தேடுதல்

தூய பேதுரு பசிலிக்காவின் ஒரு பகுதி தூய பேதுரு பசிலிக்காவின் ஒரு பகுதி 

சாம்பலில் பூத்த சரித்திரம்: மேற்குலக பெரும் பிரிவினை

1378ம் ஆண்டிற்கும், 1417ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், போட்டி திருத்தந்தையரால், பாப்பிறை தலைமைத்துவத்தின் புகழுக்கு இழுக்கு நேரிட்டது என்பது கசப்பான உண்மை.

மேரி தெரேசா : வத்திக்கான்

மேற்குலக பெரும் பிரிவினை என்பது, 1378ம் ஆண்டிற்கும், 1417ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் ஏற்பட்ட பிரவினையாகும். இது, பாப்பிறை தலைமைத்துவம் சார்ந்த பிரிவினை, மாபெரும் மேற்குலக பிரிவினை அல்லது 1378ம் ஆண்டின் பிரிவினை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தப் பிரவினை இடம்பெற்ற காலக்கட்டத்தில், ஒரே நேரத்தில், இரு திருத்தந்தையர், 1410ம் ஆண்டிலிருந்து மூன்று திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவரும், தான் தான் உண்மையான திருத்தந்தை என அறிவித்து, ஒருவர் ஒருவரை திருஅவைக்குப் புறம்பாக்கி வந்தனர். இச்செயல், எந்தவித இறையியல் முரண்பாட்டினால் நடைபெற்றதல்ல, மாறாக, முற்றிலும் அரசியல் நோக்குடையது. இப்பிரிவினை, 1414ம் ஆண்டுக்கும், 1418ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற Constance பொதுச்சங்கத்தால் முடிவுக்கு வந்தது. அப்பிரிவினை சமயத்தில் இந்தப் போட்டி திருத்தந்தையரால், பாப்பிறை தலைமைத்துவத்தின் புகழுக்கு இழுக்கு நேரிட்டது என்பது கசப்பான உண்மை.

மேற்குலக பெரும் பிரிவினை தொடங்கிய 1378ம் ஆண்டிற்கு, ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குமுன், 1309ம் ஆண்டில், திருத்தந்தை 5ம் கிளமென்ட் அவர்கள், திருத்தந்தையரின் தலைமைத்துவ அலுவலகத்தை அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றினார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள இந்நகரம், அச்சமயத்தில், இத்தாலியின் சிசிலி அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. ஒரு முன்னணி வரலாற்று ஆசிரியரின் குறிப்புப்படி, அவிஞ்ஞோனில் இருந்து திருஅவையை வழிநடத்திய ஏழு திருத்தந்தையரும் பிரான்ஸ் நாட்டவர்கள். இந்தக் காலக்கட்டத்தை, விவிலியத்தில் இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த “பபிலோனிய சிறைப்பிடிப்பு” என, உரோமன் கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஏழு திருத்தந்தையருள், ஏழாவதும் கடைசியுமாக ஆட்சிசெய்த திருத்தந்தை 11ம் கிரகரி அவர்கள், 1377ம் ஆண்டு சனவரி 17ம் தேதி உரோம் நகருக்குத் திரும்பி, திருத்தந்தையரின் தலைமைத்துவ அலுவலகத்தை, மீண்டும் உரோம் நகரில் அமைத்தார். இவர் 1378ம் ஆண்டு மார்ச் 27ம் நாளன்று காலமானார்.

திருத்தந்தை 6ம் உர்பான்

பிரெஞ்ச் திருத்தந்தை 11ம் கிரகரி அவர்கள் காலமானதற்குப் பின்னர், ஓர் இத்தாலியர்தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அப்போதுதான் அவர் உரோமையில் தங்குவார் என, சில கர்தினால்களும், அருள்பணியாளர்களும், பிரபுக்களும் விரும்பினர். இதனால், அவர்கள், அவ்வாண்டு ஏப்ரல் 4ம் தேதி, உரோம் நகரில் 16 கர்தினால்கள்கூடி, மிகவும் நன்கு மதிக்கப்பட்ட, சிறந்த கல்வியைப் பெற்றிருந்த, ஒரு முன்னணி இத்தாலிய ஆயரைத் தேர்ந்தெடுத்தனர். அச்சமயத்தில் கர்தினால்கள் கூடியிருந்த இடத்தை இத்தாலியர்கள் சூழ்ந்துகொண்டு, பெரும் சப்தத்துடன் ஆரவாரித்து வரவேற்றனர். அதனால் அன்று மாலையே கர்தினால்கள் மீண்டும் கூடி, தங்களது தேர்வை உறுதி செய்தனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரே திருத்தந்தை 6ம் உர்பான். எனினும், விரைவில் கர்தினால்கள் இவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் வருந்தினர். ஏனெனில், திருத்தந்தை 6ம் உர்பான் அவர்களின் சீர்திருத்த மனநிலையைப் போல், எல்லா கர்தினால்களும் கொண்டிராததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆயினும்,  திருத்தந்தை 6ம் உர்பான் அவர்கள், பிடிவாதமுடையவராய், முன்கோபக்காரராய், ஆணவமிக்கவராய் தன்னைக் காண்பித்தார். திருஅவையின் உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகையில், அவர்களை அவமதிக்கும் முறையில் நடந்துகொண்டார். இதனால் கர்தினால்கள் அவருக்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்தத் தொடங்கினர். சில மாதங்கள் சென்று, கர்தினால்கள் வேறொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடினர். உரோம் மக்களின் நச்சரிப்புகளால் திருத்தந்தை 6ம் உர்பான் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம், எனவே இத்தேர்தல் செல்லாது என கர்தினால்கள் அறிவித்தனர் என குறிப்புகள் கூறுகின்றன.  

திருத்தந்தை 7ம் கிளமென்ட்

அச்சமயத்தில், உரோம் நகர் மிகவும் வெப்பமாக இருந்ததால், கர்தினால்கள் மிகக் குறுகியகாலக் கட்டத்தில் கூட்டத்தை நடத்தி,  திருத்தந்தை 6ம் உர்பான் அவர்களை, எதிர்க் கிறிஸ்து என்று சொல்லி, அவர் தனது தலைமைப் பதவியைவிட்டு விலகுமாறு வற்புறுத்தினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். எனவே, வேறொரு திருத்தந்தையைத் தேர்ந்தேடுக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு எனச் சொல்லி, பாப்பிறை தலைமைத்துவம் காலியாக இருக்கின்றது எனவும் கர்தினால்கள் அறிவித்தனர். பின்னர், செப்டம்பர் 20ம் தேதி, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களை கர்தினால்கள் தேர்ந்தெடுத்தனர். இவர் பிரெஞ்ச் நாட்டவரானதால் அவிஞ்ஞோனுக்கு பாப்பிறையின் அலுவலகத்தை மாற்றுவதே சரி எனக் கண்டார். இதனால் உரோமன் கத்தோலிக்க ஐரோப்பாவில் இரு பிரிவினைகள் உண்டாயின. திருத்தந்தை உர்பான் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஐரோப்பாவில் இடம்பெற்றதுபோன்று, முன்னணி புனிதர்கள், இறையியலாளர்கள், இவர்களில் சிலர் திருத்தந்தை உர்பான் அவர்களுக்கும், வேறு சிலர்  திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பினர். இத்தகைய நடவடிக்கையே, மாபெரும் மேற்குலக பிரிவினைக்குக் காரணமானது.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2019, 13:19