நோயுற்றோருடன் ஒருமைப்பாட்டை அறிவித்தல் நோயுற்றோருடன் ஒருமைப்பாட்டை அறிவித்தல் 

வாரம் ஓர் அலசல் – 27வது உலக நோயாளர் நாள் பிப்ரவரி 11

நமது உயிராகட்டும், நமது வாழ்வாகட்டும், நமது உடலாகட்டும், நமது குடும்பமாகட்டும், அனைத்துமே நாம் இறைவனிடமிருந்து கொடையாக பெற்றுக்கொண்டவையே.

மேரி தெரேசா – வத்திக்கான் & அ.பணி சார்லஸ்

27வது உலக நோயாளர் நாள், இவ்வாண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் சிறப்பிக்கப்படுகின்றது. பிப்ரவரி 9, கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள மூன்று நாள் நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, பங்களாதேஷ் நாட்டின் டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள் கலந்துகொள்கிறார். இந்த உலக நோயாளர் தினத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி, நோயாளர் மத்தியில் பணியாற்றும் அனுபவம் போன்றவை பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி சார்லஸ் அவர்கள். இவர், குவனல்லா சபை என அறியப்படும் அன்பின் பணியாளர் சபையைச் சேர்ந்தவர்.

நோயாளர் தினம். 110219

கொடையாகவே வழங்குங்கள்

"கொடையாக பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" (மத் 10: 8)

என்ற மத்தேயுவின் நற்செய்தியோடு தொடங்குகிறது திருத்தந்தையின் 27 வது உலக நோயாளர்கள் தின செய்தி.  நாம் வாழ்வில் எதை பெற்றோம் கொடையாக? எதை நாம் கொடுப்போம் கொடையாக என்ற கேள்வி எழுமேயானால், தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வாயிலாக நம்மிடம் எழுப்பும் வினா: உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக்கொண்டது தானா? என்பதுதான். ஆம்.  நமது உயிராகட்டும் (அ) நமது வாழ்வாகட்டும் (அ) நமது உடலாகட்டும் (அ) நமது குடும்பமாகட்டும்... அனைத்துமே நாம் இறைவனிடமிருந்து கொடையாக பெற்றுக்கொண்டவையே.

இந்த "கொடை" என்பதே இலவசமாக எந்தஒரு எதிர்பார்ப்புமின்றி  கொடுக்கப்படுவதுதான்.  ஆகவே இக்கொடை, குறிப்பாக மனித உயிர் ஒரு தனி மனிதச் சொத்து என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைபடக் கூடாது.  அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் கண்ட மனிதனுக்கு வாழ்க்கையை / உயிரை ஒரு பொருளாகப் பார்க்கும் சபலம் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

கொடை

கொடை என்பது இன்றய வீணாக்கும் கலாச்சாரத்திற்கும், மற்றவர்களை கண்டுகொள்ளா மனோபாவத்திற்கும் ஒரு சவாலாக உள்ளது.  அதேசமயம், இது புதிய உறவுகளை ஏற்படுத்தவும் மக்களின் மத்தியிலும், மனதிலும் இணைந்து செல்லும் / இணைந்து பணியாற்றும் கலாச்சாரத்தை விதைக்கிறது.

கொடை என்பது வெறுமனே பொருட்களை கொடுப்பதோ (அ) பொருட்களின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றும் ஒருவருக்கு மாற்றுவதோ மட்டுமல்ல, அதற்கும் மேலாக கொடுப்பவரே கொடையாக மாறுவதாகும், அதன் மூலமாக ஒரு உறவுப் பாலத்தை கட்டமைப்பதுமாகும்.

இதுவே மற்றவர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வதாகும். அதுவே சமூகத்தின் அடிப்படையுமாகும். மானுட வாழ்வில் நாம் பெற்ற கொடைகளிலெல்லாம் பெருங்கொடை இறைவன் தனது மகனை இவ்வுலகிற்கு அனுப்பி தூய ஆவியை இவ்வுலகின்மீது பொழிந்ததுதான்.

