தேடுதல்

அசிசி புனித பிரான்சிஸ், எகிப்து சுல்தான் Malik-al-Kamil சந்திப்பு அசிசி புனித பிரான்சிஸ், எகிப்து சுல்தான் Malik-al-Kamil சந்திப்பு 

வாரம் ஓர் அலசல் – பொறுப்பிலுள்ளோர் தங்கள் கடமையை உணர...

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும், நான்கு போர்கள் நடத்தியும், இன்னும் ஒரு பிரச்சனைக்குக்கூட தீர்வு காணவில்லை. எனவே, போர்கள், பிரச்சனைக்குத் தீர்வை வழங்காது

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களைக் கைது செய்ய ஆங்கில ஆட்சி கட்டளை பிறப்பித்திருந்தது. அச்சமயம், பாரதியார் எட்டையபுரத்திலேயே பாதுகாப்பாக இருந்தார். அப்போது, அவ்வூருக்கு வந்த அவரது நண்பர் ஒருவர், பாரதியாரிடம், "ஒரு மகிழ்ச்சியான செய்தி, உம்மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட் இரத்து செய்யப்பட்டுவிட்டது. இனி, நீர் சுதந்திரமாக இருக்கலாம். நான் சென்னைக்குப் போகிறேன். நீரும் என்னுடன் வரலாம்'' என்று சொன்னார். பாரதியாரும் அவரோடு கிளம்பிவிட்டார். வழக்கமாக, தன் மனைவி செல்லம்மா அவர்களிடம் சொல்லிவிட்டுப் போகிறவர், அன்று சொல்லாமல் கிளம்பிவிட்டார் பாரதியார். கணவரைக் காணாமல் தவித்தார் செல்லம்மா. அப்போது, ஒரு கார் அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றது. அதிலிருந்து, பாரதியாரும், வழக்கறிஞர் ஒருவரும் இறங்கினர். வழக்கறிஞர், செல்லம்மா அவர்களிடம், "அம்மா! காலையில், பாரதியின் நண்பன் அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தான். நான் வழியில் அவர்களைப் பார்த்தேன். தன்மீது வாரண்ட் இரத்து செய்யப்பட்டதால், சென்னை செல்வதாகக் கூறினார் பாரதி. நான் அதிர்ந்து போனேன். அரசாணை இரத்தாகவில்லையே! யார் சொன்னது? என்றேன். அப்போது பாரதி, அந்த நண்பனை நோக்கி கையை நீட்டினார். உம்மை, அவன் நன்றாக ஏமாற்றிவிட்டான். நீர் சென்னை சென்றால் சிறைக்குத்தான் போவீர், வாரண்ட் அமலில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்து வந்தேன்'' என்று நடந்த கதையை மூச்சுவிடாமல் சொன்னார். மறுநாள், அந்த நண்பர், பாரதியார் வீட்டிற்கு வந்தார். செல்லம்மா அவர்கள், அந்த நண்பரை, சிவந்த விழிகளால் பார்த்தார். தன் மனைவியைக் கையமர்த்திய பாரதியார், "புகை நடுவினில் தீ இருப்பதைக் புவியினில் கண்டோம்! பகைவனுக்கருள்வாய் நெஞ்சே!'' என்று பாடினார். அந்த நண்பர் தடாலென பாரதியாரின் காலில் விழுந்து கண்ணீர் வடித்தார்.

பொதுவாக ஒருவர் நமக்குத் தீமை செய்துவிட்டால், மனம் குமுறுகிறது. பதிலுக்கு என்ன செய்யலாம் எனவும் மனம் துடிக்கின்றது. ஆனால், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டு, பாரதியார் போன்று, பகைவர்களை மன்னிக்கும் குணத்தைப் பெறுவோம். அது, பல பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். தனக்கு சிலுவை மரணத் தீர்ப்பளித்தவர்களை மன்னித்த இயேசு கிறிஸ்து, உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்றுதான் சொன்னார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், மன்னிப்பு

இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், 1219ம் ஆண்டில், இயேசு காட்டிய வழியில், அற்புதமான, அனைவரையும் வியக்கவைத்த ஒரு காரியத்தைச் செய்தார். 11,12,13 மற்றும் 14ம் நூற்றாண்டுகளில், புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்பதற்காக, புனித உரோமைப் பேரரசு, சிலுவைப்போர்களை நடத்தியது. புனித பிரான்சிஸ் அவர்கள் வாழ்ந்த 12ம், 13ம் நூற்றாண்டுகளில், கிறிஸ்தவ ஐரோப்பிய பேரரசு, போர்க் கலாச்சாரத்தில் சிக்கியிருந்தது. பேரரசுக்குள்ளேயே, ஒரு நகரம் அடுத்த நகரத்தோடு போரிட்டுக்கொண்டிருந்தது. அதோடு, ஐரோப்பிய கிறிஸ்தவப் பேரரசு, முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் தப்பறைக் கொள்கையாளர்களுக்கு எதிராகவும் போர்களில் ஈடுபட்டு வந்தது. 13ம் நூற்றாண்டில், ஐந்தாவது சிலுவைப்போர் நடந்த சமயத்தில், 1219ம் ஆண்டில், போர் மற்றும் பகைமை கலாச்சாரத்தை நேரிடையாக எதிர்த்து, வியப்புக்குரிய ஒரு பயணத்தை மேற்கொண்டார் புனித பிரான்சிஸ். அவர் காலத்து கிறிஸ்தவர்கள், சிலுவைப்போர்களை, புனிதமாக நோக்கினர். ஆனால் இந்த நிலை, கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணாக இருந்ததைக் கண்டார் புனித பிரான்சிஸ். அதேநேரம், எகிப்து சுல்தான் அவர்கள், கிறிஸ்தவர்களின் தலைகளைக் கொய்துகொண்டு வருகின்றவர்களுக்கு, பைசான்டைன் தங்க நாணயம் வழங்கி மதிக்கப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தார். எனவே, புனித பிரான்சிஸ் அவர்கள், சிலுவைப்போர்களின் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தனது சபைத் தலைவர்களுடன் முதலில் கூட்டம் நடத்தினார். பின்னர், திருத்தந்தையின் பிரதிநிதியாக, ஐந்தாவது சிலுவைப்போரை வழிநடத்திய, கர்தினால் பெலாஜியுஸ் அவர்களைச் சந்தித்து, போரை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டார். ஆனால் கர்தினால் பெலாஜியுஸ் அவர்கள் மறுத்துவிட்டார்.

புனித பிரான்சிஸ், எகிப்து சுல்தான் Malik-al-Kamil

அதற்குப் பின்னர், புனித பிரான்சிஸ் அவர்கள், Illuminatus என்ற தன் சபை அருள்சகோதரரை அழைத்துக்கொண்டு ஆயுதங்கள் ஏதுமின்றி, தனது பகைவர் மீது முழு அன்பு கொண்டு, Saladin அவர்களின் மருமகனான எகிப்து நாட்டு சுல்தான் Malik-al-Kamil அவர்களைச் சந்திக்கச் சென்றார். சுல்தான் அவர்களின் இராணுவத்தினர், புனித பிரான்சிஸ் அவர்களையும், Illuminatus அவர்களையும் கைது செய்து, சுல்தானின் முன்னிலையில் இழுத்துக்கொண்டுபோய் பலமிழக்கும்வரை அடித்தனர். சுல்தான் அவ்விருவரிடம், “நீங்கள் யாரால், எதற்கு, எந்த அதிகாரத்தின்பேரில், எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு புனித பிரான்சிஸ் அவர்கள், “மனிதர்களால் அல்ல, கடவுளால் நாங்கள் இங்கு அனுப்பப்பட்டோம், நற்செய்தியின் உண்மையை அறிவிக்கவும், மனிதர்களுக்கு கடவுளின் மீட்புப் பாதையைக் காட்டவும், இங்கு அனுப்பப்பட்டோம்” என்று சொன்னார். இவர்களின் ஆர்வத்தையும், துணிச்சலையும் கண்ட சுல்தான், இவர்கள் சொன்னதை ஆர்வமுடன் கேட்டு, தன்னோடு தங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இஸ்லாமை அவமதிக்காமலும், இறைவாக்கினர் முகமது அவர்களைப் புறக்கணிக்காமலும், சுல்தான் அவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கான புனித பிரான்சிசின் ஆர்வம் தனிச்சிறப்புமிக்கது. இந்த சந்திப்பு முடிந்து அவர்கள் இத்தாலி திரும்புகையில், சுல்தான் அவர்களுக்கு, பல நன்கொடைகளையும் செல்வங்களையும் வழங்க விரும்பினார். ஆனால் இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் மறுத்த புனித பிரான்சிஸ் அவர்கள், ஒன்றை மட்டும் நன்கொடையாக ஏற்றார். மசூதிகளின் கோபுரங்களிலிருந்து, முஸ்லிம்களை செபத்திற்கு அழைக்கப் பயன்படுத்தப்படும், தந்தத்தாலான கொம்பு ஒன்றை மட்டும் சிறப்பு நன்கொடையாகப் பெற்றுச் சென்றார். இத்தாலி திரும்பியவுடன் விசுவாசிகளைச் செபத்திற்கும், போதனைகளுக்கும் அழைப்பதற்கு அந்தக் கொம்பையே புனித பிரான்சிஸ் பயன்படுத்தினார். புனித பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் தங்களின் ஒவ்வொரு நாள் வாழ்வில் செபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும், செய்யும் அனைத்திலும் கடவுளை நினைக்கவும் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பு பற்றி தனது துறவற குழுவில் பகிர்ந்துகொண்ட புனித பிரான்சிஸ் அவர்கள், முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை செபிக்கும் வழக்கமும், கடவுளை அவர்கள் வணங்கும் முறையும், தன்னை மிகவும் கவர்ந்தது என்றும், முஸ்லிம்கள் மீது, ஒரு புதிய ஆழ்ந்த மரியாதை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். சிலுவைப்போர்களால் எரிந்துகொண்டிருந்த பகைமை மற்றும் புரிந்துகொள்ளாமையை நீக்கவும் இச்சந்திப்பு உதவியது எனவும், புனித பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.

