UISG கூட்டம் UISG கூட்டம் 

திருத்தந்தையின் சிறியோர் பாதுகாப்பு முயற்சிக்கு துறவு சபைகள்

உலகில் ஏராளமான சூழல்களில், சிறார் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்படல், புறக்கணிக்கப்படல், தவறாக நடத்தப்படல், விரும்பப்படாமை, சிறார் படைவீரர்கள் போன்றவற்றை, துறவிகள் தங்கள் மறைப்பணிகளில் காண்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் சிறியோரின் பாதுகாப்புக்கு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும், உலகளாவிய இருபால் துறவு சபைகளின் தலைவர்கள் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், பிப்ரவரி 21, வருகிற வியாழனன்று தொடங்கவிருக்கும் முக்கியமான கூட்டத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள இருபால் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு, சிறியோர், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தவறாக நடத்தப்பட்டால், அது தவறு மற்றும் அது எதனாலும் நியாயப்படுத்தப்பட முடியாதது எனக் கூறியுள்ளது.

உலகெங்கும், ஏராளமான சூழல்களில், சிறார் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்படல், புறக்கணிக்கப்படல், தவறாக நடத்தப்படல், விரும்பப்படாமை, சிறார் படைவீரர்கள் போன்றவற்றை, துறவிகளாகிய நாங்கள், எங்கள் மறைப்பணிகளில் காண்கின்றோம் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.     

நம் சமுதாயங்களில் சிறாரே, மிகவும் நலிந்தவர்கள் என்றும், ஏழ்மை, மாற்றுத்திறன், கைவிடப்பட்ட நிலை, சமுதாயத்தின் விளிம்பில் வாழும் நிலை, பிற்படுத்தப்பட்ட சாதிகள் போன்றவற்றில் வாழும் சிறாரே, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் அவ்வறிக்கை உரைக்கின்றது.

திருஅவையில் இடம்பெறும் சிறார் பாலியல் முறைகேடுகள் பற்றியும் கூறும் அவ்வறிக்கை, இந்த மூன்று நாள் கூட்டத்தில் துறவு சபை தலைவர்களின் எதிர்பார்ப்பு பற்றியும், திருஅவையிலும், பரந்துபட்ட சமுதாயத்திலும் சிறார் பாதுகாக்கப்பட, வித்தியாசமான கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்றும் கூறுகின்றது.

திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற தலைப்பில், பிப்ரவரி 21, வருகிற வியாழனன்று வத்திக்கானில் தொடங்கவிருக்கும் கூட்டம், பிப்ரவரி 24 வருகிற ஞாயிறன்று முடியும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2019, 15:41