தேடுதல்

தலித் மக்களின் உரிமை கேட்டு போராட்டம் தலித் மக்களின் உரிமை கேட்டு போராட்டம் 

கிறிஸ்தவ, முஸ்லிம் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்...

இந்துமத தலித் மக்களைப் போன்று, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்கள், அரசியல் முறைப்படியும், சட்ட முறைப்படியும் சம உரிமைகளைப் பெறவேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு உறுதிவழங்குவதை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளில் சேர்க்குமாறு, இந்திய கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடெல்லியில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர் பணிக்குழு, இவ்வாரத்தில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்துமத தலித் மக்களைப் போன்று, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்கள், அரசியல் முறைப்படியும், சட்ட முறைப்படியும் சம உரிமைகளைப் பெறுவதற்கு, இதுவே முக்கிய தருணம் என்றும், இந்த உரிமைகளின்றி தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்றும், அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

இந்தியாவில் வருகிற மே மாதத்தில், மக்களைவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, இவ்வாறு வலியுறுத்தியுள்ள அப்பணிக்குழு, இந்திய அரசியல் அமைப்பில், 1935ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சலுகையில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்களும் இணைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில், மதத்தின் அடிப்படையில் எவரும் ஒதுக்கப்படவில்லை என்றும், 1950ம் ஆண்டின் குடியரசுத்தலைவர் விதிமுறையில்தான்,  கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித் மக்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டன என்றும், இந்திய ஆயர் பேரவையின் தலித் பணிக்குழுவின் கூட்டத்தில் கூறப்பட்டது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2019, 15:31