Cerca

Vatican News
மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்பதை தங்கள் அறவழி போராட்டத்தில் கடைபிடித்த காந்தியடிகள் மற்றும் மார்ட்டின் லூத்தர் கிங் மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்பதை தங்கள் அறவழி போராட்டத்தில் கடைபிடித்த காந்தியடிகள் மற்றும் மார்ட்டின் லூத்தர் கிங் 

பொதுக்காலம் 7ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இயேசு இன்றைய நற்செய்தியில், "பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம்" என்று, சவால்களை அடுக்கி வைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 7ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நம்மில் எத்தனை பேர், அவ்வப்போது, கடவுளைப்போல் மாற விழைகிறோம், அல்லது, கடவுளை, நம்மைப்போல் மாற்ற விழைகிறோம்? நமக்கெதிராக பிறர் தவறிழைக்கும்போது, நம்மை அவமானப்படுத்தும்போது, கோபமும், பழிவாங்கும் உணர்வுகளும், நம்முள் பொங்கி எழுகின்றன. அந்த உணர்வுகளை நியாயப்படுத்த, கடவுளையும் நம்மோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறோம். கடவுளைப் போன்ற சக்தி நமக்கிருந்தால், அல்லது, கடவுள் நம் பக்கமிருந்தால், நம் பகைவர்கள் அழிந்துபோவர் என்று நாம் எண்ணிப்பார்க்கிறோம்.

'நியாயம்' என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இவ்வெண்ணங்களை உறுதிசெய்யும் வண்ணம், நம் மதங்களில், பழி தீர்க்கும் தெய்வங்கள் உள்ளனர். கிரேக்கக் கடவுள் சீயுஸ் (Zeus), ஜெர்மானியக் கடவுள் தோர் (Thor), கரங்களில், இரத்தம் தோய்ந்த வாள், சூலாயுதம் ஆகியவற்றைத் தாங்கி, நிற்கும் காளி (Kali) தேவதை... என, பழிதீர்க்கும் கடவுள், பல வடிவங்களில் இருக்கிறார்.

"பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன" (இணைச்சட்டம் 32:35, உரோமையர் 12:19, எபிரேயர் 10:30) என்று கூறும் கடவுளையும், தீமை செய்த மனிதர்களை, வெள்ளத்தினாலும், நெருப்பினாலும் அழிக்கும் கடவுளையும் விவிலியத்தில் சந்திக்கிறோம்.

நம் பழமொழிகளில், தண்டனை வழங்கும் கடவுளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடுகிறோம். "அரசன், அன்று கொல்வான்; தெய்வம், நின்று கொல்லும்" என்ற பழமொழியில், பொறுமையாக, ஆனால், நிச்சயமாக, இறைவன் தண்டனை வழங்குவார் என்று கூறி சமாதானம் அடைகிறோம்.

பழிக்குப் பழி, அல்லது, தவறு செய்வோரைத் தண்டிப்பது, மனிதருக்குள்ள இயல்பு என்ற கருத்தோடு நின்றுவிடாமல், அத்தகையப் பண்பு, இறைவனிடமும் உள்ளது என்று சொல்லும் அளவு, நம் மதங்களும், மரபுகளும் பாடங்கள் சொல்லித்தரும் வேளையில், இன்றைய ஞாயிறு வாசகங்கள், இந்த எண்ணங்களுக்கு சவால்களாக ஒலிக்கின்றன.

தன் கண்முன் உறங்கிக்கொண்டிருக்கும் எதிரியைக் கொல்லாமல், அமைதியாகச் செல்லும் தாவீதை, இன்றைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23) சந்திக்கிறோம்.

தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து, திரிந்த மன்னன் சவுல், களைப்புற்று, ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. இதைக் கண்ட தாவீதின் மனதில் கட்டாயம் போராட்டம் எழுந்திருக்கும். அவருடைய போராட்டத்தை இன்னும் கடினமாக்கும்வண்ணம், அவருடன் சென்ற தோழர் அபிசாய், "இந்நாளில், கடவுள், உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால், இப்பொழுது, நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்" (1 சாமு. 26:8) என்று கூறுகிறார்.

