தேடுதல்

தூய பேதுரு பேராலயம், Montenegro தூய பேதுரு பேராலயம், Montenegro 

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்தியகால கிறிஸ்தவ அறிஞர்கள்–பகுதி2

மத்தியகாலத்தில் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில், அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை இணைத்து இறையியலைக் கற்பிக்கும் கல்வி முறை, ஏறக்குறைய 1100ம் ஆண்டிலிருந்து 1,700ம் ஆண்டுவரை நிலவி வந்தது

மேரி தெரேசா-வத்திக்கான்

மத்தியகாலத்தில் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில், அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை இணைத்து இறையியல் கற்பித்த அறிஞர்களில் அருளாளர் John Duns Scotus அவர்களும் ஒருவர்.

அருளாளர் Duns Scotus

ஏறக்குறைய 1265ம் ஆண்டு ஸ்காட்லாண்டின் Dunsல், செல்வந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது 15வது வயதில், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். 1291ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று இறையியல் மற்றும் மெய்யியலைக் கற்றார். இவர், 1299ம் ஆண்டில் கிறிஸ்மஸ் இரவில், இறைவார்த்தை, மனிதஉரு எடுத்த பேருண்மை பற்றி ஆழ்ந்து தியானித்துக்கொண்டிருக்கையில், பரவச நிலையை அடைந்தார். அச்சமயத்தில், புனித அன்னை மரியா காட்சியில் தோன்றி, குழந்தை இயேசுவை அவரின் கைகளில் வைத்தார். இயேசுவும், Scotus அவர்களை, முத்தமிட்டு அணைத்து தழுவிக்கொண்டார் எனச் சொல்லப்படுகின்றது. நான்கு ஆண்டுகள், ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், பாரிஸ் சென்று, இறையியல் படித்தார் ஜான். இவர் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு முந்திய நாள், அரசர் 4ம் பிலிப்பு அவர்களுக்கும், திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் தொடங்கியது. திருத்தந்தை மீதுள்ள பகைமையில், அவருக்கு எதிரான ஆவணத்தில் எல்லாத் துறவியரும் கையெழுத்துப் போடவேண்டுமென்று அரசர் கேட்டுக்கொண்டார். அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்த்து, தானாகவே பிரான்ஸைவிட்டு வெளியேறினார், அருளாளர் ஜான்.  

அருளாளர் ஜான் அவர்கள், இதற்கு ஓராண்டு சென்று மீண்டும் பாரிஸ் பல்கலைக்கழகம் சென்று, இறையியலில் முனைவர் பட்டத்தைப் பெற்று பேராசிரியருமானார். இயேசுவின் அன்னையாம் மரியா, ஜென்மப் பாவமின்றி பிறந்தார் என்ற விசுவாச சத்தியத்தைப் பாதுகாப்பதற்காக வாதாடியதில் முன்னோடிகளாக விளங்கிய, மேற்கத்திய இறையியலாளரில் இவரும் ஒருவர். இதனால் இவர், பாரிசில், மரியியல் முனைவர் எனவும் அறியப்பட்டார். இவர், இங்கிலாந்தில், எவ்வித எதிர்ப்புகளுமின்றி, அன்னை மரியின் அமல உற்பவம் பற்றிய உண்மையைப் போதித்தார். ஆனால் பாரிசில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறையியலில் இவர் வெளிப்படுத்திய சிறந்த விவாதத் திறமை, Doctor Subtilis என்ற பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தது. சிறந்த மெய்யியல் வல்லுனரான இவர், மெய்யியலில் மட்டுமே கவனம் செலுத்தும் அரிஸ்டாட்டில் போன்றவர்கள், உண்மையான மனித நிலையைப் புரிந்துகொள்ள இயலாது என்று கூறினார். ஜான் அவர்கள், திருநற்கருணையில் கிறிஸ்துவின் மீது இவர் கொண்டிருந்த அன்பு, அருள்பணியாளர் நிலையில் கொண்டிருந்த மரியாதை, திருத்தந்தைக்கு இவர் காட்டிய பிரமாணிக்கம் ஆகியவை, இவரின் இறையியலில் சிறப்பு அழுத்தம் பெற்றன. புனித பிரான்சிஸ் அசிசியாரின் எண்ணங்கள் பற்றி அறிந்த இவர், இறையியல் என்பது கடவுளை பற்றி நடைமுறையில் அறிதலாகும் மற்றும் அன்பு வழியாக மூவொரு இறைவனோடு ஒன்றித்தலே மனிதரின் இறுதி இலக்கு என்பதை வலியுறுத்தினார். 1308ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, ஜெர்மனியின் கொலோன் நகரில் இவர் காலமானார். 13ம் நூற்றாண்டு பிரான்சிஸ்கன் அருளாளரும், இறையியலாளருமான John Duns Scotus அவர்களை, 1993ம் ஆண்டு மார்ச் 20ம் நாளன்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அருளாளர் என அறிவித்தார். அருளாளர் Duns Scotus அவர்களின் விழா, நவம்பர் 8ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

கிரேமோனாவின் ரோலண்ட்

அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை இணைத்து இறையியலைக் கற்பித்த அறிஞர்களில், இத்தாலியின் கிரேமோனா நகரின் ரோலண்ட் (1178–1259) அவர்களும் ஒருவர். தொமினிக்கன் சபையின் இறையியலாரான இவர், 1229ம் ஆண்டில், பிரான்சின் துலுஸ் பல்கலைக்கழகப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். இவரது காலமும்,  பிரான்சிஸ்கன் சபையின் Hales நகர் அலெக்சாந்தர் அவர்கள், 1231ம் ஆண்டில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலமும், அத்தகைய கல்விமுறையின் பொற்காலம் என அழைக்கப்படுகின்றன. ரோலண்ட் அவர்கள், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலை பட்டம் பெற்ற (1229–1230) முதல் தொமினிக்கன் ஆவார். 13ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட அரிஸ்டாட்டில் அவர்களின் மெய்யியலை, மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்தியவர்களில் ரோலண்ட் அவர்களும் ஒருவர்.

