தேடுதல்

இயேசு, அலகை வழியே சந்தித்த சோதனைகள் இயேசு, அலகை வழியே சந்தித்த சோதனைகள் 

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, தவக்காலம் நல்லதொரு நேரம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

கடந்த வாரம் (மார்ச் 5ம் தேதி) வெளியான ஒரு துயரமான செய்தி, நம் ஞாயிறு சிந்தனைகளுக்கு வித்திடுகிறது. இச்செய்திக்கு தமிழில் வழங்கப்பட்டுள்ள தலைப்பு, நம் சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துகிறது. "அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்" (பிபிசி-தமிழ் - மார்ச் 6) என்ற இத்தலைப்பும், இச்செய்தியும் இன்று நாம் சிந்திக்கவிருக்கும் 'சோதனை' என்ற கருத்துக்கு, பொருத்தமானதோர் உவமையாக அமைகிறது.

செக் குடியரசு நாட்டில் வாழ்ந்த மிஹால் பிராஷெக் (Michal Prasek) என்ற இளைஞர், சில ஆண்டுகளுக்கு முன், இரு சிங்கக்குட்டிகளை வாங்கிவந்தார். சூழ இருந்தோர் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் கிராமத்தில் இவ்விரு சிங்கங்களையும் வளர்த்துவந்தார்.

சட்டத்துடன் அவ்வப்போது அவருக்கு மோதல்கள் எழுந்தன. இருந்தாலும், அவர், தனக்குத் தெரிந்த முறையில் ஒரு கூண்டை உருவாக்கி, அதில் தன் இரு 'செல்ல மிருகங்களையும்' வளர்த்துவந்தார். சென்ற வாரம் ஒருநாள், மிஹால் அவர்களைக் காண, அவரது தந்தை சென்றபோது, சிங்கக் கூண்டில் தன் மகன் இறந்து கிடந்ததைப் பார்த்து, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இறந்துகிடந்த மிஹால் அவர்களை நெருங்கவிடாமல், சிங்கங்கள் அச்சுறுத்தியதால், அவ்விரு சிங்கங்களையும் சுட்டுக்கொன்று, மிஹால் அவர்களின் உடல் மீட்கப்பட்டது. இளையவர் மிஹால் அவர்கள், சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தபோது, அவர் உருவாக்கிய கூண்டு, தவறான முறையில் மூடிவிடவே, மிஹால் அவர்களால் தப்பிக்கமுடியாமல் போனது என்பது தெரியவந்தது.

மேலும் சில நெருடலான விவரங்கள் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளன. செக் குடியரசு வகுத்துள்ள, விலங்குகள் நலம் குறித்த சட்டங்களின்படி, எந்த விலங்கையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவ்விரு சிங்கங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை என்று இச்செய்தி கூறுகின்றது.

அத்துடன், கடந்த ஆண்டு, மிஹால் அவர்கள் தன் சிங்கத்துடன் வெளியில் நடந்து சென்ற வேளையில், சைக்கிளில் வந்த ஒருவர், அந்த சிங்கத்தின் மீது மோதி, அது, அப்பகுதியில் தலைப்புச் செய்தியாக மாறியது என்றும், ஆனால், அந்நிகழ்வை, ஒரு சாலை விபத்து என, காவல் துறையினர் பதிவு செய்தனர் என்றும், இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பலவழிகளிலும், வேதனையையும், அதிர்ச்சியையும் உருவாக்கும் இச்செய்தி, சோதனைகளுடன் நாம் கொள்ளும் ஆபத்தானத் தொடர்புகள், அதனால், நாம் அடையும் விளைவுகள், சோதனைகளில் சிக்கிக்கொள்வோருக்கு சமுதாயம் செய்யத்தவறும் கடமைகள், ஆகியவற்றிற்கு ஓர் உவமையாகத் தெரிகிறது.

சிங்கக்குட்டி, அதாவது, சோதனை, பார்க்க அழகாக, ஆபத்தின்றி இருக்கிறதென்று எண்ணி, அதை வளர்க்கத் துவங்கினால், வளர்ந்தபின், அது தன் இயல்பை வெளிப்படுத்தும் வேளையில், அதை சமாளிக்க இயலாமல் போகும்.

சிங்கம் வளர்ப்பதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து அயலவர் எச்சரிக்கை தரும்போது, அதற்கு செவிமடுக்க மறுத்தால், அது, பெரும் ஆபத்தில் முடிவடையும்.

தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையுடன், இளையவர் மிஹால் அவர்கள், தானே உருவாக்கிய கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டதும், அவர் விரும்பி வளர்த்த சிங்கத்தால் கொல்லப்பட்டிருப்பதும், நமக்கு முக்கியமான பாடங்களாக அமைகின்றன.

தனியொருவர், ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடும்போது, அதிகாரத்தில் இருப்போர், சட்டத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த முயற்சிகளைத் தடுக்க முடியாமல் தடுமாறுவது, இச்செய்தியில் வெளிச்சமாகிறது.

