அமெரிக்க எல்லை வேலி அருகே ஒரு மத்திய அமெரிக்க பெண் குழந்தை அமெரிக்க எல்லை வேலி அருகே ஒரு மத்திய அமெரிக்க பெண் குழந்தை 

அமெரிக்க அரசுத்தலைவரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது

மத்திய அமெரிக்க நாடுகளில் வாழும் வறியோரின் வாழ்வை மேலும் சீர்குலைக்கும் வகையில், நிதி உதவியை நிறுத்துவது, புலம்பெயர்தல் என்ற பிரச்சனைக்கு, எவ்வகையிலும் தீர்வு ஆகாது – அமெரிக்க கர்தினால் டோபின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய அமெரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் நிதி உதவியை நிறுத்தப்போவதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் அறிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும்  தந்துள்ளது என்று, அமெரிக்காவின் கர்தினால் வில்லியம் டோபின் அவர்கள் கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் புகும் மக்களின் வருகையைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சி என்று கூறி, அமெரிக்க அரசுத்தலைவர், மத்திய அமெரிக்க நாடுகளான கவுத்தமாலா, ஹொண்டூராஸ் மற்றும் எல் சால்வதோர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

நல்லதொரு எதிர்காலத்தைத் தேடி அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் மக்கள் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அமெரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை, அநீதி ஆகிய கொடுமைளே என்று சுட்டிக்காட்டிய கர்தினால் டோபின் அவர்கள், அந்நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி, இந்த அநீதிகளைக் களைவதற்கு, பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்வதே முக்கியம் என்று கூறினார்.

இந்த நிதி உதவிகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு, இத்தீமைகள் அந்நாடுகளில் தீர்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு உதவி செய்வதை விடுத்து, வறியோரின் வாழ்வை மேலும் சீர்குலைக்கும் வகையில், நிதி உதவியை நிறுத்துவது, புலம் பெயர்தல் என்ற பிரச்சனைக்கு, எவ்வகையிலும் தீர்வு ஆகாது என்று கர்தினால் டோபின் அவர்கள் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிதி உதவிகள் எந்த அளவு நிறுத்தப்படும் என்பது குறித்து ஒருவித தகவலும் வெளியாகாத நிலையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிதித்துறை 45 கோடி டாலர்கள் நிதி உதவி நிறுத்தப்படும் என்று கணித்துள்ளது என, ஃபீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2019, 16:11