காஷ்மீரில் அமைதி வேண்டி........... காஷ்மீரில் அமைதி வேண்டி........... 

காஷ்மீர் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உரையாடல்...

மக்களுக்கு இடையேயுள்ள அனைத்து காழ்ப்புணர்வுகளும் கைவிடப்பட்டு, ஒருவர், ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கு, உரையாடல் தொடங்கப்பட வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக புகைந்துகொண்டிருக்கும் காஷ்மீர் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, இவ்விரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு, தலத்திருஅவைகளின் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தேசிய இயக்குனர்கள், அருள்பணி அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களும், அருள்பணி ஆசிப் ஜான் அவர்களும், இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லைப் பிரச்சனை, எழுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட விவகாரம் மற்றும், இது அரசியல் சார்ந்தது எனினும், இவ்விரு நாடுகளின் பொதுநலனைக் கருத்தில்கொண்டு, நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு, அந்த இயக்குனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அருள்பணியாளர்கள் பிச்சைமுத்து அவர்களும், ஆசிப் ஜான் அவர்களும் இணைந்து பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், அரசியல் எல்லையையும் கடந்து, உடன்பிறப்பு உணர்வு காட்டப்பட வேண்டுமென்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

போர் அர்த்தமற்றது என்பதும்,  அமைதியே அனைவருக்கும் பொதுவான பாதை என்பதும் முதலில் தெளிவாக உணரப்பட வேண்டுமென்றும், இவ்விரு நாடுகளிலுள்ள அப்பாவி பொது மக்களுக்கு இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அவர்கள் பேட்டியில் கூறியுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2019, 15:53