தேடுதல்

2019.03.12 Peter's vision - Acts of the Apostles, Chapter 10 2019.03.12 Peter's vision - Acts of the Apostles, Chapter 10 

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 3

வானம் திறந்திருப்பதையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் (பேதுரு) கண்டார். நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன. - திருத்தூதர் பணிகள் 10: 11-12

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 3

2019ம் ஆண்டு புலர்ந்த வேளையில், பல்வேறு வாழ்த்துக்கள், 'வாட்ஸ்ஸப்'பில் வலம் வந்தன. ஒரு சில வாழ்த்துக்கள், சிந்தனைகளையும் தாங்கிவந்தன. அவற்றில் ஒன்று காணொளி வடிவில் வந்திருந்தது. 2019ம் ஆண்டு, இவ்வுலகம் சந்திக்கவிருக்கும் பெரும் ஆபத்துக்களாக, தனிமை, கடுமையான காலநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் காயமுறும் நிலை என்ற மூன்றும் அக்காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தன.

முதல் ஆபத்தான தனிமையைப்பற்றி பேசும்போது, இதுவரை நம் வரலாற்றில் இல்லாத அளவு, இன்று தனித்து வாழ்வோரின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது என்ற கருத்தை நிலைநாட்ட, வேதனை தரும் ஒரு சில புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருந்தன:

பாரிஸ் மாநகரில், 50 விழுக்காட்டினரும், ஸ்டாக்ஹோம் மாநகரில், 60 விழுக்காட்டினரும் தனித்து வாழ்கின்றனர். பிரித்தானியாவில், 75 வயதைத் தாண்டியவர்களில், பாதிக்கு மேற்பட்டோர், தனித்து வாழ்கின்றனர். இவர்களில் பலர், தங்கள் நண்பர், அல்லது, உறவினரோடு பேசி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என்ற புள்ளிவிவரங்களை வாசிக்கும்போது, மனம் பாரமாகிறது. தனிமை என்ற கொடுமையை நீக்கும் வழிகளை அரசுகள் சிந்திப்பதில்லை என்றும், மாறாக, தனிமையால் உருவாகும் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒரு சில மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்றும் கேள்விப்படும்போது, நம் மனம் இன்னும் அதிகமாக வேதனையடைகிறது.

இன்று நம்மைச் சூழ்ந்துள்ள தனிமை என்ற கொடுமை, இயேசு வாழ்ந்த காலத்திலும், ஒரு சில வடிவங்களில் இருந்தது. குறிப்பாக, நோயுற்றவர்கள், இறைவனின் சாபம் பெற்றவர்கள் என்ற தவறான எண்ணம் மக்கள் நடுவே நிலவியதால், நோயுற்றோர் பலர், தனிமையில் விடப்பட்டனர். நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள முடக்குவாதமுற்றவரின் வாழ்விலோ, நல்லவேளையாக, அவரது நண்பர்கள் நான்குபேர் அவரைவிட்டு விலகாமல் இருந்தனர். அவர்கள் மேற்கொண்ட முயற்சியால், முடக்குவாதமுற்றவர், கப்பர்நாகும் ஊரில், இயேசு இருந்த இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

இயேசு இருந்த இல்லம் என்று குறிப்பிடும்போது, அது, சீமோன், அந்திரேயா ஆகிய இரு சீடர்களின் இல்லம் என்பது பல விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து. இயேசு, முதல்முறை கப்பர்நாகும் ஊருக்குச் சென்றதைப்பற்றிக் கூறும் நற்செய்தியாளர் மாற்கு, அவர், "சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள்" (மாற்கு 1:29) சென்றார் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இரண்டாவது முறை இயேசு கப்பர்நாகும் ஊருக்குச் சென்றபோது, "அவர் வீட்டில் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று" (மாற்கு 2:1) என்று மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர, எந்த வீடு என்று குறிப்பிடவில்லை. கப்பர்நாகுமுக்கு இயேசு வந்தால், அவர் தங்குவது, சீமோனின் வீடு என்பதை, அவ்வூரில் இருந்தோர் அறிந்திருந்ததால், விரைவில், "பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று" (மாற்கு 2:2). இதையொத்த ஒரு காட்சி, மாற்கு நற்செய்தி முதல் பிரிவிலும் கூறப்பட்டிருந்தது. "நோயாளர்கள், பேய் பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது" (மாற்கு 1:32-33).

எனவே, இயேசு கப்பர்நாகும் வரும்போதெல்லாம், தங்கள் இல்லத்தில் தங்குவார் என்பதையும், அவர் தங்கள் வீட்டில் தங்கும் நேரங்களில், அங்கு பெரும் கூட்டம் கூடும் என்பதையும், சீமோனும், அந்திரேயாவும் எதிர்பார்த்தனர். ஆனால், இம்முறையோ, அவர்கள் எதிர்பாராத மற்றோர் அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. அதுவரை, வீட்டைச் சுற்றி நின்ற மக்களைக் கண்டு பழகிப்போயிருந்த சீமோன், முதல் முறையாக தன் வீட்டுக் கூரை வழியே ஒருவர் இறங்கியதைக் கண்டார். இறங்கியவர் ஒரு நோயாளி என்பதை, சீமோன் அறிந்தார்.

