2019.04.24 Scisma occidentale nell'Europa cristiana 2019.04.24 Scisma occidentale nell'Europa cristiana 

சாம்பலில் பூத்த சரித்திரம்: மேற்குலக பெரும் பிரிவினையின் முடிவு

Constance பொதுச்சங்கம், 1417ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புனித மார்ட்டின் திருநாளன்று, ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. இவரே திருத்தந்தை 5ம் மார்ட்டின். இதோடு, கத்தோலிக்கத் திருஅவையில் நிலவிய, நாற்பதுக்கும் அதிகமான ஆண்டுகாலப் பிரிவினை முற்றிலும் (1378-1417) முடிவுற்றது

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தையரின் தலைமைத்துவ அலுவலகம், பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோன் நகரில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் இருந்த பின்னர், அதனை, 1377ம் ஆண்டு சனவரி 17ம் தேதி உரோம் நகருக்கு மாற்றினார், திருத்தந்தை 11ம் கிரகரி. இவர் 1378ம் ஆண்டு மார்ச் 27ம் நாளன்று காலமானார். அவருக்குப் பின்னர், கர்தினால்கள், திருத்தந்தை 6ம் உர்பான் அவர்களை, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இத்திருத்தந்தையின் தலைமைத்துவ பணியில், விரைவிலேயே அதிருப்தி அடைந்த கர்தினால்கள், அவரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் அதற்கு இணங்க மறுக்கவே, அத்திருத்தந்தை பதவியில் இருக்கும்போதே, அதே ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர் பிரெஞ்ச் நாட்டவரானதால், பாப்பிறையின் அலுவலகத்தை அவிஞ்ஞோனுக்கு மாற்றினார். இந்நிகழ்வு, உரோமன் கத்தோலிக்க ஐரோப்பாவில் இரு பிரிவினைகள் உண்டாயின. ஏனெனில் இவ்விரு திருத்தந்தையருக்கும் ஆதரவளித்த கத்தோலிக்கர் மத்தியில் பிரவினைகள் ஏற்பட்டன. 

இந்நிலை குறித்து ஒரு வரலாற்று ஆசிரியர் இவ்வாறு விவரிக்கின்றார். கத்தோலிக்கரின் ஆதரவுகளை நன்கு பெற்ற இவ்விரு திருத்தந்தையரும், தாங்களே நீதிமன்றங்களை அமைத்து, கிறிஸ்தவ உலகில் தங்களுக்கிருக்கும் பற்றுறுதியை வலியுறுத்தினர் திருத்தந்தையர் மரபின் முழு அதிகாரமும் தங்களிடம் உள்ளது என, இவ்விருவரும்   கூறி வந்தனர். இந்நிலை, கிறிஸ்தவ உலகில் நீண்ட காலத்திற்கு பிரவினையை ஏற்படுத்தி, விசுவாசிகளுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. அக்காலத்திய பாப்பிறை நீதிமன்றம் குறித்து, பாப்பிறை செயலர் ஒருவர் இவ்வாறு தெரிவிக்கிறார். அந்நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும், அரண்மனைகள், நிலங்கள், நகரங்கள், அனைத்து விதமான போர்க் கருவிகள், பணம் ஆகியவை பற்றியே பேசப்படும், தூய்மை, தர்மம் செய்தல், நீதி, விசுவாசம், தூய வாழ்வு ஆகியவை பற்றிப் பேசுவதை அரிதாகவே கேட்க முடியும். எனவே, ஆன்மீகத் தலைமையகமாக இருந்த நீதிமன்றம், மிகவும் உலகப்போக்கு நிறைந்ததாய், வெறுக்கத்தக்க, கொடுங்கோல் தலைமையகமாக மாறியது. ஏனைய பொது நீதிமன்றங்களைவிட மிக மோசமானதாகச் செயல்பட்டது. இந்நிலையை, கத்தோலிக்கத் திருஅவையில் இருந்த நேர்மையான மனிதர்கள், அவமானமாகக் கருதினர்.