உறங்கும் எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, கொலை செய்ய தயாராக இருந்த கூலிப்படை என, அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தாலும், தாவீது, சரியான முடிவெடுக்கிறார். பழிக்குப்பழி என்ற உணர்வால் மட்டும் தாவீது ஆட்கொள்ளப்பட்டிருந்தால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை, இறைவன் தந்த அடையாளமாக எடுத்துக்கொண்டு, சவுலைக் கொன்றிருக்கலாம். ஆனால், மன்னன் சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் சென்றார், தாவீது. அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியை தன்னுடன் எடுத்துச்சென்றார் தாவீது. அவர் தூரத்திலிருந்து எழுப்பிய குரலால், தூக்கம் கலைந்து, கண்விழித்த மன்னன் சவுல், தாவீதின் குரலைக் கேட்டதும், அவரைக் கொல்லும் வெறியுடன் தன் ஈட்டியைத் தேடியிருக்க வேண்டும். அதே ஈட்டியை, சமாதானத்தின் அடையாளமாக மாற்ற விழைந்த தாவீது, அவரிடம் பேசினார்.

1 சாமுவேல் 26: 22-23

தாவீது, "அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதை கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை" என்றார்.

"உம்மேல் நான் கை வைக்கவில்லை" என்று தாவீது கூறும் சொற்களை, "உமக்கெதிராக என் கரத்தை உயர்த்தவில்லை" என்று ஒரு சில மொழிபெயர்ப்புகளில் காண்கிறோம். பகைவருக்கு எதிராக, அவர்களை அழிக்க கரங்களை உயர்த்துவதற்குப் பதில், அவர்களை அரவணைக்க, ஆசீர்வதிக்க, நாம் கரங்களை உயர்த்தவேண்டும் என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய நற்செய்திப்பகுதி, (லூக்கா 6:27-38) சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. சமவெளிப்பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள பகுதியில், இயேசு கூறும் அறிவுரைகளைக் கேட்கும்போது, 'இவை, ஏட்டளவில் மட்டுமே பதிவுசெய்து, பத்திரப்படுத்தக்கூடிய அறிவுரைகள்; நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள்' என்று முடிவுகட்ட, இவ்வுலகம் நமக்குச் சொல்லித்தருகிறது.

'பகைவருக்குப் பகைமை; வெறுப்போருக்கு, வெறுப்பு; சபிப்போருக்குச் சாபம்' என்பது, இவ்வுலகம் சொல்லித்தரும் மந்திரம். ஆனால், இயேசு இன்றைய நற்செய்தியில், "பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி..." என்று சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கி வைக்கிறார்.

'மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' (லூக்கா 6:29) என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.

'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும், ஒரு நாள், வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று, காந்தி அவரிடம் சொல்வதாக, அக்காட்சி அமைந்தது. இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்.

மலைப்பொழிவில் இயேசு கூறிய சவால்களை தன் வாழ்வில் பின்பற்ற முயன்ற காந்தியடிகள், "கண்ணுக்குக் கண் என்று உலகத்தில் எல்லாரும் வாழ்ந்தால், உலகமே குருடாகிப்போகும்" என்று சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதை, அல்லது, "துஷ்டனைக் கண்டால், தூர விலகு" என்று நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதை கடைபிடிக்கலாமே!

