தேடுதல்

Vatican News
படகு விபத்தில் பலியானவர்களுக்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கர்தினால் சாக்கோ படகு விபத்தில் பலியானவர்களுக்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கர்தினால் சாக்கோ  (AFP or licensors)

ஈராக்கில் அமைதியும், பாதுகாப்பும், நிலவவேண்டி....

டைக்ரிஸ் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் ஏறத்தாழ நூறுபேர் உயிரிழந்ததையொட்டி, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் தலைவர்களுடன் செபவழிபாட்டை நடத்திய கர்தினால் சாக்கோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த வாரம் ஈராக் நாட்டின் டைக்ரிஸ் நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட வழிபாட்டில், தன் ஆழ்ந்த கவலையையும், ஒருமைப்பாட்டையும் வெளியிட்டார், அந்நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ.

கடந்த வாரம் வியாழக்கிழமைன்று டைக்ரிஸ் நதியில் பயணம் செய்த படகு ஒன்று மூழ்கியதில் ஏறத்தாழ நூறுபேர் உயிரிழந்ததையொட்டி, அவர்களின் குடும்பத்தினருடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, மோசூல் நகர், புனித பவுல் ஆலயத்தில் வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது.

ஈராக் நாட்டின் திருப்பீடத்தூதர் பேராயர் Alberto Ortega Martin, மற்றும், பல கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்களுடன் இணைந்து, இச்செபவழிபாட்டை நடத்திய கர்தினால் சாக்கோ அவர்கள், மோசூல் பகுதி மக்களுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுடன் ஆழ்ந்த நெருக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாக அறிவித்தார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் பலகாலமாக தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மோசூலில் இடம்பெற்ற இந்த செப வழிபாட்டில், இஸ்லாமிய தலைவர்களுடன் இணைந்து, நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மைக்காக செபித்தார், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ.

இச்செபவழிபாட்டின்போது, திருத்தந்தையின் இரங்கல் தந்தி திருப்பீடத்தூதரால் வாசித்தளிக்கப்பட்டதுடன், வழிபாட்டின் இறுதியில், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதிக்கு, கல்தேய வழிபாட்டுமுறை திருஅவையின் சார்பில், இருபதாயிரம் டாலர்களை வழங்கினார், கர்தினால் சாக்கோ.

இம்மாதம் 21ம் தேதி, குர்த் இனத்தவரின் Nowruz என்ற புத்தாண்டைச் சிறப்பிக்க, மோசூல் நகருக்கு 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Umm Rabaen தீவிற்கு மக்கள் படகில் பயணம் செய்தபோது, அப்படகு கவிழ்ந்ததில் 97 பேர் இறந்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

28 March 2019, 14:05