தேடுதல்

Vatican News
கிறிஸ்து அரசர் ஓவியம் கிறிஸ்து அரசர் ஓவியம்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

சாம்பலில் பூத்த சரித்திரம்: மத்தியகால கிறிஸ்தவ கலைகள்– பகுதி 1

மத்திய காலத்தில் அமைந்துள்ள சிற்பங்கள், கோதிக் கலை பேராலயங்கள், ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், விரிப்புகள் போன்றவற்றில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு தெளிவாகத் தெரிகின்றது.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஐரோப்பாவில் எங்குச் சென்றாலும், கிறிஸ்தவம் தொடர்புடைய அழகான வண்ண ஓவியங்களையும், சிற்பங்களையும் காண முடிகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இவை, காலத்தால் அழியாதவைகளாக, ஐரோப்பிய வரலாற்றில் கலை, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என, ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும், கிறிஸ்தவத்தின் சிறப்பான பங்களிப்புக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. மத்திய காலத்தில் சிறந்து விளங்கிய கட்டட கலைகள் தவிர, குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்துள்ள சிற்பங்கள், கோதிக் கலை பேராலயங்கள், ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், விரிப்புகள் போன்றவற்றில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு தெளிவாகத் தெரிகின்றது. எடுத்துக்காட்டாக, கோதிக் கலையில் அமைக்கப்பட்ட Chartres பேராலயம் (1194-1250), Notre-Dame பேராலயம் (1163-1345), Cologne பேராலயம்(1248-1880), Reims (1211-75), மற்றும் ஏனையவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உரோமைப் பேரரசின் தலைநகரமாக சிறந்து விளங்கிய உரோம் நகரின் வீழ்ச்சிக்குப்  பின்னர், நூற்றாண்டுகளாக, மேற்கு ஐரோப்பா, மிக இருளான காலத்தில் மூழ்கியிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் எந்த ஒரு  நகரமும், ஏன் உரோம்கூட, தற்போதைய இஸ்தான்புல் நகரமாகிய கான்ஸ்தாந்திநோபிள், அல்லது கோர்தோபா நகரங்களின் மகிமையோடு ஒப்பிட முடியாதவைகளாக இருந்தன. ஐரோப்பாவின் முந்தைய சாதனைகளோடு ஒப்பிடுகையில், அக்கண்டம் அறிவியலுக்கோ, மத்தியகால கலைப் பள்ளிகளுக்கோ எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை. கி.பி.400ம் ஆண்டு முதல் ஆயிரமாம் ஆண்டு வரை, அறநூறு ஆண்டுகளுக்கு, ஐரோப்பா, கலாச்சாரத்தில் பின்தங்கியிருந்தது. அக்கண்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை என்ற ஒரேயொரு நிறுவனம் மட்டுமே உயிரோட்டமாக வாழ்ந்தது. உண்மையில், மேற்கத்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காத்ததில், திருஅவையின் பங்கு தனித்துவமிக்கது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவின் நினைவுச்சின்ன கட்டடங்கள் மற்றும் சிற்பக்கலைகள் வளருவதற்கு, திருஅவை தொடர்ந்து முக்கிய காரணியாக இருந்துவந்தது.      

கி.பி.450ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்ட பின்னர், கிறிஸ்தவத் திருஅவையின் தலைமையிடம், கான்ஸ்தாந்திநோபிள் நகரத்திற்கு மாறியது. கான்ஸ்தாந்திநோபிளை ஆட்சிசெய்துவந்த பைசான்டைன் பேரரசு, ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் பரவியிருந்தது. பைசான்டைன் பேரரசின் முதன்மை கலைவடிவங்கள், எகிப்திய கல்லறை ஓவியங்களிலிருந்து பிறந்த icon ஓவியங்கள், சுவர்களில் வரையும் ஓவியங்கள், மொசைக் கலை போன்றவற்றைக் கொண்டிருந்தன. பைசான்டைன் icon ஓவியங்கள், இரஷ்ய மத்திய கால ஓவியங்களில், மிகவும் பிரபலமானவை. புனித செர்ஜியுஸ் துறவு இல்லத்திற்காக, 1411ம் ஆண்டில் புகழ்பெற்ற மூவொரு கடவுள் ஓவியம்(1411-25) வரையப்பட்டது. மத்திய காலத்தில் இத்தாலியில் சியன்னா ஓவியப் பள்ளியும், இரஷ்யாவில் மாஸ்கோ ஓவியப் பள்ளியும், இதேமாதிரியான தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்தன.