அதேபோல், ஓர் ஆபத்தை தலைப்புச்செய்தியாக்கத் துடிக்கும் ஊடகங்கள், அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சந்தித்த சோதனைகளைக் குறித்து சிந்திக்க, தாய் திருஅவை அழைப்பு விடுக்கிறார். சில ஆண்டுகளுக்குமுன், இந்த ஞாயிறுக்குரிய மறையுரையைப்பற்றி அருள்பணியாளர் ஒருவரோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய நற்செய்தியின் மையக்கருத்து 'சோதனை' என்று நான் சொன்னேன். அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற ஒரு திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 'சாமி, இனி எனக்குச் சோதனைகளை அனுப்பாதே' என்று கெஞ்சும் பாணியில் அமைந்துள்ள இந்தப் பாடல் வரியில், நாம் சந்திக்கும் சோதனைகளுக்குக் காரணம் கடவுள், என்ற கருத்து மறைந்துள்ளது.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? அப்படித்தான் நம்மில் பலர் எண்ணுகிறோம். பேசுகிறோம். பிரச்சனைகள் பல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் புலம்புகிறோம்.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் ஓரளவு தெளிவைத் தருகின்றன. இயேசு, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர், அவர், அதே ஆவியால், பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். (லூக்கா 4:1-2) என்ற சொற்களை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் தெளிவாகின்றன:

பாலை நிலத்திற்கு அழைத்துச் சென்றது தூய ஆவியார். அங்கு, அலகை அவரைச் சோதித்தது. அதுவும், இயேசு, வலுவற்ற நிலையில் இருந்தபோது, அலகை அவரைச் சோதித்தது.

அலகை, இயேசுவுக்கு தந்த சோதனைகளும், அவற்றை இயேசு சந்தித்த விதமும், நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்நாடகங்களில் வரும் சோதனைக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடையணிந்து, முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது, அதை விரட்டியடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்கவிருக்கும் சாத்தான்களும், அவை கொணரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. அலகையும், அதன் சோதனைகளும், அவ்வளவு அழகானவை.

மேலோட்டமாகப் பார்த்தால், இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் ‘நல்ல’ சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி அலகை இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் நிறைவு செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை.

சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" (லூக்கா 4:3) என்ற சவாலை சாத்தான் முன்வைக்கிறது. இவ்வாறு சவால்விடும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என, அலகை, இலக்கணம் எழுதுவதையும் உணரலாம். இறைமகன் என்றால், புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயநலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்யவேண்டும் என்பது அலகை, இறைமகனுக்கு வகுத்த இலக்கணம். தன் சுயநலத் தேவையை நிறைவு செய்ய புதுமைகள் செய்பவர்கள், வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதில், அழகானது. தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் உணவைப்பற்றி பேசினார், இயேசு. “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை”  என்று, மோசே சொன்ன சொற்களை இயேசு கூறுகிறார். (இணைச்சட்டம் 8:3) தன் சொந்த பசியைத் தீர்த்துக்கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும்.

நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள், திறமைகள், எதற்கு? சுயத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மட்டுமா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை வென்று, அதை தந்தையிடம் ஒப்படைக்கத்தானே இயேசு மனுவுருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அங்கு சாத்தான் வைத்த நிபந்தனை, அதிர்ச்சியளிக்கிறது.

இயேசு உலகை வெல்லவேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது,  "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.

சக்தி பெறுவதற்கென, தீயோனிடம் சரண் அடைவதற்குப் பதில், சக்தியற்றவராக, இறைவனிடம் சரண் அடைவது மேல் என்று, இயேசு கூறும் மறுப்பைக் கேட்கும்போது, 'பிழைக்கத் தெரியாதவர்' என்று எண்ணத் தோன்றுகிறதா? தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை அச்சக்திகளுக்குமுன் சரணடைந்திருக்கிறோம்? இப்படி 'அட்ஜஸ்ட்' செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா? என்ற கேள்விகளுக்குப் பதில் தேட முயல்வோம்.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை காட்டுகிறது. எருசலேம் கோவிலின் மேலிருந்து இயேசு குதிக்கவேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம், தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகை போல இந்தக் காட்சி அமையும். எருசலேம் முழுவதும், ஏன், உலகம் முழுவதுமே இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமானப் பணி, இறுதி 3 நாட்கள் கொடிய வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். எருசலேம் கோவில் சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும் என்ற கனவுகளை அடுக்கிவைத்தது, சாத்தான். விளையாடியது போதும் என்று, இயேசு, சாத்தானை விரட்டியடிக்கிறார்.

கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், குறுக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, தவக்காலம் நல்லதொரு நேரம்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை உருவாக்கும் அருள்நிறை காலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு, நம்பிக்கையின்மை ஆகிய சோதனைகளை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2019, 14:36