திருத்தந்தை கூறுகிறார், நாம் அனைவரும் ஏழைகள், நாம் அனைவருமே தேவையிருப்போர் என்று. அவ்வாறு அவர் கூறக்காரணம், நாம் பிறக்கும்போது நமது பெற்றோரின் பாதுகாப்பும் பராமரிப்பும் நமக்கு தேவைப்படுகிறது. அது போலவே நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் யாரோ ஒருவரை சார்ந்தே வாழவேண்டியுள்ளது. இந்த உண்மையை எப்போது நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்கிறோமோ அப்போதுதான் நாம் தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர முடியும்.  நாம் ஏழைகள், மற்றவர்களை சார்ந்து வாழ்வோர் என்பதை ஏற்றுக்கொள்ள  பயப்பட வேண்டாம்.  ஏனெனில் இறைவனே தனது மகன் இயேசுவின் மானிட பிறப்பின் மூலம் மற்றவர்களைச் சார்ந்து வாழும் வாழ்வை ஏற்றவர். 

இந்த உலக நோயாளர் தின கொண்டாட்டத்திலே நான் புனித அன்னை தெரேசாவை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் நினைவுகூற விரும்புகிறேன் என்கிறார் திருத்தந்தை.  ஏனெனில், அவர் தனது சேவையின் முன்மாதிரியால் ஏழைகளுக்கும் நோயாளர்களுக்கும் அவர் செய்த அன்புப் பணியின் மூலம் இறைவனின் அன்பை இவ்வுலகரியச் செய்தவர். 

அவரது புனிதர் பட்ட விழாவிலே குறிப்பிட்டது போலவே அவர், தனது வாழ்வின் எல்லா வேளைகளிலும் இறைவனின் கருணையை ஏழை எளியவர்களுக்கு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு, கைவிடப்பட்டோருக்கு, மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு காட்டுவதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார்.

அன்னை தெரசா

மேலும் அன்னை தெரசா, தங்கள் வாழ்வை இழந்தவர்களிலும் சாலை ஓரத்தில் அனாதையாக சாவதற்கென விடப்பட்டவர்களிலும் இறைவனின் கொடையான மனித மாண்பை கண்டு அதனை இவ்வுலகின் வலிமையான சக்திகளின் முன் எடுத்துரைத்து அவரிகளின் குற்றத்தை உணரச்செய்தார்.  இறைவனின் கருணையே அன்னை தெரேசாவின் பணிக்கு சுவையூட்டும் உப்பாக விளங்குகிறது.

இதன் மூலம் அன்னை தெரேசா நமக்கு உணர்த்துவது, நமது செயல்களின் ஒரே அளவுகோல் மொழி கடந்து, இனம் கடந்து, மதம் கடந்து நமது அன்பு தன்னலமற்ற அன்பாக அனைத்து மனிதர்களுக்குமானதாக  இருக்கவேண்டும் என்பதே.

அன்பின் தேவையில் இருப்பவர்களுக்கும், மற்றவர்கள் தங்களையும் தங்களது தேவைகளையும் புரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும் குறிப்பாக துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நாம் எவ்வாறு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தர வேண்டுமென்று அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டான வாழ்வு நம்மை வழிநடத்துகின்றது.

முதியோர் இல்லப் பணி அனுபவம் 

அன்பின் பணியாளர்கள் சபையாகிய எனது துறவற சபையில்  நோயாளர்கள், முதியோர், மனநலம் குன்றியோர் (எங்கள் நிறுவனர் தந்தை புனித லூயிஸ் குவனெல்லாவின் வார்த்தையில் சொல்வதானால் இவர்கள் செல்லக் குழந்தைகள் GOOD CHILDREN) ஆகியோருக்குப் நாங்கள் பணி செய்கின்றோம்.    சில ஆண்டுகளுக்கு முன்  நான் எங்கள் சபையால் நடத்தப்படும் நோயாளர் மற்றும் யாருமற்றோருக்கான அடைக்கல இல்லத்தில் பணியாற்றிய போது நான் பெற்ற அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.  அந்த இல்லத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணி அங்குப் பராமரிக்கப்படும் நோயாளர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது, மேலும் செவிலியர் வராத இரவு நேரங்களில் அவர்களோடு இருப்பது. அந்த இல்லத்தில் மெக்ஸ், என்ற இளைஞர் கூடைப்பந்து விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிப்பினால், கைகால்கள் செயல்படமுடியா நிலையில் 24 மணி நேரமும் மற்றவரை சார்ந்து வாழும் நிலையிலிருந்தார்.  மேலும் டெக்ஸ்ட்டர் என்னும் இளைஞரும் நரம்பு சம்பந்தப்பட்டை நோயினால் பாதிக்கப்பட்டு கைகளும் கால்களும் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு தனது பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிறரையே நம்பியிருக்க வேண்டிய சூழலில் இருந்தார்.  அந்த இல்லத்தில் இருந்தவர்களிலேயே இந்த இருவருக்கும் மற்றவர்களின் உதவி அதிகமாக தேவைப்படுவதாக இருந்தது.