மேற்கு ஐரோப்பாவில் தொடக்ககால கிறிஸ்தவ கலைகளுக்கு எடுத்துக்காட்டாக, கலைவண்ணத்துடன் பலவண்ணங்களில் மின்னும் அயர்லாந்து மற்றும் ஆங்லோ-சாக்சன் நற்செய்தி கையெழுத்து பிரதிகளைச் சொல்லலாம். இவை, ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் (கி.பி.650-900 ) எழுதப்பட்டவை. இவற்றைத் தொடர்ந்து, இதே கலைவண்ணத்தில், பைசான்டைன் மற்றும், பாரசீக இஸ்லாமிய பிரதிகளும் தயாரிக்கப்பட்டன. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வைலட், செந்நிறம், இப்படி பல நிறங்கள் கொண்ட, ஒளிரும் விதத்தில், நற்செய்தி நூல்கள் தயாரிக்கப்பட்டன. சில நற்செய்தி பிரதிகளிலுள்ள எழுத்துகள், தங்க மற்றும் வெள்ளி எழுத்துக்களால் ஆனவை. இவ்வாறு தயாரிக்கப்பட்ட நற்செய்தி நூல்களை, அக்கால துறவிகளும், மக்களும் விரும்பினர். இத்தகைய தொடக்க கால கிறிஸ்தவக் கலைகள், குற்றக்கும்பல்களின் சூறையாடல் மற்றும் இருண்ட காலத்தின் பாதுகாப்பின்மை காரணமாக மறைவாகவே வைக்கப்பட்டிருந்தன,     

Franks எனப்படுவது, Rhine பகுதியின் கிழக்கில் வாழ்ந்த, ஜெர்மானிய பழங்குடிங்களின் கூட்டமைப்பாகும். இந்த மக்கள், கி.பி.257ம் ஆண்டில் உரோமைப் பேரரசை சூறையாடத் தொடங்கினர். இவர்கள், பல்வேறு ஜெர்மானிய பழங்குடி கூட்டமைப்புகளில் ஒன்றாக இருந்ததால், இவர்களின் தாக்குதல்களால் உரோமைப் பேரரசு, பெரும் இன்னல்களை எதிர்நோக்கியது. ஐரோப்பாவில் எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் (c.775), Frankish கிறிஸ்தவ பேரரசர் Charlemagne அதாவது பெரிய சார்லஸ் அவர்கள், உரோம் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய மாநிலங்களின் மிக வலிமையான அரசராக இருந்தார். அதற்கு அடுத்த நூற்றாண்டில் இப்பேரரசு, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம். மற்றும் இத்தாலியின் ஒரு பகுதியில் பரவியது. ஜெர்மனியின் ஆகென் நகரிலிருந்த, பெரிய சார்லஸ் பேரரசரின் அரசவை, ஐரோப்பா எங்குமிருந்து, கல்வி நிபுணர்கள், துறவிகள், மற்றும் இறையியல் வல்லுனர்களை கவர்ந்திழுத்தது. இது கலாச்சார மறுமலர்ச்சிக்கும் வழியமைத்தது. பேரரசர் Charlemagne அவர்கள் காலத்திற்குப் பின்னர்,  Otto பரம்பரை பேரரசின் காலமும், புகழ்பெற்ற கட்டட கலைக்கும், உலோக கலைவேலைப்பாடுகளுக்கும் சிறந்து விளங்கியது. இவற்றுக்கு எடுத்துக்காட்டாக, கொலோன் பேராலயத்திலுள்ள Gero சிலுவை (கி.பி.965–70), எஸ்ஸன் பேராலயத்திலுள்ள பொன்னிற அன்னை மரியா (கி.பி.980), Otto சிலுவை மற்றும் Mathilda (c.973) போன்றவைகளாகும்.

 இத்தாலியின் Michelangelo Buonarroti அவர்களின் சிறந்த கலைப்படைப்புகளில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவிலுள்ள பியத்தா திருவுருவம், பிளாரன்ஸ் நகர் அருங்காட்சியகத்திலுள்ள தாவீது சிலை (1501-1504) போன்றவற்றையும் கிறிஸ்தவக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்

27 March 2019, 15:07