Cerca

Vatican News
வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். - லூக்கா 6: 42 வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். - லூக்கா 6: 42 

பொதுக்காலம் 8ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த பார்வைத் திறன், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது போன்ற கருத்துக்களை நம் உள்ளங்களில் ஆழப் பதிப்பதற்கு, இயேசு பயன்படுத்தியுள்ள இரு உருவகங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 8ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

குழந்தைப் பருவம் முதல், கதைகள் மீது நமக்குள்ள ஈர்ப்பை நாம் அறிவோம். அந்த ஈர்ப்பு, ஒரு தேவையாக, அல்லது, தாகமாக மாறிவிட்டது என்று கூடச் சொல்லலாம். "கதை சொல்வது, விவிலியத்திலிருந்து" (Storytelling from the Bible) என்ற நூலை எழுதிய Janet Litherland என்பவர், கதைகளுக்குள்ள ஈர்ப்புச் சக்தியைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்: "கதைகள் சக்திவாய்ந்தவை. அவை நம்மைக் கவர்ந்திழுக்கும், செயலாற்றத் தூண்டும்... நமக்கு மகிழ்வைத் தரும், கல்வி புகட்டும், சவால் விடும். வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள கதைகள் உதவிசெய்யும். அவை, நம் எண்ணங்களில் நீண்டகாலம் பதிந்துவிடும். ஓர் உண்மையை எடுத்துச்சொல்ல விருப்பமா? கதையாய்ச் சொல்லுங்கள். இயேசு இவ்விதம் சொன்னார். தன் கதைகளை, அவர், உவமைகள் என்று கூறினார்."

உண்மையை ஏடுத்துச்சொல்ல, உவமைகளைச் சொல்லவேண்டும். நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள இயேசுவின் கூற்றுகளை ஒன்றாகத் திரட்டினால், அவற்றில் ஏறத்தாழ பாதி அளவு, கதைகளாகவும், உவமைகளாகவும் இருப்பதை உணரலாம். ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள், ஒரு படி மேலேச் சென்று, இயேசு பேசியதெல்லாம் உவமைகள் வழியாகவே என்றும் கூறுவர்.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார்? உவமைகள் வழியே சொல்லப்படும் உண்மைகளை உலகம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். இதுதான் முக்கியக் காரணம். உண்மை, நேரடியாக, வெளிப்படையாகத் தோன்றும்போது, அது நம்மை அச்சத்தில் ஆழ்த்தக்கூடும். அதை வரவேற்க, நாம் தயங்குவோம். அதே உண்மை, ஓர் உவமையாக, கதையாக நம்மை அடையும்போது, உள்ளத்தில் ஆழமாய்ப் பதியும், மாற்றங்களையும் உருவாக்கும். "மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது" (லூக்கா 6:39) என்று, இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

பார்வையற்ற வழிகாட்டி, கண்ணில் உள்ள மரக்கட்டை, கண்ணில் உள்ள துரும்பு, கெட்ட மரம், நல்ல மரம் என்ற உருவகங்கள் வழியே, இயேசு, நம் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தர வருகிறார். சீராக் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நமது பேசும் திறனை அல்லது குறையைச் சுட்டிக்காட்ட, சலிக்கும் சல்லடை, சூளையில் வைக்கப்படும் கலன், கனிதரும் மரம் ஆகிய உருவகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே நம் வாழ்வுக்குப் பயனளிக்கும் எண்ணங்கள் என்றாலும், நேரம் கருதி, நாம், நற்செய்தியில் இயேசு கூறியுள்ள இரு உருவகங்களில் நம் கவனத்தைச் செலுத்துவோம்.

உடல் சார்ந்த பார்வைத் திறன், உள்ளம் சார்ந்த பார்வைத் திறன், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது போன்ற கருத்துக்களை நம் உள்ளங்களில் ஆழப் பதிப்பதற்கு, இயேசு பயன்படுத்தியுள்ள இரு உருவகங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம். முதல் உருவகத்தில், "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?" (லூக்கா 6:39) என்று, இயேசு எழுப்பும் இரு கேள்விகள், யார், யாருக்கு வழிகாட்ட முடியும், வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த இரு கேள்விகளைத் தொடர்ந்து, இயேசு, குரு, சீடர் என்ற கருத்தை இணைத்திருப்பது, நம்மை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

உடல் அளவில் பார்வையிழந்தோர், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது, கூடாது என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார் என்று சிந்திப்பதைவிட, வழிகாட்ட விழையும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார், என்ற கோணத்தில் சிந்திப்பது, பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் பல அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது, அல்லது, குறுகியப் பார்வை கொண்டிருப்பது ஆகிய குறைகளால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் உருவாக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொள்ள, இந்த உருவகங்கள் வழியே முயல்வோம்.

