தேடுதல்

Vatican News
கொலம்பியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள வெனிசுவேலா மக்கள் கொலம்பியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள வெனிசுவேலா மக்கள்  (AFP or licensors)

வெனிசுவேலா மக்களுக்கு உதவும் கொலம்பியா பங்குகள்

கொலம்பியா நாட்டின் கூகுட்டா மறைமாவட்டத்திலுள்ள எட்டு பங்குத் தளங்கள் வெனிசுவேலா மக்களுக்கு உணவளிக்கும் பணியில் முழு வீச்சுடன் செயலாற்றி வருகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன், கொலம்பியா நாட்டின் கூகுட்டா (Cúcuta) மறைமாவட்டம், இதுவரை, 10 இலட்சத்திற்க்கும் அதிகமான உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

கொலம்பியா மற்றும் வெனிசுவேலா நாடுகளின் எல்லை பகுதியில் அமைந்துள்ள கூகுட்டா மறைமாவட்டம், 2017ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி, தங்கள் நாட்டிற்குள் நுழையும் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.

கத்தோலிக்கத் திருஅவை, போர்க்களத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவமனை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவகப்படுத்திச் சொன்னது, தங்கள் மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று, கூகுட்டா மறைமாவட்டத்தின் ஆயர் விக்டர் மானுவேல் கதாவித் (Víctor Manuel Cadavid) அவர்கள் கூறியுள்ளார்.

உணவு, மருந்து மற்றும் அடிப்படை தேவைகள் பலவும் கிடைக்காதச் சூழலில், வெனிசுவேலா மக்கள், தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுகையில், அவர்களில் பெரும்பாலானோர், கொலம்பியா நாட்டில் தஞ்சம் அடைகின்றனர் என்று, CNA செய்தி மேலும் கூறுகிறது.

கூகுட்டா மறைமாவட்டத்தின் எட்டு பங்குத் தளங்கள், வெனிசுவேலா மக்களுக்கு உணவளிக்கும் பணியில் முழு வீச்சுடன் செயலாற்றி வருகின்றன. (CNA)

21 March 2019, 15:37