தேடுதல்

Vatican News
விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனப் போராட்டம் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனப் போராட்டம்  (AFP or licensors)

ஆலயப்பணியாளர் உட்பட 14 விவசாயிகள் கொலை

பிலிப்பீன்ஸ் காவல்துறையினர் 14 விவசாயிகளைக் கொன்றுள்ளது குறித்து முழு விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தலத்திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று, மூன்று வெவ்வேறு இடங்களில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, 14 விவசாயிகளைக் கொன்றுள்ளது குறித்து, முழு விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, தலத்திருஅவை.

Canlaon நகரில்  எட்டு பேர் உள்பட, 14 பேர் கொல்லப்பட்டுள்ளது குறித்து, தன் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்ட San Carlos ஆயர் Gerardo Alminaza அவர்கள், மறைமாவட்ட மறைப்பணி இல்லத்தில் வாழ்ந்து வந்த ஒருவரும் கொல்லப்பட்டதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே கொல்லப்பட்டனர் என காவல்துறை நியாயப்படுத்தினாலும், கொல்லப்பட்டவர்களுள் ஒருவர், ஆலயப் பணியாளர் எனவும், அவரின் நன்னடத்தை குறித்து மறைமாவட்டம் சாட்சி வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார் ஆயர்.

கைது செய்வதற்கான எவ்வித எழுத்துப்பூர்வ உத்தரவும் இன்றி செயல்பட்டுள்ள காவல்துறையின் இப்போக்கு, நாட்டில் சட்டம் ஒழுங்கு செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது எனவும் கூறிய ஆயர் Alminaza அவர்கள், இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று முழு உண்மைகளும் வெளிக் கொணரப்பட வேண்டும் என்றார்.

உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளின் தலைவர்களையும் கிராமத் தலைவர்களையும், கம்யூனிச கெரில்லாக்கள் என குற்றம்சாட்டி திட்டமிட்டு காவல்துறை கொலை செய்துள்ளதாக, Canlaon  பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (UCAN)

01 April 2019, 16:12