இயேசு, மேலே பார்த்து, "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார். (லூக்கா 19:5) இயேசு, மேலே பார்த்து, "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார். (லூக்கா 19:5) 

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 5

"மக்களின் விவிலியம்" என்ற நூலில், மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்கள், முடக்குவாதமுற்றவரை சுமந்துவந்த நால்வரைப்பற்றி பேசும்போது, வேறுபட்ட வழிகளைப் பயப்படுத்தி, இயேசுவை நெருங்கிவந்த மூவரை குறிப்பிட்டுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 5

முடக்குவாதமுற்ற தங்கள் நண்பரை சுமந்துவந்த நால்வரும், எப்படியாவது இயேசுவை நெருங்கிவிட வேண்டும் என்ற ஆவலுடன் வந்தவர்கள் என்பதை, கடந்த சில தேடல்களில் சிந்தித்து வருகிறோம். இயேசுவைக் காண விழைந்தோரையும், அவர் வழியே நன்மைகள் பெற விழைந்தோரையும் நாம் நற்செய்திகளில் சந்திக்கிறோம். இவர்களில் சிலர், இயேசுவை நெருங்கிவர ஆவல் கொண்டிருந்தாலும், சமுதாயம், அவர்கள் மீது விதித்திருந்த தடைகளின் காரணமாக, அவர்களால், இயேசுவை நெருங்க முடியவில்லை. குறிப்பாக, நோயால் பாதிக்கப்பட்டோரும், பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும், இயேசுவை நெருங்க முடியாமல் தவித்தனர். அத்துடன், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பரிசேயர்கள், மதத்தலைவர்கள் சிலரும் இயேசுவை நெருங்கிவர ஆவல் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள், சமுதாயத்தில் தங்களுக்கிருந்த மதிப்பை விட்டுக்கொடுக்க மனமின்றி தவித்தனர்.

"மக்களின் விவிலியம்" என்ற நூலை எழுதிய மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்கள், Unusual Methods, அதாவது, 'வழக்கத்திற்கு மாறான வழிமுறைகள்' என்ற பிரிவில், முடக்குவாதமுற்றவரை சுமந்துவந்த நால்வரைப்பற்றி பேசும்போது, வேறுபட்ட வழிகளைப் பயப்படுத்தி, இயேசுவை நெருங்கிவந்த மூவரை, எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் எடுத்துக்காட்டு, நிக்கதேம். இவர், இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை, யோவான் நற்செய்தி 3ம் பிரிவில் (யோவான் 3:1-21) வாசிக்கிறோம். இந்நிகழ்வில், நிக்கதேம் அவர்கள், ஒரு பரிசேயர் என்றும், யூதத் தலைவர் என்றும் அறிமுகம் செய்யும் யோவான், அடுத்த வரியில், "அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்தார்" (யோவான் 3:2) என்று குறிப்பிட்டுள்ளார். பரிசேயராக இருந்த காரணத்தால், பகல் நேரத்தில், பகிரங்கமாக அவரால் இயேசுவைச் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்திக்க அவர் கொண்டிருந்த ஆர்வம், இந்த இரவு சந்திப்பை மேற்கொள்ள, அவரை உந்தித் தள்ளியது. அன்றிரவு முழுவதும், அவர், இயேசுவுடன் தங்கி, பல்வேறு உண்மைகளைக் கற்றுக்கொண்டார். இந்த உரையாடலில், இயேசு கூறிய பல ஆழமான கூற்றுகளில், "தம் ஒரே... மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) என்ற கூற்று, புகழ்பெற்ற மேற்கோளாக விளங்குகிறது.

அந்த சந்திப்பின் வழியே, இயேசுவுக்கும், நிக்கதேமுக்கும் இடையே ஆரம்பமான நட்பு, மறைமுகமாகத் தொடர்ந்திருக்கவேண்டும். நிக்கதேம் மட்டுமல்ல, இன்னும் பலர், இயேசுவுடன் தாங்கள் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்த முடியாமல் வாழ்ந்தனர். இவர்களில் இருவரை, இயேசுவின் மரணம், மீண்டும் அவரிடம் கொண்டுவந்து சேர்த்தது என்பதை, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார்.

யோவான் 19: 38-40

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர், இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோக, பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.

மறைப்போதகர் பார்க்கர் அவர்கள் குறிப்பிடும் இரண்டாவது எடுத்துக்காட்டு, சக்கேயு. இரக்கத்தின் நற்செய்தி என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், சக்கேயு இவ்வாறு அறிமுகமாகிறார்:

லூக்கா 19:1-3

இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

சக்கேயு, செல்வராக இருந்தாலும், வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்ததால், இஸ்ரயேல் சமுதாயம், அவரை, பாவி என்று முத்திரை குத்தி, ஒதுக்கி வைத்தது. எனவே, இயேசுவைச் சுற்றி நின்ற கூட்டத்தில், அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன், அவர், உடல் வளர்ச்சியின்றி, குட்டையாய் இருந்ததால், அவரால் இயேசுவை நெருங்கிச் செல்ல இயலவில்லை. இருப்பினும், இயேசுவைக் காணும் ஆவல், அவருக்கு மற்றொரு வழியை உருவாக்கித் தந்தது. "அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்" (லூக்கா 19:4) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.