நம் முயற்சியின் முதல் படியாக, பார்வைத் திறன் அற்றவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்ற எண்ணத்தை நம் உள்ளத்திலிருந்து நீக்க முயல்வோம். பார்வைத்திறன் இல்லாதபோதும், தங்கள் உழைப்பாலும், திறமைகளாலும் புகழின் சிகரத்தை அடைந்த பலரை நாம் அறிவோம். இவர்களது விடாமுயற்சி, பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டி வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

பார்வைத்திறன் இல்லாதபோதும், பிறருக்கு நல்வழி காட்டியவர்களைப்பற்றி, இணையத்தளத்தில் தேடும்போது, ஹெலன் கெல்லர், ஜான் மில்டன் போன்ற புகழ்பெற்ற பலரது கதைகள், நம் கண்களில் படுகின்றன. ஆனால், இவற்றைவிட, பாகிஸ்தான், கராச்சி நகரில் செய்தித்தாள் விற்கும் திருவாளர் ஷாஹித் (Zahid) அவர்களின் கதையும், அவர் கூறும் வாழ்க்கைத் தத்துவங்களும் உண்மையில் நம் உள்ளத்தைத் தொடுகின்றன.

“Lift up ideas” அதாவது, “எண்ணங்களை மேலே எழுப்புங்கள்” என்ற இணையத்தளத்திலும், YouTubeலும் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று நிமிட காணொளியில் நாம் காணும் ஷாஹித் அவர்களின் வாழ்வும், வாழ்வைக்குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும் உண்மைகளும், நம் உள்ளத்தை உயர்த்துகின்றன.

"நான் பிறவியிலேயே பார்வையற்றவன். என் பெற்றோர், விவாகரத்து செய்துகொண்டு, வெவ்வேறு திருமணங்கள் செய்துகொண்டனர்" என்று தன் கதையைத் துவக்கும் ஷாஹித் அவர்கள், தான் பள்ளியில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் "பிச்சையெடுக்கக் கூடாது. நம்பிக்கையிழக்கக் கூடாது" என்று கூறுகிறார்.

மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதைப்போல் தோன்றினாலும், கவிதை நயத்துடன், அவர் கூறியுள்ள ஒரு கருத்து, ஆழமாக நம் உள்ளத்தில் பதிகிறது: "உன்னால் முடிந்தால், உன்னுடைய விண்ணகத்தை உருவாக்கிக்கொள். பிச்சையெடுத்து பெறும் விண்ணகத்தைவிட, நரகத்தின் நெருப்பு மேலானது" என்று ஷாஹித் அவர்கள், பிச்சையெடுப்பதற்கு எதிராக தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

கராச்சி நகர் சாலைகளில், செய்தித்தாள்களை விற்று, தன் பிழைப்பை நடத்துகிறார் ஷாஹித். 18 ரூபாய்க்கு விற்கப்படும் அந்தச் செய்தித்தாளுக்கு, மக்கள் தன்னிடம் 20 ரூபாய் தரும்போது, மீதிச் சில்லறையான 2 ரூபாயை அவர்களுக்கு கட்டாயமாக தான் திருப்பித்தருவதாகக் கூறியுள்ளார். அதை அவரே வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினாலும், அவர் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு 2 ரூபாயைத் திருப்பித் தந்துவிடுகிறார். காரணம் கேட்டால், அந்த 2 ரூபாய் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற ஆசை தனக்குள் உருவாவதைத் தடுக்கவே தான் அப்படி செய்வதாகக் கூறுகிறார். சில்லறைகள் வழியே நமக்குள் நுழையும் பேராசை, நமக்கு ஆபத்தாக முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கும் ஷாஹித் அவர்கள், "ஒருவர் பேராசை கொண்டால், அவருக்கு வேறு எதுவும் உதவி செய்ய இயலாது" என்று கூறுகிறார்.

"உன் வாழ்வில் பெரும் துன்பம் நிகழும்போது, அதை இன்னும் மோசமாக்கும் வண்ணம் கண்ணீர் வடிக்காதே. நடந்ததைக் குறித்து அழுவதால், வாழ்க்கை இன்னும் மோசமாகும்" என்பது, ஷாஹித் அவர்கள் கொண்டிருக்கும் வாழ்க்கைத் தத்துவம்.

