ, அதேபோன்ற அல்லது அதற்கொத்ததொரு Hierarchial system அல்லது Pyramid Structure என்று அழைக்கப்படும் பல அடுக்குநிலைச் சமூகக் கட்டமைப்பை யூத மதம் உருவாக்கியிருந்தது. இந்தக் கட்டமைப்பின் மேலேயிருந்தவர்கள் அவர்களுக்குக் கீழே இருந்தவர்களை அதாவது ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள், அநாதைகள், கைம்பெண்கள், பாவிகள், நோயாளர்கள், மற்றும் குடியேறிகளை அடக்கி ஒடுக்கி அந்த சமூக-சமய கட்டமைப்பு தருகின்ற சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்தார்கள் என்பதை, பல இடங்களில் விவிலியம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இதையே யூதர்களுடைய வரலாற்றை எழுதிய Titus Flavius Josephus என்ற வரலாற்று ஆசிரியரும் குறிப்பிடுகின்றார். 

ஆக, இத்தகையதொரு சமூக-சமயப் பின்னணியிலிருந்து வந்த அவருடைய சீடர்களும் அதே மனப்பான்மையைக் கொண்டிருந்தார்கள். இதையே திருத்தூதர்களுடைய காலத்து கிறிஸ்தவர்களுக்கிடையே இருந்த யார் பெரியவர் என்ற விவாதங்களிலிந்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். நற்செய்தியாளர் யோவான் பாதம் கழுவுகின்ற சடங்கை தன்னுடைய நற்செய்தியில் சுட்டிக்காட்டியதற்கான அடிப்படை நோக்கம் கிறிஸ்தவர்களிடையே அத்தகைய மனப்பான்மை இருக்கக்கூடாது என்பதாகும்.

திருச்சபை என்னும் சமத்துவ-சமுதாயம் அமைக்க விரும்பிய இயேசு அவருக்குப் பிறகு அந்தக் குழுமத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தவிருக்கின்ற அவருடைய சீடர்களிடமிருந்து இந்த ஆண்டான்-அடிமை, ஆண்-பெண் மற்றும் ஏழை-பணக்காரன் என்கின்ற வேறுபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று விரும்பியே அதற்கு ஒரு முன்மாதிரியாக தானே தம்முடைய சீடர்களுடைய பாதங்களைக் கழுவுகிறார். இங்கு, இயேசு ரபி என்று அழைக்கப்படும் யூத மதக்குரு என்பதையும், யூத மத குரு இத்தகைய செயலைச் செய்யக்கூடாது என்பது யூதமத மரபு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமத்துவ-சமூகமான திருச்சபையின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்துகிறார், அந்தக் குழுமத்தின் வழிகாட்டிகளாக இருந்து “நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா.13,14)” என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை ஏற்று, அந்த அன்புச் செயலை ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டாடி திருச்சபை என்னும் அன்பியக் குழுமங்களை உலகெங்கும் ஏற்படுத்த பணிக் குருத்துவத்தை இந்நாளில் ஏற்படுத்துகின்றார்.

கொண்டாட்டங்கள் தரும் செய்தி

இயேசு அவருடைய சீடர்களுள் ஒருவரான பேதுருவுடைய பாதங்களைக் கழுவச் சென்றபொழுது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" (யோவா 13:6) என்றதொரு கேள்வியை இயேசுவின்முன் வைத்து இயேசுவினுடைய சமத்துவ-சமூகத் திட்டத்சிற்கு எதிராக நிற்கின்றார். ஆனால் இயேசு, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" (யோவா.13:8) என்று சொல்லி அவருடைய பாதங்களைக் கழுவுகின்றார். இவ்வாறு, அவர்களிடமிருந்த ஆதிக்கத்திமிரை பணிவினால் அடக்கி, அடுக்குமுறைச் சமூகக் கட்டமைப்பைக் கேள்விக்கு உட்படுத்தி, அதை உடைத்தெறிந்து, கீழே இருப்பவர்களை மேலே கொண்டுவந்து “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக் 4, 18-19) என்று, அவர் முன்பே முழக்கமிட்ட இறையரசுக் கனவை நிறைவேற்றுகின்றார்.

