தேடுதல்

Vatican News
இந்திய கிறிஸ்தவர்களின் பக்தி வெளிப்பாடுகள் இந்திய கிறிஸ்தவர்களின் பக்தி வெளிப்பாடுகள் 

இந்தியப் பொதுத்தேர்தல்களுக்காக மாரத்தான் செபங்கள்

இந்தியப் பொதுத்தேர்தல்களுக்காக சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் நீண்ட நேர செபங்களுக்கும், அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை – Raigarh ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் இவ்வாண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களை முன்னிட்டு, நீண்ட நேர பக்திமுயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் கத்தோலிக்கர்.

பொதுத்தேர்தல்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற வேண்டும் என, சத்திஸ்கர் மாநிலத்திலுள்ள Jashpur, Raigarh ஆகிய இரு மறைமாவட்டங்களின் 96 பங்குத்தளங்களிலுள்ள கத்தோலிக்கர், இரவு முழுவதும் இடம்பெறும் செப பக்திமுயற்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாநிலத் தேர்தல்களின்போது இதேபோன்று நடத்தப்பட்ட செபங்களின் பலனாகக் கிடைத்த நன்மைகளால் ஊக்கப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர், இவ்வாண்டு தேசியப் பொதுத் தேர்தல்களுக்கும் அதே வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர் என்று, Raigarh ஆயர் Paul Toppo அவர்கள் தெரிவித்தார்.

கத்தோலிக்கத் தலைவர்கள் குழு ஒன்று, மரச்சிலுவையுடன் ஒவ்வொரு பங்குத்தளமாகச் சென்று, அங்குள்ள மக்களுடன் இரவு முழுவதும் செபத்தில் ஈடுபட்டு வருகிறது எனவும், இந்த செப முயறசிக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஆயர் Paul Toppo அவர்கள் கூறினார்.

இந்த மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்றும் ஆயர் Toppo அவர்கள் கூறினார்.

விவிலியம் வாசித்தல், செபமாலை செபித்தல், பாடல்கள், விவிலியத்தில் ஒரு தலைப்பு பற்றி விளக்குதல், திருநற்கருணை ஆராதனை, ஆசிர் போன்றவை இந்த இரவு செபத்தில் இடம்பெறுகின்றன.

சத்திஸ்கர் மாநிலத்தின் 2 கோடியே 30 இலட்சம் மக்களில், ஏறக்குறைய 98 விழுக்காட்டினர் இந்துக்கள். (UCAN)

12 March 2019, 15:01