தேடுதல்

Vatican News
புனித தாமஸ் அக்குவினாஸ் புனித தாமஸ் அக்குவினாஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்தியகால கிறிஸ்தவ அறிஞர்கள்– பகுதி4

திருப்பலிவேளையில், காட்சியில் ஆண்டவரால் காண்பிக்கப்பட்டவைகளுக்குப் பிறகு, நான் இதுவரை எழுதியவை அனைத்தும் வெறும் குப்பையாகத் தோன்றுகிறது என்று சொல்லியுள்ளார் - புனித தாமஸ் அக்குவினாஸ்

மேரி தெரேசா-வத்திக்கான்

புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், மத்தியகாலத்தில், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை இணைத்து இறையியலைக் கற்பித்த சிறந்த கல்வி அறிஞர்களில் ஒருவர். இவர், அனைத்து கத்தோலிக்க மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாதுகாவலர். 1,225ம் ஆண்டில்

இத்தாலியின் தற்போதைய லாட்சியோ மாநிலத்தில், Roccasecca அரண்மனையில் பிறந்த இவர், தனது ஐந்தாவது வயதில், மொந்தே கசினோவில் தங்கி கல்வி கற்கத் தொடங்கினார். புனித உரோமைப் பேரரசர் 2ம் பிரெட்ரிக் அவர்களுக்கும், திருத்தந்தை 9ம் கிரகரி அவர்களுக்கும் இடையே போர் முடியும்வரை அங்கேயே இவர் தங்கியிருந்தார். பின்னர் நேப்பிள்ஸ் நகரில் படிப்பைத் தொடர்ந்தார். இந்த பல்கலைக்கழகப் படிப்பில்தான், இவர், அரிஸ்டாட்டில், மிகவும் புகழ்பெற்ற இஸ்லாமிய மெய்யியலாளர் Averroes (1126-1198) மற்றும் யூதமத மெய்யியலாளர் Moses Maimonides (1135-1204) ஆகியோரின் மெய்யியல் அறிவால் ஈர்க்கப்பட்டார். அச்சமயத்தில், தொமினிக்கன் சபை போதகரான புனித ஜூலியன் ஜான் என்பவரைச் சந்தித்தார். அவரின் தூண்டுதலால் அச்சபையில் சேருவதற்கு தீர்மானித்தார், தாமஸ் அக்குவினாஸ்.

குடும்பத்தில் இளையவரான புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தீர்மானத்தை அறிந்த அவரது அன்னை தெயோதோரா அவர்கள், அவரை பாரிஸ் நகருக்கு அனுப்புவதற்கு முயற்சிகள் எடுத்தார். தாமஸ் அவர்கள் உரோமையிலிருந்து பாரிசுக்குச் சென்ற சமயத்தில் அவரின் குடும்பத்தினர், அவரைக் கடத்திவந்து அரண்மனையில் ஓராண்டு வீட்டுக்காவலில் வைத்து, அவர் தொமினிக்கன் சபையில் சேர்வதை தடுத்தனர். இவரின் மனதை மாற்றுவதற்காக, இவரின் இரு சகோதரர்கள், பாலியல் தொழில்செய்யும் ஒரு பெண்ணை இவரது அறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தாமஸ் அவர்கள், நெருப்பு இரும்புக் கம்பியால் அப்பெண்ணைத் துரத்தினார் என்றும், அன்று இரவு கனவில் இரு வானதூதர்கள் தோன்றி, அவர் கன்னிமையில் உறுதியாய் இருப்பதற்கு சக்தியளித்தனர் என்றும் கூறப்படுகிறது. தனது மகன் இறையழைத்தலில் உறுதியாய் இருப்பதை அறிந்த அவரது அன்னை, ஜன்னல் வழியாக அவரைத் தப்பித்துச் செல்ல உதவினார். தொமினிக்கன் துறவிகள் அவரைக் கூடையில் வைத்து தூக்கிச் சென்றனர். பின்னர், தாமஸ் அவர்கள், 1245ம் ஆண்டில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, புனித ஜேம்ஸ் கல்லூரியில், இறையியல் துறை தலைவராகப் பணியாற்றிய, தொமினிக்கன் சபையின் புனித பெரிய ஆல்பர்ட்டின் தொடர்பு ஏற்பட்டது.

