தேடுதல்

தலித் மக்களின் புதுடெல்லி பேரணி தலித் மக்களின் புதுடெல்லி பேரணி 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு புதுடெல்லியில் பேரணி

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் காலமே, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்களின் நியாயமான உரிமைகள் ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதற்கு ஏற்றது என்பதை மனதில் வைத்து, புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது - மேரி ஜான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், தலித் மக்களுக்கு எதிராய் இடம்பெறும் பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும், நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்ச் 12, இச்செவ்வாயன்று, புதுடெல்லியில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயர்கள், திருஅவைத் தலைவர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் சமுதாயங்களின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள், இந்த தேசிய பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்திய தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவையின் (NCDC) தலைவர் மேரி ஜான் அவர்கள், இந்தப் பேரணி பற்றி, பீதேஸ் செய்திக்கு அனுப்பிய தகவலில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்கள், 'பிற்படுத்தப்பட்ட சாதிகள்' என்ற அங்கீகராம் வழங்கப்படுவதற்கு இதுவே ஏற்ற காலம் என்று தெரிவித்துள்ளார். 

1935 மற்றும் 1950ம் ஆண்டு நிலவரம்

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே நிலவிவரும் சமூகப் பாகுபாடுகளைக் களையும் நோக்கத்தில், பிரித்தானியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், 1935ம் ஆண்டில், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதிக் குடிமக்களுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்தச் சலுகைகள், மதத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்படவில்லை. எனவே, இந்தச் சலுகைகளில், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு மதத்தினர் இடம்பெற்றனர்.

1950ம் ஆண்டில் குடியரசுத்தலைவரின் ஆணைப்படி, அந்த சலுகைகள் சீரமைக்கப்பட்டன. அதில் இந்துமத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும், "பிற்படுத்தப்பட்ட சாதிகள்" சலுகையில் இணைக்கப்பட்டனர். இந்த ஆணை, 1956 மற்றும் 1990ம் ஆண்டுகளில் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்கள் தவிர, சீக்கிய மற்றும் புத்தமத பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலை குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசிய மேரி ஜான் அவர்கள், இந்தப் பாகுபாட்டு விதிமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என்றும், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்னும் நிலுவையிலே உள்ளது என்றும் கூறினார். இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 25 விழுக்காட்டினர் தலித்துகள். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2019, 15:09