தேடுதல்

Vatican News
முடக்குவாதமுற்றவரின் நான்கு நண்பர்கள் கூரையைப் பிரித்து அவரை இறக்குதல் முடக்குவாதமுற்றவரின் நான்கு நண்பர்கள் கூரையைப் பிரித்து அவரை இறக்குதல் 

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 4

தங்களை மையப்படுத்தாமல், தங்கள் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்காமல், முடக்குவாதமுற்ற தங்கள் நண்பன் வாழ்வில் மாற்றங்களைக் கொணர உதவிகள் செய்த நான்கு நண்பர்கள், 'வினையூக்கி'களாகச் செயல்பட்டனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 4

திருக்குடும்பத்தின் காவலாராகவும், திருஅவையின் காவலாராகவும், கருதப்படும் புனித யோசேப்பு திருநாளை, மார்ச் 19, இச்செவ்வாயன்று கொண்டாடினோம். 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, புனித யோசேப்பு திருநாளன்று, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

புனித யோசேப்பையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இணைத்து சிந்திக்கும்போது, வேதியியல் மாற்றங்களில் (Chemical changes) பயன்படுத்தப்படும் 'catalyst', அதாவது, 'வினையூக்கி' என்ற பொருள், ஓர் உருவகமாக, நம் நினைவில் பதிகிறது. தன்னை மையப்படுத்தாமலும், தான் மாற்றம் அடையாமலும், பின்னணியில் இருந்தபடி, சுற்றியுள்ள பொருள்களில் வேதியியல் மாற்றங்களைத் தூண்டுவது, வினையூக்கியின் பணி.

அதேவண்ணம், தன்னை மையப்படுத்தாமல், அன்னை மரியாவும், இயேசுவும் உலகை மாற்றியமைக்க தூண்டுதலாக இருந்தவர், புனித யோசேப்பு. அவரது திருநாளன்று தன் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன்னை மையப்படுத்தாமல், முதன்மைப்படுத்தாமல், தன்னைச் சுற்றியுள்ள உலகில், குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவையில் மாற்றங்களை உருவாக்கி வருகிறார் என்பதை மறுக்க இயலாது. தன் தலைமைப் பணியில் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இறைவன், உடல், உள்ள நலன்களை வழங்குமாறு வேண்டி, நம் விவிலியத் தேடலை இன்று துவங்குகிறோம்.

முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் புதுமையில் நம் தேடலை மேற்கொண்டுள்ள இவ்வேளையில், இந்தப் புதுமை நிகழ்வதற்கு வழிவகுத்த நான்கு நண்பர்களையும், வேதியியல் 'வினையூக்கி'களாக உருவகித்துப் பார்க்க முயல்வோம்.

பல ஆண்டுகளாக, படுக்கையில் முடங்கிப்போன தங்கள் நண்பனை, இயேசுவிடம் சுமந்து வந்த இந்த நான்கு நண்பர்களுக்கும், அவரவர் வாழ்வில், தேவைகள் பல இருந்திருக்கும். இயேசுவுக்கு முன் தங்கள் நண்பனை சமர்ப்பித்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் தேவைகளையும் இயேசுவிடம் கூறி, அவர்கள் நால்வரும் பயனடைந்திருக்க முடியும். ஆனால், தங்கள் நண்பன் நலமடையவேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே நிறைவேற்ற, அவர்கள், பல கடினமான முயற்சிகளை மேற்கொண்டனர். தங்களை மையப்படுத்தாமல், தங்கள் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்காமல், முடக்குவாதமுற்ற தங்கள் நண்பன் வாழ்வில் மாற்றங்களைக் கொணர உதவிகள் செய்த நான்கு நண்பர்கள், 'வினையூக்கி'களாகச் செயல்பட்டனர்.

