தேடுதல்

Vatican News
மனிலா பேராயரும், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே மனிலா பேராயரும், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

Ghouta பகுதிக்கு, ஒவ்வொரு நாளும் திருநீற்றுப் புதன்

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவு, மருந்து, மனிதாபிமான உதவிகள் என, எல்லாமே தேவைப்படுகின்றன – கர்தினால் தாக்லே

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் கடுமையாய் சேதப்படுத்தப்பட்டுள்ள சிரியா நாட்டின் கிழக்கு Ghouta பகுதிக்கு, ஒவ்வொரு நாளும் திருநீற்றுப் புதனாக உள்ளது என்று, மனிலா பேராயரும், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் தெரிவித்தார்.

தமஸ்கு நகருக்கு அருகில், கிழக்கு Ghouta பகுதியின் Douma நகரை அண்மையில் பார்வையிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், இந்த நகரம் முழுவதிலும், சாம்பல், புழுதி மற்றும் அழிவுகளையே கண்டதாகவும், இடிந்த கட்டடங்களில், பெருந்துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

மார்ச் 06, திருநீற்றுப் புதனன்று Douma பகுதியைப் பார்வையிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்தவர்கள், இந்தப் புதன்கிழமையை, ஆண்டில் ஒருநாள்தான் சிறப்பிக்கின்றனர், ஆனால், இங்கு வாழ்கின்ற மக்கள், ஒவ்வொரு நாளும் சாம்பலில் வாழ்ந்து வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு, உணவு, மருந்து, மனிதாபிமான உதவிகள் என, அனைத்தும் தேவைப்படுகின்றன என்றும், இதனாலே இம்மக்களை நாம் மறக்கக் கூடாது என்றும் கூறினார், கர்தினால் தாக்லே.

மரணம், போர் மற்றும் அழிவுகளைத் தவிர்த்து, மதங்களுக்கு இடையே அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்த இடமாக, மீண்டும் ஒரு நாள் இந்தப் பகுதி மாறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார், கர்தினால் தாக்லே.

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றதன் அடையாளமாக நிற்கும் Douma நகரில், 2018ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வேதியத் தாக்குதல் நடத்தப்பட்டதில், குறைந்தது எழுபது பேர் வரை உயிரிழந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

09 March 2019, 16:03