தேடுதல்

Vatican News
இடாய் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும் குழுவினர் இடாய் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும் குழுவினர்  (ANSA)

புயலால் பாதிக்கபட்ட ஆப்ரிக்க நாடுகளில் திருஅவையின் பணி

மொசாம்பிக் நாட்டின் பெய்ரா நகரில் 90 விழுக்காடு வீடுகள் அழிவுக்குள்ளாகி, தங்க இடமின்றி வாழும் மக்கள், மலேரியா, மற்றும், காலரா நோய்களுக்கு பலியாகும் ஆபத்து உள்ளது - தலத்திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மை புயலாலும் பெருமழையாலும் பாதிக்கபட்ட தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும், மொசாம்பிக் நாடுகளில் உடனடி துயர்துடைப்பு உதவிகளை தலத்திருஅவை வழங்கி வருவதாக அறிவித்தார், அப்பகுதியில் பணியாற்றும் அருள்பணி கிளவ்தியோ சுக்காலா.

இம்மூன்று நாடுகளிலும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, அவசர உதவி மையங்களில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடைக்கலம் தேடியுள்ள நிலையில், திருஅவையின் பணிகள் இம்மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுச் செய்வதாக உள்ளன என்றார் அருள்பணி சுக்காலா.

மொசாம்பிக் நாட்டின் பெய்ரா நகரில் 90 விழுக்காடு வீடுகள் அழிவுக்குள்ளாகி, கூரையின்றி இருப்பதால், தங்க இடமின்றி வாழும் மக்கள், மலேரியா, மற்றும், காலரா நோய்களுக்கு பலியாகும் ஆபத்து உள்ளது என உரைத்த, மொசாம்பிக்கில் பணியாற்றும் அருள்பணி சுக்காலா அவர்கள், அந்நாடுகளின் சார்பில், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களின் தாராள மனத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த மூன்று நாடுகளிலும் வீசிய கடும்புயலாலும், ஆறுகள் நிரம்பி வழிவதாலும், மின்சாரக் கம்பங்கள் சாய்ந்தும், சாலைகள் பழுதுபட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார், அருள்பணி சுக்காலா.

02 April 2019, 16:08