ஷாஹித் அவர்களைப் போல், தங்கள் உழைப்பை நம்பி, தங்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போதும் என்ற மன நிறைவுடன், அனைவரும் வாழ்ந்தால், இவ்வுலகில், எத்தனையோ தீமைகளை நாம் களையமுடியும். அவ்வழியில், ஷாஹித் அவர்கள், பார்வைத்திறன் அற்றவர் என்றாலும், பார்வைத்திறன் கொண்ட நமக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு நோயைக் குறித்து, இரண்டாவது உருவகத்தில், இயேசு கேள்விகளை எழுப்புகிறார். நம்மில் இருக்கும் குறைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், அடுத்தவர் மீது அவசர முடிவுகள் எடுக்கும் பார்வைக் கோளாறு என்ற இந்த நோயைக் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். இப்பகுதியில், இயேசு, கோபம் கலந்த தொனியில் பேசுவதை உணர முடிகிறது:

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?” (லூக்கா 6:41-42) என்று இயேசு எழுப்பும் கேள்விகள், அடுத்தவரைப் பற்றி, அவசரமான முடிவெடுக்க நாம் கொண்டுள்ள ஆர்வத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இத்தகைய மனநிலை கொண்டோரை, 'வெளிவேடக்காரர்' என்று இயேசு கடிந்துகொள்கிறார்.

"வெளிவேடக்காரர்" அல்லது, ஆங்கிலத்தில், hypocrite என்ற சொல், 'hypokrites' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. மேடையில் தோன்றி, முகமூடி அணிந்து நடிப்பவர்களுக்கு, 'hypokrites' என்று பெயர். இதில் தவறு ஏதுமில்லை. ஆனால், மேடையில் முகமூடி அணிவதுபோல், வாழ்விலும் முகமூடி அணிந்து வாழ்வோரைக் குறித்தே இயேசு இந்தச் சொல்லை, ஒரு கடுமையான சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோர், மக்களுக்கு முன் முகமூடிகள் அணிந்து வாழ்வதை, இயேசு கண்டனம் செய்தார்.

முகமூடி அணிந்து, இரட்டை வாழ்க்கை வாழ்தல் என்ற குறை, நம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் பார்வையை மறைக்கும் மரக்கட்டையாக மாறிவிடுகிறது. அந்தக் குறையை மக்கள் உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களிடம் காணப்படும் 'துரும்பு' போன்ற குறைகளை பெரிதுபடுத்துவதையும், அவற்றைக் களைய முற்படுவதையும் குறித்து, இயேசு தன் இரண்டாவது உருவகத்தில் குறிப்பிடுகிறார். அதே நோய், தன் சீடர்களையும், நம்மையும் ஆட்டிப்படைக்கக் கூடாது என்பது இயேசுவின் கவலை.

நம்மைப்பற்றிய அரைகுறையான கண்ணோட்டம், அடுத்தவரைப்பற்றிய அவசரக் கண்ணோட்டம் என்ற இரண்டும் கலந்த பார்வைக் கோளாறு என்ற இந்த நோய்க்கு இயேசு கூறும் மருந்து, அடுத்த வரிகளில் கூறப்பட்டுள்ளது. வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். (லூக்கா 6: 42ஆ).

இந்த நோயைத் தீர்க்கும் முதல் படி, மரக்கட்டையாக நம் கண்களில், உள்ளங்களில் ஆழப்பதிந்திருக்கும் குறைகளை 'எடுத்து எறியுங்கள்' என்று இயேசு கேட்கிறார். அதன்பின், தெளிவான பார்வையுடன், உண்மையான அக்கறையுடன், நம் சகோதரர், சகோதரியிடம் காணப்படும் குறைகளை அகற்றமுடியும் என்று இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார்.

பெற்றோர், பிள்ளைகள் உறவில் பெரும் தடையாக இருப்பது, பார்வைக் கோளாறுகள் என்பதை அனைவரும் அறிவோம். Brian Gordon என்பவர், பறவைகளை வைத்து உருவாக்கியுள்ள fowllanguagecomics.com என்ற வலைத்தளத்தில், ஒரு தாய் பறவை செபிப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கருத்துப்படத்தில் பின்வரும் அழகான செபம் இடம்பெற்றுள்ளது:

"இறைவா, என் குழந்தைகள் அடங்காத முட்டாள்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தாரும். அவர்களை நோக்கி எப்போதும் கத்தாமல் இருக்கும் துணிவைத் தாரும். அவர்களுக்கு இந்த குணங்கள் எங்கிருந்து வந்தன என்பதைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைத் தாரும்"

நமது வாழ்வில் முகமூடிகளைக் களைந்து, குறிப்பாக, நம் பார்வையில், மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளை தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம்.

இறுதியாக, நம் எண்ணங்கள், இந்தியா பாகிஸ்தான் உறவை நோக்கித் திரும்புகின்றன. விமானப்படை வீரர் அபினந்தன் வர்தமன் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததன் வழியே, பாகிஸ்தான் அரசு துவங்கியுள்ள சமாதான முயற்சிகளுக்கு ஈடான முயற்சிகளை இந்தியாவும் மேற்கொள்ளவேண்டும் என்றும், இவ்விரு நாடுகளின் தலைவர்கள், தங்கள் பார்வைக் கோளாறுகளைக் களைந்து, நாட்டு மக்களின் நலனை மையப்படுத்தி, பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

02 March 2019, 14:18