தேடுதல்

Vatican News
திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா  (AFP or licensors)

தலாய் லாமா அவர்களுக்கு "Pacem in Terris" விருது

திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்கள், உலகில் அமைதி நிலவுவதற்கும், மக்களுக்கு மனஅமைதி ஏற்படுவதற்கும், தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Zinkula அவர்கள் பாராட்டினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

"உலகில் அமைதி – அமைதி மற்றும் சுதந்திரம் (Pacem in Terris - Peace and freedom)" எனப்படும் விருதை, திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு, கத்தோலிக்க கழகம் ஒன்று வழங்கி கவரவித்துள்ளது. 

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Davenport நகரில், 11 மத அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்கின்ற,  கத்தோலிக்க பலஇன அவையின் சார்பில், Davenport ஆயர் Thomas Zinkula அவர்கள், தர்மசாலாவில், தலாய் லாமா அவர்களுக்கு, உலகின் அமைதி எனப்படும் இவ்விருதை வழங்கியுள்ளார்.

உலகெங்கும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், போர்களுக்கு வன்முறையற்ற தீர்வு காணப்படவும், தலாய் லாமா அவர்கள் கொண்டிருக்கின்ற கண்ணோட்டம் மற்றும் அர்ப்பணத்தை, கத்தோலிக்க பலஇன அவை பாராட்டுகின்றது என்றும், ஆயர் Zinkula அவர்கள் தெரிவித்தார். 

தலாய் லாமா அவர்களின் வார்த்தைகளும், செயல்களும், அமைதிக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருப்பதை ஆழமாக வெளிப்படுத்துகின்றன என்றும், நசுக்கப்பட்டுள்ள திபெத் மக்களின் மாண்பும் கலாச்சாரமும் மதிக்கப்படுவதற்கு, அவரின் தலைமைத்துவம் உதவும் என்றும் ஆயர் Zinkula அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். 

இவ்விருது மார்ச் 4ம் தேதி, தர்மசாலாவில் வழங்கப்பட்டுள்ளது.

Tenzin Gyatso என்பவர், திபெத் புத்த மதத்தின் 14வது தலாய் லாமாவாக உள்ளார். திபெத்தில் சீன இராணுவ ஆட்சிக்கெதிராய் இடம்பெற்ற கலகத்தின்போது, 1959ம் ஆண்டில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. (AsiaNews)

19 March 2019, 15:04