ஒருவர் ஒருவரை மதம் மாற்றாமல், கடவுளின் மனிதர்களாக, எல்லாரும் சகோதரர் சகோதரிகள் என்ற உணர்வில் வாழ முடியும் என்பது, இச்சந்திப்பின் வழியாக, புனித பிரான்சிஸ் அவர்களுக்கு உறுதியாயிற்று. மேலும் இச்சந்திப்பிற்குப் பின்னர், சுல்தான் அவர்கள், கிறிஸ்தவ கைதிகளைக் கனிவுடனும், தாராளமனத்துடனும் நடத்தியுள்ளார். புனித பிரான்சிஸ் அவர்களுக்கு, தனது சொந்த பாதுகாப்பை அளித்தார் எனவும், முஸ்லிம் நாடுகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்து சுல்தான் Malik al-Kamil அவர்களுக்கும் இடையே இச்சந்திப்பு நடைபெற்றதன் 800ம் ஆண்டு, இவ்வாண்டில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, எகிப்தில் மார்ச் 03, இஞ்ஞாயிறன்று மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று முடிவுற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பிரச்சனை

கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக, ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பிரச்சனை, அவ்வப்போது போர்ச் சூழலை உருவாக்கி வருகிறது. இப்போது போர் மேகங்கள் மறுபடியும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும், நான்கு போர்கள் நடத்தியும், இன்னும் ஒரு பிரச்சனைக்குக்கூட தீர்வு காணவில்லை. எனவே, போர்கள், பிரச்சனைக்குத் தீர்வை வழங்காது, போர்கள் எவருக்கும் வெற்றியைத் தரப்போவதில்லை, மாறாக அவற்றால், இருபக்கங்களிலும் இழப்புக்களே ஏற்படும் என்ற உண்மை தெளிவாகிறது. போரைத் தீர்மானிக்கும் இருவேறு சக்திகளான இவ்விரு நாடுகளின் பிரதமர்களின் கைகளில், இவ்விரு நாடுகளில் வாழும் 155 கோடி மக்களின் எதிர்காலம் சிக்கியிருக்கிறது. எனவே, அச்சி நகர் புனித பிரான்சிஸ் வழியில், நாடுகளின் தலைவர்கள் செயல்பட வேண்டுமென இறைவனை மன்றாடுவோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டுள்ளது போன்று, தலைவர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து, தங்கள் நடவடிக்கைகளில் தெளிந்துதேர்ந்து, நீதி மற்றும் இரக்கத்துடன் செயல்படுவார்களாக.

மனம் திருந்திய குற்றவாளி

இந்தியாவில், ஒரு மரண தண்டனை குற்றவாளி, மனம் திருந்தி எழுதிய கவிதைகளால் அத்தண்டனையிலிருந்து தப்பியுள்ளார் என்ற செய்தி (தினமலர்), மார்ச் 03, இஞ்ஞாயிறன்று வெளியானது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, நாற்பது வயது நிரம்பிய போர்கர் என்பவர், ஒரு சிறுமியை கொலை செய்த வழக்கில், 2001ம் ஆண்டில்  மரண தண்டனை விதிக்கப்பட்டார். இப்போது மறுவிசாரணையின்போது வாதாடியுள்ள இவரது வழக்கறிருஞர், பதினெட்டு ஆண்டுகளாக சிறையிலுள்ள இவர், இளம் வயதில் செய்த குற்றத்தை நினைத்து வருந்துகிறார். சிறையில் அவரது நடவடிக்கை நல்லபடியாக உள்ளது. சிறையில் இருந்தபடியே படித்து, பட்டதாரியாகி விட்டார். தன் தவறை உணர்ந்து, சீர்திருந்த பல கவிதைகளை எழுதியுள்ளார். சமுதாயத்தில், நாகரிகமான மனிதராக வாழ, விரும்புகிறார். அதனால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். இதைக் கேட்ட நீதிபதிகள், போர்கருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளனர் என அச்செய்தி கூறுகிறது.

யுத்தமும் வேண்டாம், இரத்தமும் வேண்டாம், சமாதானக் கதவு திறக்கட்டும் என்பதே, நாடுகளின் தலைவர்களுக்கு, நன்மன மக்கள் விடுக்கும் அழைப்பும் செபமும். உரையாடலும், மன்னிப்பும், ஒப்புரவும், அமைதியும் எங்கும் நிலவட்டும். சமாதானத்தை நாடும் நன்னெஞ்சை அனைவரும் பெறுவார்களாக.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2019, 14:56