தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் வின்சியோ ரீவா அவர்களை அணைத்து நிற்கும் காட்சி திருத்தந்தை பிரான்சிஸ் வின்சியோ ரீவா அவர்களை அணைத்து நிற்கும் காட்சி 

ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு - 3

வின்சியோ ரீவா அவர்களின் நோய், தொற்றுநோயா என்பதை அறியாமல், திருத்தந்தை அவரை அணைத்து முத்தமிட்டது, பலருக்கு அச்சத்தையும், கேள்வியையும் உருவாக்கியிருக்கும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு - 3

53 வயதான வின்சியோ ரீவா (Vincio Riva) என்ற இத்தாலியருக்கு, 2013ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அன்று, அவர், வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைகல்வி உரையில் கலந்துகொள்ள, தன் அத்தை கேத்தரீனா அவர்களுடன் வந்திருந்தார்.

அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வின்சியோ அவர்களை அணைத்து, முத்தமிட்டு, ஆசீர் வழங்கிய காட்சி, உலக ஊடகங்களில், ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. காரணம் என்ன? வின்சியோ அவர்கள், neurofibromatosis என்ற அரியதொரு நோயால் பாதிக்கப்பட்டு, உடலெங்கும், குறிப்பாக, முகமெங்கும் கொப்பளங்கள் நிறைந்த விகாரத்தோற்றம் கொண்டவர்.

15 வயதில், வின்சியோ அவர்களை இந்நோய் தாக்கியதையடுத்து, அவரைக் கண்டு ஒதுங்கிச் சென்ற, காண மறுத்த மக்களால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் வேதனைகளை அனுபவித்துள்ளார். அந்த நோய்க்குப் பின், தன் தந்தையும் தன்னை அணைத்ததில்லை என்று, வின்சியோ அவர்கள், ஊடகங்களிடம் கூறினார்.

புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் ஆசீரை தூரத்திலிருந்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் வின்சியோ அவர்கள் அங்கு வந்தார். ஆனால், திருத்தந்தை, வின்சியோ அவர்களைக் கண்டதும், அவரை தன் மார்போடு அணைத்து முத்தமிட்டது, அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் நிகழ்ந்த இந்த அணைப்பைக் குறித்து, வின்சியோ அவர்கள் பேட்டியளித்தபோது, "நான் விண்ணகத்தில் இருந்ததைப்போல் உணர்ந்தேன். எனக்கிருந்த வியாதி, தொற்று வியாதியா, இல்லையா என்பதை அறியாத திருத்தந்தை, அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், என்னை அணைத்து, என் முகத்தில் முத்தமிட்டபோது, என் உள்ளத்திலிருந்து பெரியதொரு பாரம் கரைந்ததைப் போல் இருந்தது. இறைவன் என்னைக் காக்கின்றார் என்ற உறுதியுடன், நான் இனி என் வாழ்வைத் தொடரமுடியும்" என்று கூறினார்.

புனித பேதுரு வளாகத்திலிருந்து அவர் புறப்பட்ட நேரத்தில், தன் அத்தையிடம், “இதோ, இந்தக் கணத்தில், இந்த வளாகத்தில், நான் என் வேதனைகளையெல்லாம் விட்டுவிட்டு புறப்படுகிறேன்” என்று கூறினார். சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பைக் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது அத்தை கேத்தரீனா அவர்கள், "திருத்தந்தை அவர்கள், வின்சியோவை அணைத்து நின்றதைக் கண்டபோது, அவர், அவரை கைவிடப் போவதில்லை என்பதை உணர முடிந்தது" என்று கூறினார்.

நவம்பர் 6ம் தேதி நிகழ்ந்த இச்சந்திப்பை, ஊடங்களில் கண்ட மற்றொரு இத்தாலியர், இரு வாரங்கள் சென்று, நவம்பர் 20ம் தேதி நிகழ்ந்த புதன் பொது மறையுரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்குச் சென்றார். 60 வயது நிறைந்த ஒரெஸ்தே தொர்னானி (Oreste Tornani) அவர்கள், 30 வயது இளைஞனாக இருந்தபோது, அவருக்கும், வேறு இருவருக்கும் நிகழ்ந்த ஒரு மோதலில், தொர்னானி அவர்களின் முகத்தில் குண்டடிபட்டது. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், அவர், தன் முகத்தை பெருமளவு இழந்தார். அருவருப்பூட்டும் அவரது முகத்தைக் கண்டு, அவரை விட்டு விலகிச் சென்றவர்களே அதிகம். எனவே அவர், மனிதர்களைச் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். வின்சியோ ஆவர்களை திருத்தந்தை அணைத்து முத்தமிட்டதை ஊடகங்கள் வழியே அறிந்த தொர்னானி அவர்கள், திருத்தந்தையைச் சந்திக்க பேதுரு வளாகத்திற்குச் சென்றார். அவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புடன் பேசி, அவரை அணைத்து, ஆசீர்வதித்தார்.

இவ்விரு நிகழ்வுகளும் ஊடகங்களில் வெளிவந்தபோது, இலட்சக்கணக்கான மக்கள் திருத்தந்தையின் பரிவுள்ள உள்ளத்தைப் பாராட்டினர். ஒரு சிலரோ, அவர், இன்னும் சிறிது கவனமாக இருக்கலாமே என்ற பாணியில் சிந்தித்தனர். குறிப்பாக, வின்சியோ ரீவா அவர்களின் நோய், தொற்றுநோயா என்பதை அறியாமல், திருத்தந்தை அவரை அணைத்து முத்தமிட்டது, பலருக்கு அச்சத்தையும், கேள்வியையும் உருவாக்கியிருக்கும்.