நேர்மையான கத்தோலிக்கர்

நேர்மையான கத்தோலிக்கரில் ஒருவர் சொன்னார் : திருஅவையின் அமைதிக்காக இவ்விரு திருத்தந்தையருள் ஒருவருக்குக்கூட தனது பதவியை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை என்று. மற்றொருவர் சொன்னார் : ஒரு திருத்தந்தை அடுத்த திருத்தந்தையை திருஅவைக்குப் புறம்பாக்கினார். மற்றவரோ, அதிலிருந்து தான் விடுதலை பெறுவதாக அறிவித்தார். ஒருவர், நீதியுடன் அடுத்தவரைக் கண்டித்தார், அடுத்தவரோ, அநீதியாகத் தன்னை நியாயப்படுத்தினார். எனவே, நீதி காயமுற்றது.  திருஅவையின் சாவிகள், மதிப்பிழந்தன. தூய பேதுருவின் வாள் தனது வல்லமையை இழந்தது என்று. இன்னொரு முன்னணி கத்தோலிக்க வல்லுனர் சொன்னார் : “இரு தலைவர்கள் ஒரே கப்பலில் அரண் அமைத்து செயல்படுவதுபோன்று இத்திருத்தந்தையர் இருந்தனர். இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை பொதுச் சங்கத்தைக் கூட்டியது” என்று. இச்சூழலில், நான்கு திருத்தந்தையர், உரோம் நகரிலும், அவிஞ்ஞோனிலும் இருந்துகொண்டு, உரோமன் கத்தோலிக்கத் திருஅவையை ஆட்சி செய்து வந்துள்ளனர். பின்னர் ஒரு பொதுச்சங்கத்தின் முடிவில், இரு திருத்தந்தையர் ஆட்சி செய்தனர்.

Constance பொதுச்சங்கம்

திருத்தந்தையர் குறித்த இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, தொடர்ந்து பிரான்சிலும், ஏனைய இடங்களிலும், பொதுச் சங்கங்கள் நடைபெற்றன. ஆனால் எல்லாம் தோல்வியே முடிந்தன. தீர்வுக்குப் பதில், தீமையே தொடர்ந்தது. 1409ம் ஆண்டில்,  இத்தாலியின் Pisa நகரில், ஒரு பெரிய பொதுச் சங்கம் நடைபெற்றது. அதில் இவ்விரு திருத்தந்தையரையும் நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர்கள், இந்த தீர்மானத்தை ஏற்காததால், அப்பொதுச்சங்கம், மூன்றாவது திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தது. பல கருத்தரங்குகள், விவாதங்கள், சில நேரங்களில் வன்முறை விவாதங்கள், அரசர்களின் தலையீடுகள் என எல்லாவிதமான பேரிடர்களும் இடம்பெற்றன. பின்னர், மூன்றாவது, எதிர்த் திருத்தந்தையாகப் பணியாற்றிய 23ம் ஜான் அவர்கள் (இவர் 20ம் நூற்றாண்டு புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் அல்ல) ஜெர்மனியின், Constance நகரில், 1414ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இந்தப் பொதுச்சங்கத் தீர்மானத்தைச் சிதறடிக்கலாம் என்ற எண்ணத்தில், இத்திருத்தந்தை, 1,600 குதிரைகளுடன் வந்தார். அப்பொதுச்சங்கம், 1418ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெற்றது. அதில், அச்சமயத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மனி அரசர் Sigismund அவர்களும், கலந்துகொண்டார். அவர், ஆயிரம் குதிரைகளுடன் அங்கு வந்தார். அரசர் Sigismund, பின்னாளில் புனித உரோமைப் பேரரசராக ஆட்சிசெய்தார். Constance பொதுச்சங்கம், எதிர்த்திருத்தந்தையின் பல்வேறு தவறான செயல்கள், அறநெறிக்குப் புறம்பான நடவடிக்கைகள் போன்றவற்றைச் சொல்லி அவரைப் பதவியிலிருந்து இறக்கியது. இறுதியில், புதிய திருத்தந்தையாக, உரோமையில் வாழ்ந்த, திருத்தந்தை 12ம் கிரகரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகவும் பலவீனமாக இருந்ததால், இதனைத் துறந்தார். இரண்டு ஆண்டுகள் சென்று, 1417ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புனித மார்ட்டின் திருநாளன்று பொதுச்சங்கம், ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. இவரே திருத்தந்தை 5ம் மார்ட்டின். இதோடு, கத்தோலிக்கத் திருஅவையில் நிலவிய, நாற்பதுக்கும் அதிகமான ஆண்டுகாலப் பிரிவினை முற்றிலும் (1378-1417) முடிவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2019, 13:50