துஷ்டனைக் கண்டு நாம் தூர விலகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறுவதற்குத் தேவையான வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித்தருகிறார். மறுகன்னத்தைக் காட்டும்போது, மேலுடையுடன் அங்கியையும் சேர்த்துத் தரும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

மறுகன்னத்தைக் காட்டுதல், மேலாடையுடன் அங்கியை வழங்குதல் என்ற செயல்களால் பிறருக்குள் உருவாகும் மாற்றங்களைக் கூறும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று:

2008ம் ஆண்டு, நியூயார்க் நகரில், கடும் குளிர் நிலவிய ஓர் இரவில், Subway இரயிலில் ஜூலியோ டயஸ் என்ற இளையவர் பயணம் செய்துகொண்டிருந்தார். தனது இரயில் நிலையம் வந்ததும் இறங்கி நடந்தார். அந்த நடைமேடையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. அந்நேரம், இளைஞன் ஒருவன், பின்புறமாய் வந்து, ஜூலியோவின் முதுகில் ஒரு கத்தியை வைத்து, அவரது பர்ஸைப் பறித்தான். அவன் ஜூலியோவைத் தாண்டி முன்னே சென்றபோது, ஜூலியோ அவனிடம், "நண்பா, ஒரு நிமிடம். நீ ஒன்றை மறந்துவிட்டாய். இன்றிரவு, இன்னும் ஒரு சிலரை மிரட்டி நீ பணம் பறிப்பதாக இருந்தால், உனக்கு இது தேவைப்படும்" என்று கூறி, ஜூலியோ, குளிருக்காக, தான் அணிந்திருந்த மேல் 'கோட்'டை கழற்றி, அவனிடம் நீட்டினார்.

அதைப் பார்த்ததும் இளைஞனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?" என்று தட்டுத் தடுமாறி பேசினான். ஜூலியோ அவனிடம், "இவ்வளவு 'ரிஸ்க்' எடுத்து, நீ பணம் திரட்டவேண்டும் என்றால், உண்மையிலேயே உனக்கு பணம் அதிகத் தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். இன்றிரவு, நீ சந்திக்கப் போகும் ஆபத்துக்களில், குளிர் என்ற அந்த ஆபத்தையாவது நான் குறைக்கலாமே. அதனால், இதை அணிந்துகொள்" என்றார். இளைஞன் நெகிழ்ந்துபோய் நின்றபோது, அவனை, உணவருந்த அழைத்துச் சென்றார், ஜூலியோ. உணவு முடிந்து, பில் வந்தபோது, "நீதான் பணம் கட்டவேண்டும். என் பர்ஸ் உன்னிடம் தான் உள்ளது" என்று ஜூலியோ சொன்னதும், இளைஞன் அவரிடம் பர்ஸைக் கொடுத்தான். ஜூலியோ,  அவனுக்கு, மேலும் ஒரு 20 டாலர்கள் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இளைஞன் தனக்கு ஏதாவது தர வேண்டுமென்று அவர் கேட்டபோது, இளைஞன், தன்னிடம் இருந்த கத்தியை ஜூலியோவிடம் கொடுத்தான்.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில், ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி, நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே.

பிப்ரவரி 14, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலிகள் இன்னும் அடங்கவில்லை. பழிக்குப் பழி என்ற ஒரு மந்திரத்தையே முன்வைக்கும் இந்த முயற்சிகளில், பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் நதி நீரையும் நிறுத்திவிடும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறியும்போது, நம் சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்புக் கலாச்சாரத்தைக் கண்டு, வேதனையடைகிறோம். பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும், இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, சிறுவர்கள், சிறுமிகள், அருள் சகோதரிகள் என, வலுவற்றோர் பலருக்கு எதிராக, திருஅவையிலும், இவ்வுலகத்திலும் நிகழும் பாலியல் கொடுமைகளை களையும் நோக்கத்தில், 'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' என்ற தலைப்பில், கடந்த மூன்று நாள்களாக வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கூட்டம், இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கொடுமையைச் செய்தவர்கள், அதற்குரிய விளைவுகளை ஏற்று, தங்கள் தவறுகளை உணர்ந்து, மனம் மாறி வாழவேண்டும் என்று செபிப்போம். அதைவிட முக்கியமாக, இந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிக்கும் மனதைப் பெற்று, தங்கள் காயங்களை ஆற்றும் வலிமை பெறவேண்டும் என்று, இறைவனிடம் உருக்கமாக வேண்டுவோம்.

23 February 2019, 14:52