நாம் ஒவ்வொருவரும் பெற்றோர்கள், சமூக-சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் சிந்தனையாளர்கள் என்கின்ற வகையில் இந்தச் சமுதாயத்தின் எதிர்காலச் சந்ததிகளை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம். வரலாற்றின் பல காலக்கட்டங்களில், நம்மில் பலர் பேதுருவைப் போன்றே பழமைவாதம் பேசிக்கொண்டு இயேசுவின் சமத்துவ சமுதாயத்தைக் கட்ட விரும்பும் இறையரசுப் பணியில் தடைக்கல்லாக நிற்கின்றோம். அதன் வெளிப்பாடே இன்றும் நம்மிடையே இனப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, சமயப் பாகுபாடு, சமுதாயத் தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, இரட்டை கல்லரை, இரட்டைக் கோவில், ஊர்ப் பாதுகாவலரின் ஆண்டுத் திருவிழாவில் சிலருக்கு உரிமை மறுப்பு, இன்றும் சில ஊர்களில் தலித் மக்கள் வாழும் தெருக்களில் சப்பரம் செல்லத் தடை மற்றும் ஆலய நிர்வாகப் பொறுப்புக்களில் விகிதாச்சார முரண் போன்ற, நவீனத் தீண்டாமையின் வடிவங்கள், எல்லா மதங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றன. கிறித்தவமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இத்தகைய தனி மனித உரிமை மறுப்பு மற்றும் சமூகக் குற்றங்களை நீக்கி இயேசு விரும்பிய சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் பணியில் நமது இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய ஒரு சிறிய முயற்சியே 2013-ஆம் ஆண்டு அவர் இந்த பாதம் கழுவும் சடங்கு முறையினுடைய விதிமுறைகளில் கொண்டுவந்த புரட்சிகரமான மாற்றங்கள். அதன் விழைவாக அந்த ஆண்டு நடந்த பாதம் கழுவும் சடங்கில் திருத்தந்தை அவர்கள் திருச்சபையின் இரண்டாயிரமாண்டு வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பெண்களுடைய மற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுடைய பாதங்களைக் கழுவி சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்தவர்களை மையத்திற்குக் கொண்டுவந்து அவர்களுடைய மனித மாண்பைக் காத்து, அதையே அனைத்து ஆயர்களும் பங்குக் குருக்களும் பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

எனவே, ஒருவருடைய பாதங்களைக் கழுவுதல் என்பது ஓர் அடையாளமாகும். அதையும் கடந்து, தன் சீடர்களுடைய கால்களைத் தொட்டுக் கழுவும் செயலை முதன்மைப்படுத்துவதன்மூலம், இந்தப் பாதம் கழுவும் சடங்கின் வழியாக இயேசு மனித உடலையும், அதைத் தொடும் செயலையும் திருவருட்சாதனத்தின் அடையாளங்களாக மாற்றுகின்றார்.

ஆகவே, இந்த பெரிய வியாழக்கிழமையினுடைய வழிபாடானது ஆலயத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கு என்பதோடு நின்றுவிடாமல் அதன் தொடர்ச்சியாக, “நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்”  (யோவா.13,14) என்று இயேசு சொன்னவாறு, ஆலயத்திலிருந்து நம் இல்லம் திரும்பியபின் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவுவோம். அதாவது பெற்றோர்-பிள்ளைகள், மாமன்-மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, மற்றும் சகோதரர்-சகோதரிகள் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவுகின்றபொழுது உண்மையில் இந்த நாளும் இன்றைய வழிபாடும் நம் வாழ்வில் அர்த்தம் பெறும். ஏனெனில்… ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழன்தான், ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுதான்…! (அருட்பணி அமல்ராஜ், மஊச)

இப்புனித நாள்களில் இயேசுவின் திருப்பாடுகளில் பங்கு கொண்டு அவற்றின் பலன்களைப் பெறுவோம். அன்புக்காக நம்மையே வெறுமையாக்கும் வரமருளுமாறு இயேசுவிடம் மன்றாடுவோம். இப்புனித நாள்களில் நம் ஆண்டவரின் ஆசிர்வாதங்கள் நம் எல்லார் மீதும் நிரம்பியிருப்பதாக. 

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி
18 April 2019, 10:20