தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ 

திருஅவைக்குள் பாலியல் குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படாது

அமெரிக்க முன்னாள் கர்தினால் McCarrick மீதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குணமளிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் கர்தினால் Theodore McCarrick அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவரின் அனைத்து குருத்துவப் பணிகளும் தடைச் செய்யப்பட்டுள்ளது, திருஅவைக்குள் பாலியல் குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படாது என்பதை காட்டுவதாக உள்ளது என்றார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ.

மெக்காரிக் அவர்கள், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டார், மற்றும், ஒப்புரவு அருளடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்தினார் என, திருப்பீடத்தின் நிர்வாக குற்றவியல் விசாரணைக்குழு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அவரின் குருத்துவப் பணிகள் அனைத்தும் தடைச் செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் டினார்டோ அவர்கள், எந்த ஓர் அதிகாரியும் திருஅவைச் சட்டங்களுக்கு மேற்பட்டவர் அல்ல என்பதை இந்த முடிவு நிரூபிக்கிறது என்றும், திருஅவையால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, தவறிழைக்கப்பட்டோர் குணம் பெறுவதற்கு உதவும் பாதையில் ஒரு சிறிய படியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, குணமளிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் கர்தினால் டினார்டோ.

மெக்காரிக் அவர்களாலும், ஏனைய சில திருஅவை அதிகாரிகளாலும், பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்ட அனைவருக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதாகவும், தன் இதயத்திலிருந்து எழும் மன்னிப்பை மீண்டும் ஒருமுறை முன்வைப்பதாகவும் எடுத்துரைத்தார், அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டினார்டோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2019, 15:53