தொழுநோயாளர் ஒருவர், இயேசுவை அணுகியபோது, இத்தகைய அச்சம் அங்கும் நிலவியது. இயேசுவை அணுகிவந்த தொழுநோயாளரைக் கண்டதும், கூட்டத்தினர், பயந்து, அலறி, இயேசுவின் பக்கம் திரண்டிருக்க வேண்டும். அவர்களில் பலர், கோபத்தில், அங்கிருந்த கற்களைத் திரட்டியிருக்க வேண்டும். சூழ இருந்தவர்களை ஆக்ரமித்த அச்சமும், வெறுப்பும், இயேசுவைப் பாதிக்கவில்லை. அவர், அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி, தொழுநோயாளரை நோக்கிச் சென்றார்.

இயேசு, தூரத்தில் நின்றவாறு ஒரு சொல்லால் அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, மாற்கு 1: 41-42

இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இயேசுவின் இந்தச் செயல், சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, கூட்டத்தில் இருந்தோரும் குணம்பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, சகமனிதர்களை, மிருகங்களிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு தொழுநோயாளியைத் தொட்டார். இயேசுவின் தொடுதலால், தொழுநோயாளி குணமானார். அதே தொடுதலால், இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும், ஓரளவாகிலும் குணமாகி இருக்கவேண்டும்.

தொழுநோயாளர் நலமடைந்ததும், இயேசு அவரிடம் கூறும் சொற்கள், ஒரு சில சிந்தனைகளை எழுப்புகின்றன.

மாற்கு 1: 43-44

இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

மோசே எழுதிவைத்த சட்டத்தின்படி, தொழுநோய் நீங்கிவிட்டதென்பதை உறுதி செய்வதற்கு, குருக்களுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. இந்த நோய் உருவானதும், அதை உறுதி செய்து, நோயுற்றவரை, 'தீட்டுடையவர்' என்று முடிவு செய்வது குருவே (லேவியர் 13:3). 'தீட்டுடையவர்' என்று தீர்மானிக்கப்பட்டத் தொழுநோயாளர், சமுதாயத்திலிருந்து வெளியேறி, தனித்து வாழவேண்டும்.

அவர் தொழுநோயிலிருந்து குணமானதும், மீண்டும் ‘தீட்டு அகற்றப்பட்டவர்’ என்பதை உறுதி செய்யும் அதிகாரம், குருவுக்கே இருந்தது. தீட்டகற்றும் காணிக்கை, குளியல் போன்ற வழிமுறைகள், லேவியர் நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது (லேவியர் 14:1-32). எனவே, இயேசு, தொழுநோயிலிருந்து குணமானவரை குருவிடம் செல்லும்படி கண்டிப்பாகக் கூறி அனுப்பினார். ஆனால், குணமான நோயாளி, இயேசு கூறியவற்றைப் பின்பற்றவில்லை என்பதையும், அதனால் இயேசுவுக்கு நேர்ந்த இக்கட்டான நிலையையும் நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:

மாற்கு 1: 45

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த இறைவாக்கியத்தில், நற்செய்தியாளர் மாற்கு பயன்படுத்தியுள்ள ஆனால் என்ற முதல் சொல், ஓர் உண்மையை தெளிவாக்குகிறது. அதாவது, குணம் பெற்ற நோயாளியிடம், இயேசு, "இதை யாருக்கும் சொல்லவேண்டாம்", "நீர் போய் உம்மை குருவிடம் காட்டும்" என்ற இரு கட்டளைகளைத் தந்தார். ஆனால், குணமடைந்தவரோ, இவ்விரு கட்டளைகளையும் பின்பற்றவில்லை. அதற்கு மாறாக, "இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்". அதனால், இயேசுவுக்கு சில சங்கடங்கள் உருவாயின.

இந்தப் புதுமையின் ஆரம்பத்தையும், முடிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஓர் அழகிய உண்மை தெளிவாகிறது. புதுமையின் ஆரம்பத்தில், மக்கள் நடுவே நடமாட இயலாமல், ஊருக்கு வெளியே வாழ்ந்துவந்த தொழுநோயாளர், இயேசுவை அணுகினார். ஆனால், அவர் குணம் அடைந்ததும், "இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பியதால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியாமல், ஊருக்கு வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார்". இயேசு, ஏறத்தாழ, அந்த தொழுநோயாளரின் நிலைக்கு உள்ளானார்.

உலகின் பாவங்களை, நோய்களை, தன் மீது ஏற்றுக்கொண்டு, நோயுற்றோர் அடைந்த இன்னல்களை தன் துயரங்களாக மாற்றவே  இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை, நற்செய்தியாளர் மாற்கு, இப்புதுமை வழியே, மறைமுகமாகக் கூறியுள்ளதுபோல் தெரிகிறது.

ஒத்தமை நற்செய்திகளான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்றிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த பொதுவான புதுமை, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் புதுமை. இப்புதுமையில், நம் தேடல் பயணத்தை, அடுத்த வாரம் மேற்கொள்வோம்.

19 February 2019, 14:31