தேடுதல்

நெகோம்போ புனித அந்தோனியார் ஆலயம் நெகோம்போ புனித அந்தோனியார் ஆலயம் 

இலங்கையின் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம்

இலங்கையில் தாக்குதல்கள் குறித்து இத்தாலிய மக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாக இத்தாலிய அரசுத் தலைவர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உயிர்ப்புப் பெருவிழாவன்று இலங்கையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களில் பலியானவர்கள் குறித்து ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்டனங்களை வெளியிடும் செய்திகள், உலகம் முழுவதிலுமிருந்து, அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 290 பேரின் உயிரிழப்புக்கும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைதலுக்கும் காரணமான இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்கள், இலங்கை அரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள செய்தியில், இத்தாக்குதல்கள் குறித்து இத்தாலிய மக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

எட்டு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுள் கொழும்பு நகரின் பிரபலமான புனித அந்தோனியார் திருத்தலத்திலும், நெகொம்போவின் கட்டுவபிட்டியா புனித செபஸ்தியார் கோவிலிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித் அவர்கள் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருக்க, இத்தாலியின் சான் எஜிதியோ அமைப்பு, The Church in Need என்ற உதவி அமைப்பு, புனித பூமியின் கத்தோலிக்க அமைப்பு, WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, ஹங்கேரி ஆயர் பேரவை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை ஆகியவைகளும் தனித்தனியாக இலங்கைக்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டு செய்திகளை அனுப்பியுள்ளன.

2013ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் ஏறத்தாழ 2 கோடியே 20 இலட்சம் மக்களுள் 70 விழுக்காட்டினர் புத்த மதத்தினர், 12.6 விழுக்காட்டினர் இந்துக்கள், 9.7 விழுக்காட்டினர் இஸ்லாமியர், மற்றும், 7.6 விழுக்காட்டினர் கிறஸ்தவர் ஆவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 15:52