தேடுதல்

புனித வியாழன் வழிபாட்டு சடங்கு புனித வியாழன் வழிபாட்டு சடங்கு 

தமிழகத்தில் தேர்தல் நாளை மாற்றக்கோரி வலியுறுத்தல்

கிறிஸ்தவர்களின் புனித வார பக்தியுணர்வை மதித்து, தமிழகத்தில் தேர்தல் நாள் மாற்றியமைக்கப்படுமாறு, இந்திய தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார், தமிழக ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தில், மக்களவைக்கு 39 தொகுதிகளுக்கும், சட்டசபைக்கு 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் நாள், ஏப்ரல் 18 என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, புனித வாரத்தைச் சிறப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, இந்த நாள் ஏற்றதல்ல என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஏப்ரல் 18, புனித வியாழன் என்பதால், அந்த நாள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான நாள் என்றும், இந்நாளில் தேர்தலை நடத்துவது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றது அல்ல என்றும், தமிழக ஆயர் பேரவை தலைவர், மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கூறினார்.

இந்த நாளை மாற்றக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ள பேராயர் பாப்புசாமி அவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும், அரசு பள்ளி கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கிறிஸ்தவ அலுவலகர்களுக்கு, புனித வியாழன் திருப்பலியில் கலந்துகொள்ள இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, இறப்பதற்கு முன்னர், தம் சீடர்களோடு இறுதி இரவு உணவை உண்டதை நினைவுகூரும் புனித வியாழன் திருவழிபாடுகளில்,  தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயலாத காரியம் என்றும், பேராயர் பாப்புசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மறைமாவட்டங்களின் பல பள்ளிகள், ஆலயங்களின் வளாகத்திற்குள்ளே இருப்பதாலும், இவற்றில் பல பள்ளிகள், வாக்குச்சாவடிகளாக அமைக்கப்படும் என்றும் கூறியுள்ள மதுரை பேராயர் பாப்புசாமி அவர்கள், இந்த நிலை, புனித வியாழன் மற்றும் புனித வெள்ளி திருவழிபாடுகளுக்கு ஆலயங்களுக்கு வருகின்ற கிறிஸ்தவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில், வருகிற ஏப்ரல் 11,18,23,29 ஆகிய நாள்களிலும், வருகிற மே 6,12, 19 ஆகிய நாள்களிலும், ஏறக்குறைய பத்து இலட்சம் வாக்குச்சாவடிகளில், ஏறக்குறைய 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2019, 14:59