1248ம் ஆண்டில், திருத்தந்தை 4ம் இன்னோசென்ட் அவர்கள், புனித தாமஸ் அவர்களை, மொந்தே கசினோவில் தொமினிக்கன் சபை இல்லத் தலைவராக நியமித்தார். ஆனால் அவர் அதனை ஏற்காமல், புனித பெரிய ஆல்பர்ட் அவர்களைப் பின்பற்றி கொலோன் நகர் சென்று படித்தார். இவர் பல்கலைகழகத்தில் சக மாணவர்களுடன் அதிகம் பேசமாட்டார். இதனால் மாணவர்கள் இவரை ஊமை மாடு என அழைத்தனர். அதற்கு புனித ஆல்பர்ட் அவர்கள், இவர் ஒருநாள் உலகம் வியக்கும் வகையில் போதனையில் சிறந்து விளங்குவார் என்றார். கொலோன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து, அங்கேயே பழைய ஏற்பாடு நூல்கள் பற்றி வகுப்புகள் எடுத்தார் தாமஸ். அச்சமயத்தில்தான், Expositio super Isaiam ad litteram, Postilla super Ieremiam, Postilla super Threnos ஆகிய நூல்களை எழுதினார். 1256ம் ஆண்டில், பாரிசில் இறையியல் முதுகலை கல்விப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட சமயத்தில்தான் யாசக சபைகளை ஆதரித்து நூல்கள் எழுதினார் தாமஸ்.

திருநற்கருணை பக்தி

திருத்தந்தை ஆறாம் உர்பான் அவர்களின் தலைமைப் பணி காலத்தில், 1261க்கும், 1264ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், புனித தாமஸ் அவர்கள் வத்திக்கானில் பணியாற்றினார். அச்சமயத்தில்தான் திருஅவையில் திருநற்கருணை திருநாள் ஆரம்பமானது. திருநற்கருணை மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இவர், மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை.. என்ற பாடலை இயற்றினார். காலத்தால் அழியாத இப்பாடல் இன்றும் திருநற்கருணை ஆசிர்வாதத்தில் உலகெங்கும் பாடப்படுகிறது. இவரது இறையியல் கல்விப் பணியில் திருநற்கருணைதான் மையமாக அமைந்திருந்தது. அவர் காலத்தில், திருநற்கருணையில், அப்ப ரச குணங்கள் உண்மையிலேயே உள்ளனவா என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு, புனிதர் தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் பதில் சொல்லுமாறு கூறினர். திருநற்கருணை முன்னர் நீண்ட நேரம் மண்டியிட்டு செபித்த பின்னர் அவர் அமர்ந்து எழுதியவை இன்றுவரை மதிப்புக்கும், பாராட்டுக்கும் உரியதாக உள்ளன. அவற்றின் குணங்கள் நீங்குவதில்லை. ஆனால் அப்பம், இயேசுவின் திருவுடலாக மாறுகிறது என்ற அவரது விளக்கம் எல்லாரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருநற்கருணை அப்பம், உண்மையிலேயே மனிதத் தசையாகவும், இரத்தமாகவும் மாறிய புதுமைகள் நடைபெற்ற இடங்கள் இத்தாலியில் உள்ளன.

இறையியலின் சுருக்கம்

இப்புனிதர், 1272ம் ஆண்டில் இத்தாலிக்குத் திரும்பினார். நேப்பிள்ஸ் நகரில் தங்கியிருந்த சமயத்தில், ஒருமுறை புனித நிக்கொலாஸ் திருநாளன்று இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தார். அச்சமயம் இவர் கண்ட காட்சிக்குப் பின்னர், ஒருவரிகூட எழுதத் தயாராக இல்லை. இதனால் அவர் தொடங்கிய உலகப் புகழ்பெற்ற இறையியலின் சுருக்கம் (Summa Theologica) என்ற இறுதி நூல் முற்றுப்பெறவில்லை. ரெஜினால்டு என்ற இவரது நண்பரிடம், திருப்பலிவேளையில், காட்சியில் ஆண்டவரால் காண்பிக்கப்பட்டவைகளுக்குப் பிறகு, நான் இதுவரை எழுதியவை அனைத்தும் வெறும் குப்பையாகத் தோன்றுகிறது என்று சொல்லியுள்ளார். 1274ம் ஆண்டில் லயன்ஸ் நகரப் பொதுச்சங்கத்தில் பங்குபெற வேண்டுமென்று திருத்தந்தை இவரை அழைத்திருந்தார். அங்குச் சென்ற வழியில், கீழே விழுந்து காயமடைந்தார். அதைத் தொடர்ந்து உடல்நலமில்லாமல் இருந்து, அதே ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி இறைபதம் எய்தினார், புனித தாமஸ் அக்குவினாஸ். இவரை, திருத்தந்தை ஐந்தாம் பயஸ் அவர்கள், 1567ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாளன்று, திருஅவையின் மறைவல்லுனர் என அறிவித்தார்

20 March 2019, 14:31