இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்த்தமன் அவர்களின் விடுதலைக்காக காத்திருந்த மக்கள் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்த்தமன் அவர்களின் விடுதலைக்காக காத்திருந்த மக்கள் 

அபிநந்தனுக்கு, இந்திய திருஅவை ஆர்வமுடன் வரவேற்பு

பாகிஸ்தானின் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின், அமைதிக்கும், உரையாடலுக்கும், ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும் வழிகளைத் திறந்துவிட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கடந்த மூன்று நாள்களாக, பாகிஸ்தான் நாட்டின் பிடியில் இருந்து, மார்ச் 01, இவ்வெள்ளியன்று விடுவிக்கப்பட்டு, இந்தியா திரும்பியுள்ள இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்த்தமன் அவர்களை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை மிக ஆர்வமுடன் வரவேற்பதாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தெரிவித்தார்.

விமானப்படை வீரர் அபிந்தன் அவர்கள் நாடு திரும்பியுள்ளது, அவரது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்துள்ள, மும்பை பேராயரான, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கைதியைத் திருப்பியளித்திருப்பது ஒரு நல்ல அடையாளம் என்று, ஆசியச் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா ஒப்பந்தம்

போரில் காயமடைந்த கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவது உட்பட, போர்க் கைதிகளை நடத்துவது குறித்த, 1949ம் ஆண்டின் ஜெனீவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான், அதை மதிக்கின்றது என்பதை, இந்நடவடிக்கையால் எண்பித்துள்ளது என்று தான் நம்புவதாகவும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது, இவ்விரு அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டநிலை அகற்றப்படவும், இந்திய துணை கண்டத்தில் இவ்விரு நாடுகளின், அமைதிக்கும், உரையாடலுக்கும், ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும் வழிகளைத் திறந்துவிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ். (AsiaNews)

இவ்வெள்ளியன்று, லாகூரிலிருந்து கார் மூலமாக, இந்திய எல்லையான வாகாவிற்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தன் அவர்கள், மாலை நான்கு மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார். அவரை, பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அபிநந்தனை வரவேற்க வந்த பொதுமக்கள் அனைவரும், தத்தம் கைகளில் இந்திய தேசியக்கொடிகளை உற்சாகமாக அசைத்து வரவேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2019, 15:58