எங்கள் நிறுவனர் தந்தை கூறுவது போல, அவர்கள் எங்களுக்கும் எங்கள் சபைக்கும் பெரிய பொக்கிஷங்கள்.  அவர்களே எங்கள் வீட்டின் எஜமானர்கள்.  

ஆகவே, ஒவ்வொரு நாளும் அவர்களோடு இருந்து ஆறுதலான வார்த்தைகளால் அவர்களோடு பேசி, அவர்களுக்கு குளிக்க உதவிசெய்து, உடை உடுத்தி, உணவு ஊட்டி, அவர்களது physiotheraphy ல் அவர்களோடு இருந்து உதவி செய்யும்போது எனக்குத் தெரிய வந்தது என்னவென்றால், அவர்களுக்கு மிகவும் தேவையாக இருந்தது பணமோ, பொருளோ, உணவோ அல்ல மாறாக கனிவாக  கவனிக்கும் காதுகளும், அவர்களைப் புரிந்துகொள்ளும் இதயமுமே.  பல நேரங்களில் அவர்களுக்கு தேவையாயிருந்தது எங்களது உடனிருப்பு.

அவர்களோடு நான் செலவிட்ட ஓர் ஆண்டு இறுதியில் பல நேர்மறையான மாற்றங்களை அவர்களில் நான் காணமுடிந்தது.  உடலளவிலும் முன்னேற்றங்கள் இருந்தன, மன நலத்திலும் நல்ல முன்னேற்றம் இருந்தது. 

திருத்தந்தை தனது செய்தியில் சுகாதாரத்துறையில் உள்ள தன்னார்வ தொண்டர்களைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றார்: உங்களது தாராள மனப்பான்மை பல தொண்டர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பணியாற்றத் தூண்டுகிறது.  சுகாதாரத் துறையில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களான உங்களின் தாராள மனத்தையும், அர்ப்பணிப்பையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

நோயுற்றோருக்கும், முதியோர் இல்லங்களில் வாழ்வோருக்கும் உங்கள் பணியும் ஆன்மீக உதவிகளும் மிக முக்கியமானது.

எண்ணிலடங்கா நோயுற்றோரும், தனிமையில் வாழும் முதியோரும்  மனதளவிலும் உடலளவிலும் நலிந்தோரும் உங்கள் பணியால் பயனடைகின்றனர்.

இந்த உங்கள் அன்புப் பணியை தொடர்ந்து ஆற்றுவதன் மூலமாக, திருச்சபையின் அடையாளமாக விளங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தன்னார்வத் தொண்டர் ஒரு நண்பராக செயல்படுவதன் மூலம், நோயாளிகளின் வாழ்வில் பல பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்து வாழ்வின் பாதையைத் திறக்க முடியும்.

அகில உலகிலும் உள்ள கத்தோலிக்க சுகாதாரத்துறை நிறுவனங்களில் தாராள மனப்பான்மை வளரவேண்டும்.  இவர்கள், இலாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோருக்கும், வஞ்சித்து பொருளீடுபவர்களுக்கும் எதிராக தங்களது எடுத்துக்காட்டான தாராள மனப்பான்மையாலும் அர்பணிப்பினாலும், ஒருமைப்பாட்டு உணர்வினாலும் பதிலளிக்க வேண்டும்.

மேலும், திருத்தந்தை இந்நாளில் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருக்கும் விடும் அழைப்பு, நாம் எந்த நிலையில் இருந்தாலும் தாராள மனதுடன் செயல்படவேண்டும், ஏனெனில் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறுவது போல, முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.  மகிழ்ச்சியான தாராள உள்ளமே நல்ல கிறிஸ்தவருக்கான அடையாளம். ஆகவே, முகமலர்ச்சியோடும், அகமலர்ச்சியோடும் நோய்களின் பிடியில் உழன்றுகொண்டிருக்கும் நமது சக மனிதர்களுக்கு நாம் நம்பிக்கை ஒளியாய் இருப்போம்; அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவோம். நன்றி. (அருள்பணி சார்லஸ், அன்பின் பணியாளர் சபை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2019, 11:43