தேடுதல்

மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்த கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசோம் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்த கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசோம்  

மரண தண்டனை நிறுத்தப்பட்டதை வரவேற்கும் ஆயர்கள்

குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது. குற்றவாளியைக் கொலை செய்வதால், குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்படுவதில்லை - லாஸ் ஆஞ்செலஸ் பேராயர் ஹோஸே கோமஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர், தன் மாநிலத்தில் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை, கலிபோர்னியா உயர் மறைமாவட்ட ஆயர்கள் அனைவரும் ஒருமனதாக வரவேற்றுள்ளனர்.

மார்ச் 12, இச்செவ்வாயன்று, கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசோம் (Gavin Newsom) அவர்கள் வெளியிட்ட இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மார்ச் 13, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய லாஸ் ஆஞ்செலஸ் பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், இந்நாள், கலிபோர்னியா மாநிலத்திற்கும், இந்நாட்டிற்கும் நல்லதொரு நாள் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் மரண தண்டனைக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் கோமஸ் அவர்கள், குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும், குற்றவாளியைக் கொலை செய்வதால், குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்படுவதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

கலிபோர்னியா மாநிலத்தில், மரணத்தை வருவிக்கும் திரவம், ஊசி வழியே செலுத்தப்படும் மரண தண்டனைகள், எதிர்பார்த்த பலனை தருவதில்லை, அவை, அதிக விலையுயர்ந்த கொலைகள், மற்றும் அவை, இனப்பாகுபாட்டுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்ற காரணங்களைக் காட்டி, ஆளுநர் நியூசோம் அவர்கள், இந்த தண்டனையை இரத்து செய்துள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆளுநர் கூறும் காரணங்களை தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய பேராயர் கோமஸ் அவர்கள், குற்றங்களைத் தடுக்கும் முறைகள், தண்டனைகள் வழங்கும் முறைகள் ஆகியவற்றில் இன்னும் நீதியான, நல்ல முன்னேற்றங்கள் நிகழவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கலிபோர்னியா மாநிலத்தில், 737 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், இந்த எண்ணிக்கை, அமெரிக்க ஐக்கிய நாட்டிலேயே மிக அதிக அளவு என்றும், அம்மாநிலத்தில், 2006ம் ஆண்டு, இறுதியாக ஊசி வழியே மரண தண்டனை நிகழ்த்தப்பட்டது என்றும் CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2019, 15:54