தேடுதல்

Vatican News
போர் வேண்டாம் என்பதை வலியுறுத்தி டில்லியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம் போர் வேண்டாம் என்பதை வலியுறுத்தி டில்லியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்  (AFP or licensors)

அமைதிக்காக பாகிஸ்தான் இளையோரின் செபம், தவம்

இந்தியா-பாகிஸ்தான் அமைதிக்காக, தவக்காலம் முழுவதும், செபம் மற்றும் தவம் ஆகிய முயற்சிகளைத் துவங்கியுள்ள பாகிஸ்தான் இளையோர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இயேசுவுக்காக பாகிஸ்தான் இளையோர்" என்ற பெயருடன் துவக்கப்பட்டுள்ள ஓர் இளையோர் இயக்கம், உலக அமைதிக்காக, குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் அமைதிக்காக, தவக்காலம் முழுவதும், செபம் மற்றும் தவம் ஆகிய முயற்சிகளைத் துவங்கியுள்ளதென்று பீதேஸ் செய்தியொன்று கூறுகிறது.

"அமைதிக்காக, செபியுங்கள், அன்புகூருங்கள், தவம் செய்யுங்கள்" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கொள்கைப்பரப்பு முயற்சிக்கு, "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39) என்ற சொற்கள், விருதுவாக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போர் ஒருநாளும் தீர்வாக இருக்கமுடியாது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டால், அது, ஆசிய நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்று, கராச்சி மறைமாவட்ட இளையோர் பணி ஒருங்கிணைப்பாளர் அருள்பணி மாரியோ ரொட்ரிகுவெஸ் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

ஆணு ஆயுதங்கள் கொண்ட பாகிஸ்தானும் இந்தியாவும் இக்கருவிகளைப் பயன்படுத்தினால், பல தலைமுறைகள், இந்த தவறான முடிவின் தாக்கங்களால் துன்புற வேண்டிவரும் என்று அருள்பணி ரொட்ரிகுவெஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

அத்துமீறி தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ஒரு விமானப்படை வீரரை விடுவிப்பது எந்த அரசுக்கும் எளிதான முடிவு அல்ல என்றாலும், அத்தகைய ஒரு நல்ல முடிவை எடுத்த பாகிஸ்தான் அரசை தாங்கள் பாராட்டுவதாகவும், உலகில் அமைதியைக் கொணர முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்கும் பாகிஸ்தான் தலத்திருஅவையின் ஆதரவு உண்டு என்றும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு பணிக்குழுவின் செயலர் அருள்பணி Qaisar Feroz அவர்கள் கூறினார். (Fides)

06 March 2019, 14:49