19, மற்றும் 20ம் நூற்றாண்டுகளில், இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற மறைபோதகர்களில் ஒருவர், ஜோசப் பார்க்கர் (Joseph Parker) அவர்கள். முடக்குவாதமுற்றவரைச் சுமந்து வந்த நண்பர்கள், இயேசுவைச் சந்திக்க கொண்டிருந்த ஆவல், வந்த இடத்தில் சந்தித்த தடைகள், மற்றும் அவற்றைத் தாண்டிச்செல்ல அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றைக் குறித்து, பார்க்கர் அவர்கள் ஆழமானக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். "மக்களின் விவிலியம்" (The People's Bible) என்ற நூலில், Unusual Methods, அதாவது, 'வழக்கத்திற்கு மாறான வழிமுறைகள்' என்ற பிரிவில், ஜோசப் பார்க்கர் அவர்கள், இந்த நான்கு நண்பர்களைப் பற்றி, பேசுகையில்,  அவர்களோடு நம்மையும் ஒப்பிட்டு சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். அவர் பதிவுசெய்துள்ள எண்ணங்களில் ஒரு சில, இதோ:

இந்த நால்வரும் எப்படியாவது இயேசுவை நெருங்கிவிட வேண்டும் என்ற ஆவலுடன் வந்தவர்கள். இயேசுவை நெருங்கவேண்டும் என்று விரும்பினால், நம்மால் நெருங்கமுடியும். ஆனால், நம்மில் பலர் அவ்வாறு நெருங்க மனமின்றி, பல்லாயிரம் காரணங்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறோம். "எங்கு மனம் (விருப்பம்) உள்ளதோ, அங்கு வழியும் உள்ளது" (Where there's a will, there's a way) என்ற பழமொழியை அறிவோம். வாழ்வில், பல்வேறு நோக்கங்களை அடைய முழுமனதோடு விருப்பம் கொள்ளும் நாம், மதத்தைப் பற்றிய விடயங்களில், அரைமனதோடு, அல்லது, விருப்பமின்றி இருப்பதால், வழியும் இல்லை என்று எளிதாகக் கூறிவருகிறோம்.

எந்த நோக்கத்திற்காக இயேசுவை நெருங்குகிறோம்? என்பதை அடுத்தக் கேள்வியாக எழுப்புகிறார், மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்கள். தங்கள் நண்பன் நலம்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நான்கு நண்பர்களும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஒரு சில நோக்கங்கள், நம்மை, இயேசுவிடம் நெருங்கவிடாமல் செய்துவிடும். இயேசுவும், நம்மை நெருங்கிவர மாட்டார். எடுத்துக்காட்டாக, ஏரோது, இயேசுவைக் காண விரும்பினார். எதற்காக? இயேசுவை, வித்தைகள் காட்டும் ஒரு மந்திரவாதியாகக் காணவிழைந்தார், ஏரோது. எனவே, அச்சந்திப்பில், இயேசு, அவர்முன் ஒரு வார்த்தையும் பேசாமல், மௌனம் காத்தார் என லூக்கா நற்செய்தி 23ம் பிரிவில் வாசிக்கிறோம். (லூக்கா 23:8-11).

இதற்கு அடுத்ததாக, நான்கு நண்பர்களும் சந்தித்த தடைகளைக் குறித்து, போதகர் ஜோசப் பார்க்கர் அவர்கள் சில சிந்தனைகளை வழங்கியுள்ளார். நான்கு நண்பர்களும், தங்கள் நண்பனைச் சுமந்து, இயேசுவை நெருங்கிச் செல்ல விழைந்தபோது, 'பரிசேயரும், திருச்சட்ட ஆசிரியர்களும்' (லூக்கா 5:17), வழியை மறைத்து அமர்ந்திருந்ததைக் குறித்து, பார்க்கர் அவர்கள் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

தேவையில் உள்ளவர்கள், இறைவனைத் தேடிவரும் வேளையில், அவர்கள் இறைவனின் இல்லத்திற்குள் நுழையமுடியாத வண்ணம், பல்வேறு மதத் தலைவர்கள் வழியை அடைத்து நிற்கின்றனர். இறைவனைப் பற்றிய ஏட்டளவு அறிவையும், மதத்தின் நுணுக்கங்களையும் மனப்பாடமாக அறிந்து, அதை மீண்டும், மீண்டும் மக்கள் மீது திணிக்க முற்படும் இவர்களைத் தாண்டி, இறைவனைக் காண்பது, மக்களுக்குக் கடினமாகிப் போகிறது.

"சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடான்" அல்லது, "இடம் கொடுக்கமாட்டான்" என்ற பழமொழிக்கு, நேரடியான வடிவம் கொடுப்பதுபோல், நண்பர்கள் நால்வருக்கு 'இடம்கொடுக்க' மறுத்தத் தலைவர்களைப்பற்றி பார்க்கர் அவர்கள் தன் மறையுரையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவிலுக்கு வருபவர்கள் அணியவேண்டிய உடைகள், சொல்லவேண்டிய மந்திரங்கள், அதுவும், புரியாத மொழிகளில் சொல்லவேண்டிய மந்திரங்கள், அளிக்கவேண்டிய காணிக்கைகள் என்று, ஆயிரமாயிரம் விதிமுறைகளை மக்கள் மீது சுமத்தும் மதத் தலைவர்களும், பூசாரிகளும், இறைவனைக் காண ஆவலுடன் வரும் மக்களுக்கு பெரும் தடைகளை உருவாக்குகின்றனர் என்று ஜோசப் பார்க்கர் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்று பல ஆண்டுகளாக விதிக்கப்பட்ட விதிமுறையும், அதற்கு எதிராக எழுந்த போராட்டமும் நம் நினைவுக்கு வருகிறது.

‘No one should stand between you and God’ அதாவது, 'உனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் குறுக்கிடக்கூடாது' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, சில மாதங்களுக்கு முன், ஓர் இந்தியச் செய்தித்தாளில் வெளியானது. விக்ரம் பாட் (Vikram Bhatt) என்ற திரைப்படக் கலைஞர் எழுதிய இக்கட்டுரையில், மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே, வளரக்கூடிய, வளரவேண்டிய உறவைப்பற்றி, அழகாகக் கூறியுள்ளார். கடவுளைச் சந்திக்கச் செல்லும் மனிதர்களுக்குத் தடையாக இருப்பவர்கள், கோவில்களில் இருக்கும் குருக்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இக்கருத்தை வலியுறுத்த, அவர், அம்மா, மகன், காவலாளி என்ற ஓர் அழகிய உவமையைப் பயன்படுத்தியுள்ளார். பள்ளியிலிருந்து திரும்பிவரும் சிறுவன் தன் தாயைக் கட்டி அணைக்க ஓடுகிறான். அவர்கள் வாழும் அடுக்குமாடி கட்டிடத்தின் காவலாளி அந்நேரம் அங்கு வந்து, "அம்மாவை அணைப்பதற்கு இது நேரமல்ல" என்று சிறுவனைத் தடுக்கிறார், என்ற சொற்களில், விக்ரம் பாட் அவர்கள், இவ்வுவமையை வடித்துள்ளார்.

தாயை அணைக்கச் செல்லும் சிறுவனைத் தடுக்கும் காவலாளியை எண்ணி நாம் எரிச்சலடைகிறோம். ஆனால், இதையொத்த பல தடைகள் நம் கோவில்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கடவுளைச் சந்திக்கச் செல்வோரை வரிசையில் நிறுத்தும் விதிமுறைகள், பணம் இருந்தால் வரிசைகள் தேவையில்லை என்ற விதிவிலக்கு... என்று, கோவில்களில் காணப்படும் குறைகளை, இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவர் பயன்படுத்தியுள்ள அம்மா, மகன், காவலாளி என்ற உருவகம், மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்களின் சிந்தனைகளுக்கு ஒத்திருக்கிறது.

சூழ்நிலை எப்படி இருந்தாலும், அதை வெற்றிகொண்டு இயேசுவைச் சந்தித்த அந்த நான்கு நண்பர்களை, நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வேறு சிலருடன் ஒப்பிட்டுள்ளார், மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்கள். தடைகளைத் தாண்டி இயேசுவைச் சந்தித்த இந்த பக்தர்களை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

19 March 2019, 15:17