தேடுதல்

Vatican News
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு இந்து இளம் பெண்கள், இஸ்லாமபாத் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருதல் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு இந்து இளம் பெண்கள், இஸ்லாமபாத் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருதல்   (ANSA)

கத்தோலிக்கத் திருஅவை கட்டாய மதமாற்றங்களை எதிர்க்கின்றது

ஒவ்வொருவருக்கும், தங்களின் மதத்தை அறிவிப்பதற்கு உரிமை உள்ளது. மதத்தைத் தெரிவுசெய்வதும் சுதந்திரமாக இடம்பெற வேண்டும் - ஆயர் தியோடர் மஸ்கரீனஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கட்டாய அல்லது ஏமாற்றி இடம்பெறும் அனைத்து மதமாற்றங்களை கத்தோலிக்கத் திருஅவை எதிர்க்கின்றது, அதேநேரம், ஒவ்வொருவரும் தங்களின் மத நம்பிக்கையை அறிவிக்கவும், அதைப் பரப்பவும், அவர்களுக்குள்ள உரிமையைப் பாதுகாக்கின்றது என்று, இந்திய கத்தோலிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில், இரு இந்துமத சிறுமிகள் கடத்தப்பட்டு, பின்னர் அச்சிறுமிகள் இஸ்லாமுக்கு கட்டாயமாக மனம் மாற்றப்பட்டு, இரு முஸ்லிம்களைத்  திருமணம் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டனர் என்ற விவகாரத்தையடுத்து, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமய சுதந்திரம் புனிதமானது என்றும், இந்த விவகாரம், இரு அண்டை நாடுகளுக்கிடையே பிரிவினையை விரிவுபடுத்தியுள்ளது என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும், தங்களின் மதத்தை அறிவிப்பதற்கு உரிமை உள்ளது என்றும், மதத்தைத் தெரிவுசெய்வது சுதந்திரமாக இடம்பெற வேண்டும், இந்தச் சுதந்திரமானது  கட்டாயத்தினால் அல்லது வஞ்சித்து ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்றும், ஆயர்  மஸ்கரீனஸ் அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறினார்.

இதற்கிடையே, இஸ்லாமபாத் நீதிமன்றம், இவ்விரு சிறுமிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு இச்செவ்வாயன்று காவல்துறையினரிடம் உத்தரவிட்டுள்ளது. 

இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என, மதங்களின் அடிப்படையில் நாடுகளில்  பிரச்சனைகள் எழுந்துள்ளதும், 1947ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானதற்கு சமயப் பிரச்சனையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.(AsiaNews)

26 March 2019, 15:19