தேடுதல்

Vatican News
நியூசிலாந்து பயங்கரவாதத் தாக்குதலுக்கு  ஆஸ்திரேலிய பல்சமய கண்டனம் நியூசிலாந்து பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பல்சமய கண்டனம் 

மசூதிகள் தாக்கப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்

மார்ச் 15, இவ்வெள்ளிக்கழமை பிற்பகலில், நியூசிலாந்தின் Christchurch நகரில், இரு மசூதிகளில் தனித்தனியே நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களில், குறைந்தது நாற்பது பேர் இறந்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நியூசிலாந்தில் இரு மசூதிகள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்து தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்துடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து ஆயர்களின் சார்பில், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான, Auckland ஆயர் Patrick Dunn அவர்கள், வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், செபம் இடம்பெறும் இடத்திலும், செபம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலும், இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது, மிகுந்த கவலை தருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றோரின் குடும்பங்களுடன் தோழமையுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ள, ஆயர் Patrick Dunn அவர்கள், அந்நாட்டில் கத்தோலிக்கர், முஸ்லிம் மக்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 15, இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில், நியூசிலாந்தின் Christchurch நகரில், முதல் மசூதியில் தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்திற்குள், இரண்டாவது மசூதியிலும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, இத்தாக்குதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட, நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern அவர்கள், இது நாட்டின் இருண்ட நாள்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

15 March 2019, 15:19