ப்ரெஞ்ச் இறையியலார் மற்றும் மெய்யியலாளருமான, Auvergne நகரின் ஆயர் வில்லியம் அவர்கள், ஆன்மா பற்றி சொன்ன அளவுக்கு, கிரேமோனாவின் ரோலண்ட் அவர்கள், ஆன்மா பற்றிச் சொல்லவில்லை. ஆன்மா, உடலின் முழுமை என அவர் நம்பினார். ஆயினும், மனிதரில் ஒரே ஆன்மாதான் உண்டு மற்றும் அதன் இயல்பும் சாதாரணமானதே என்பதை, ஆயர் வில்லியம் அவர்களும், ரோலண்ட் அவர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆன்மா, உடலைச் சார்ந்துள்ளது என்றார், கிரேமோனா ரோலண்ட். ஆன்மாக்களுக்கு உடல்கள் தேவை என்பதால், மனிதர், ஆன்மாவைக் கொண்டிருப்பதில், வானதூதர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தவுடன் அது ஆன்மாவாக இருக்காது. மாறாக அது ஆவியாக மாறுகிறது என்றார் ரோலண்ட். இவர், 1219ம் ஆண்டில், பொலோஞ்ஞாவில், தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். 1229ம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டில் துலுஸ் நகரில் மத்தியகால பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது முதல், அங்குப் பேராசிரியராகப் பணியாற்றினார். துலுஸ் நகரில், கத்தார் தப்பறை கொள்கையாளர்களுக்கு எதிராகப் போதித்தார் அவர். (கத்தார் இயக்கம், பத்து மற்றும் 14ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பல நாடுகளில் பரவியிருந்தது) ரோலண்ட் அவர்கள், ஒரு மனிதர், கிறிஸ்தவ விசுவாசத்திற்கெதிரான தப்பறைக் கொள்கையாளராக இறந்தார் என்ற வதந்தி கிளம்பியதையடுத்து, கல்லறையிலிருந்து அவரின் உடலைத் தோண்டுவதற்கு, 1231ம் ஆண்டில் துறவிகள் மற்றும் அருள்பணியாளர் குழு ஒன்றை வழிநடத்திச் சென்றார். இந்நடவடிக்கையால், துலுஸ் நகர அதிகாரிகள், ரோலண்டுக்கு எதிராய்க் கிளம்பினர். இதனால் ரோலண்ட் அவர்கள், துலுஸ் நகரைவிட்டு வெளியேறினார்.

Auvergne ஆயர் வில்லியம்

Auvergne நகரின் வில்லியம் (1180/90–1249) அவர்கள், 1228ம் ஆண்டிலிருந்து 1249ம் ஆண்டில் அவர் இறக்கும்வரை, பாரிஸ் ஆயராகப் பணியாற்றியவர். இவர், ப்ரெஞ்ச் இறையியலார் மற்றும் மெய்யியலாளர். ஆயர் வில்லியம் அவர்கள், அரிஸ்டாட்டில் உட்பட கிரேக்க, இஸ்லாமிய மற்றும், யூத அறிஞர்களின் மெய்யியலைப் புரிந்துகொள்வதிலும், அவை பற்றி விளக்குவதிலும் தங்களை அர்ப்பணித்திருந்த மேற்கு ஐரோப்பிய மெய்யியலாளர்களில் ஒருவர். கிரேக்க, இஸ்லாமிய மற்றும், யூத அறிஞர்களின் மெய்யியலில் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஆபத்து வரக்கூடிய தவறுகளுக்கு எதிராய்ப் பணியாற்றுவதில், தன் வாழ்நாளைச் செலவழித்தார் இவர். படைப்புயிர்கள் கடவுளோடு கொண்டிருக்கும் உறவுகள் பற்றி இவர் விளக்கியிருக்கிறார். மூவொரு இறைவன், இந்த பிரபஞ்சம், ஆன்மா, கடவுள், ஏன் மனிதராகப் பிறந்தார், விசுவாசம் மற்றும் சட்டங்கள், அருளடையாளங்கள், புண்ணியங்கள் மற்றும் நன்னெறிகள் ஆகிய ஏழு தலைப்புகள் பற்றி ஆயர் வில்லியம் அவர்கள் சிறந்த மெய்யியல் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இந்த தனது ஏழு மெய்யியல் படைப்புக்கள், மெய்ஞானத்தில் கடவுள் பற்றிய போதனை என அவர் தெரிவித்துள்ளார். எல்லா உயிர்களுக்கு கடவுளே மூலகாரணம் என்று விளக்கியுள்ளார், பாரிஸ் ஆயர் வில்லியம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2019, 14:18