இந்நிகழ்வை, ஒரு கற்பனைக்காட்சியாகக் காணமுயல்வோம். எரிகோ நகர வீதிகளில் இயேசு நடந்து வந்தபோது, நிமிர்ந்து பார்த்தார். சிறிது தூரத்தில், ஒரு மரத்தின் மீது, நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள், மரமேறி அமர்வது, சாதாரண விடயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர் போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்?

இவ்வாறு எண்ணியபடி நடந்து சென்ற இயேசுவுக்கு, அவரைப்பற்றி அறிய ஆர்வம். அருகில் இருந்தவர்களிடம் கேட்கிறார், அவர் யார் என்று. கூட்டத்தில் ஒரு சிலர், இயேசு காட்டிய மனிதரைப் பார்க்கின்றனர். கோபம், வெறுப்பு, கேலி ஆகிய எதிர்மறை உணர்வுகள், அவர்கள் பதிலில் தொனிக்கின்றன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி" என்று அவர்கள் அடுக்கிவைத்த அடைமொழிப் பட்டங்களை ஒதுக்கிவிட்டு, அவர் பெயர் என்ன என்று கேட்கிறார் இயேசு. யாருக்கும் அவர் பெயர் தெரியவில்லை.

பாவி, துரோகி என்று அடை மொழிகளாலேயே அவரை இதுவரை அழைத்து வந்ததால், அவருடையப் பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசுவும் விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு அந்த மரத்திற்கு கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார். (லூக்கா 19:5)

பாவி, துரோகி, புல்லுருவி, நாசக்காரன்... என்று, மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளையே மீண்டும், மீண்டும் கேட்டு, தன் பெயரை, தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு, இயேசு தன்னை பெயர் சொல்லி அழைத்தது, ஆனந்த அதிர்ச்சியைத் தந்திருக்கவேண்டும். இன்னொரு யூதர், தன்னை, பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயுவின் மனதில் உருவாக்கப்பட்டிருந்த சிறைகள் திறந்தன. சங்கிலிகள் அறுந்தன. இயேசுவைக் காணும் ஆவலுடன், மரமேறிய சக்கேயு என்ற பாவி, மனம் திரும்பி, மன்னிப்பு பெற்ற மனிதராக மரத்திலிருந்து இறங்கினார்.

மறைப்போதகர் ஜோசப் பார்க்கர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ள மூன்றாவது எடுத்துக்காட்டு, இரத்தப்போக்குடைய பெண். இரத்தப்போக்கு நோயின் காரணமாக, சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பெண், கூட்டத்தின் நடுவே வந்து, இயேசுவின் ஆடையைத் தொட்டது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய துணிவுதான். ஒத்தமை நற்செய்தி மூன்றிலும் கூறப்பட்டுள்ள இப்பெண்ணைக் குறித்தும், அவரது நோய் நீங்கப்பெற்ற புதுமையைக் குறித்தும் நம் தேடலை பின்னர் மேற்கொள்வோம்.

இயேசுவைக் காண்பதற்கு வெவ்வேறு வழிகளைப் பின்பற்றிய இந்த மூவரைப் போலவே இன்னும் சிலரை நாம் நற்செய்திகளில் சந்திக்கிறோம். இவர்களில், நான்காவது எடுத்துக்காட்டாக, தீய ஆவி பிடித்திருந்த தன் மகளின் சார்பாக இயேசுவைச் சந்திக்கச் சென்ற கானானியப் பெண்ணை (மத்தேயு 15:21-28; மாற்கு 7:24-30) நாம் எண்ணிப்பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட கானானிய இனம், அவ்வினத்தில் பிறந்த பெண், தீயஆவி பிடித்த ஓர் இளம்பெண்ணுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, தன் மீது சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, அப்பெண், இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண், இயேசுவை அணுகி வருகிறார்.

தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே  குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்று கூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன் அப்பெண் இயேசுவை அணுகியிருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத்தேயு 5: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

இயேசுவைக் காணும் ஆவலால் உந்தப்பட்ட இந்த நால்வரைப் போலவே, முடக்குவாதமுற்றவரைத் தூக்கிவந்த நால்வரும், கூரையைப் பிரித்து, தங்கள் நண்பரை இயேசுவுக்கு முன் சமர்ப்பிக்கின்றனர். அவர்களது ஆர்வமும், நம்பிக்கையும் அந்தப் புதுமைக்கு வழிவகுத்தன. இதனை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2019, 15:06