கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் 

தென் கொரிய கர்தினால் - ஒவ்வொரு மனித வாழ்வும் புனிதமானது

மரண தண்டனை வழங்குவது, மனித வாழ்வின் அடிப்படை உரிமைக்கு எதிரான கடும் அவமதிப்பு மற்றும் பாவம் – தென் கொரிய கர்தினால் யோம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் உழைக்க வேண்டுமென்று, அந்நாட்டு சோல் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் கொரியாவில், கருக்கலைப்பு மற்றும் மரண தண்டனை குறித்த தற்போதைய சட்டங்கள் பற்றிய அறுதியான முடிவை எடுப்பதற்கு, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தயாரித்துவரும்வேளை, தென் கொரிய நாடாளுமன்ற கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு, அண்மையில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Yeom அவர்கள்,  இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு மனிதரும், புனிதமான மற்றும் தவிர்க்கமுடியாத மாண்பைக் கொண்டிருக்கின்றார், மனித வாழ்வு, தாயின் வயிற்றில் கருவான நேரம் முதல், அது இயற்கையான மரணம் அடையும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாட்டை நினைவுபடுத்தினார், கர்தினால் யோம் அவர்கள்.

மரண தண்டனை வழங்குவது, மனித வாழ்வின் அடிப்படை உரிமைக்கு எதிரான கடும் அவமதிப்பு மற்றும் பாவம் என்று எடுத்துரைத்த கர்தினால் யோம் அவர்கள், கருக்கலைப்புக்கு எதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

இதற்கிடையே, மரண தண்டனை வழங்குவது, அரசியலமைப்பை மீறுவதாக இல்லையென, தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம்,1996 மற்றும் 2010ம் ஆண்டுகளில் அறிவித்தது. (UCAN/ AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2019, 15:39