நோயுற்ற ஒருவர் தன் வீட்டுக் கூரை வழியே இறங்கியதைக் கண்ட சீமோன், கட்டாயம் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்திருப்பார். அந்த நோயாளி கூரை வழியே வீட்டுக்குள் நுழைந்ததால், தன் வீடு முழுவதும் தீட்டுப்பட்டதாக மாறிவிட்டது என்று சீமோன் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், இயேசு, தீட்டுப்பட்ட அந்நோயாளி மீது காட்டிய பரிவும், அவரை நலமாக்கிய புதுமையும், பேதுருவின் எண்ணத்தை ஓரளவு தூயமையாக்கியிருக்கும் என்று நம்பலாம்.

கூரைவழியே இறங்கிவந்த தீட்டுப்பட்டவரை குணமாக்கி, இயேசு, வாசல் வழியே அனுப்பி வைத்த நிகழ்வு, சீமோனின் மனதில் ஆழப் பதிந்திருக்கவேண்டும். தீட்டுள்ளது, தூய்மையானது என்ற பாகுபாடுகள், அவர் மனதிலிருந்து, ஓரளவாகிலும் விடைபெற்றிருக்க வேண்டும். தன் வீட்டுக் கூரையைப் பிரித்து, தீட்டுள்ள நோயாளி இறங்கியதைப்போல், தீட்டுள்ள பல மிருகங்கள் அடங்கிய ஒரு போர்வை வானிலிருந்து இறங்குவதைப்போன்ற ஒரு காட்சி, பேதுருவுக்கு தோன்றியது என்பதை திருத்தூதர் பணிகள் நூலில் நாம் காண்கிறோம்.

துவக்க கால கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பில் இருந்த பேதுரு, விருத்தசேதனம் செய்வதா, வேண்டாமா என்ற கேள்வியால், கிறிஸ்தவர்கள் நடுவே உருவான பாகுபாடுகளைக் களைய பாடுபட்டதை, திருத்தூதர் பணிகள் நூல், பத்தாம் பிரிவில் நாம் காண்கிறோம்.

யோப்பா நகரில், தோல் பதனிடும் சீமோன் என்பவர் வீட்டில் தங்கியிருந்த பேதுரு, அவ்வீட்டின் மேல்தளத்தில் செபித்துக்கொண்டிருந்த வேளையில், வானிலிருந்து இறங்கிவந்த பெரிய விரிப்பில், அனைத்து வகையான மிருகங்களும் இருந்ததை, ஒரு காட்சியில் கண்டார். அந்நிகழ்வும், அதன் வழியே பேதுரு கற்றுக்கொண்ட பாடமும், திருத்தூதர் பணிகள் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

திருத்தூதர் பணிகள் 10: 9-20

பேதுரு இறைவனிடம் வேண்ட வீட்டின் மேல்தளத்துக்குச் சென்றார். அப்போது மணி பன்னிரண்டு. அவருக்குப் பசி உண்டாயிற்று. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது, அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்; வானம் திறந்திருப்பதையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார். நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன. அப்போது, “பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு” என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு மறுமொழியாகப் பேதுரு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயில்லை” என்றுரைத்தார். இரண்டாம் முறையாக அக்குரல், “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே” என்று ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப் பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தபோது, கொர்னேலியு அனுப்பிய ஆள்கள் சீமோன் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கதவருகில் வந்து நின்று, “பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டனர். பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்; நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல். ஏனெனில் நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்” என்றார்.

தீட்டு, தூய்மை என்ற எண்ணங்களில் குழம்பிப்போயிருந்த பேதுரு, தான் கண்ட காட்சியால் தெளிவுபெற்று, வேற்றினத்தவரான கொர்னேலியு அவர்களின் இல்லம் சென்றார். அவ்வில்லத்தில் கூடியிருந்தோரிடம் பேதுரு, "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ‘யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது’ எனக் கடவுள் எனக்குக் காட்டினார். ஆகவே நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன்" (தி.ப. 10: 28-29) என்று தான் கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றி கூறினார். இதைத் தொடர்ந்து, நூற்றவர் தலைவரான கொர்னேலியு மீதும், அங்கு கூடியிருந்த வேற்றினத்தார் மீதும், தூய ஆவியார் இறங்கி வந்தார் என்றும், அவர்கள் திருமுழுக்குப் பெற்றனர் என்றும் நாம் திருத்தூதர் பணிகள் நூலில் (தி.ப. 10: 44-48) வாசிக்கிறோம்.

யூதர், பிற குலத்தவர், தீட்டு, தூய்மை என்ற பாகுபாடுகளைக் கடந்து, பேதுருவின் உள்ளம் அனைவரையும் ஏற்கும் வண்ணம் பரந்துவிரிந்ததாக மாற, அவர் இல்லத்தில், கூரையைப் பிரித்து இறக்கப்பட்ட முடக்குவாதமுற்றவரும், இயேசு அவரைக் குணமாக்கியப் புதுமையும் உதவியாக இருந்தன என்பதை நாம் உணர்கிறோம்.

'மனமிருந்தால் வழி உண்டு' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நான்கு நண்பர்கள், முடக்குவாதமுற்ற தங்கள் நண்பனை எப்படியாவது இயேசுவிடம் சேர்த்துவிடவேண்டும் என்ற தீர்மானத்துடன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டனர். நம்பிக்கையோடு அந்த நால்வரும் மேற்கொண்ட இந்த முயற்சிக்குப் பதில் மொழியாக, இயேசு, புதுமை ஆற்றுவதையும், அதைக்கண்டு, சூழ இருந்தோரிடம் உருவான மாற்றங்களையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2019, 14:42