Cerca

Vatican News
இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். - லூக்கா 5,10 இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். - லூக்கா 5,10 

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவரும் உண்மையானத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை, இன்றைய மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மேடைகளில், குறிப்பாக, அரசியல் மேடைகளில் பேசுவோர், கூட்டத்தைக் கண்டு, அங்கு எழும் கரவொலியைக் கேட்டு, நிலை தடுமாறி, பேசுவதைப் பார்த்திருக்கிறோம். நல்லவேளையாக, நம் கோவில்களில், வழிபாட்டு நேரங்களில், மறையுரை நிகழும் வேளையில், பொதுவாக, கரவொலிகள் எழுவதில்லை. இருந்தாலும், ஒரு சில வேளைகளில், மறையுரை வழங்குவோரும் நிலை தடுமாறி, மிகைப்படுத்திப் பேசுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது.

இயேசுவின் திருமுழுக்கைப் பற்றி மறையுரை வழங்கிய ஒருவருக்கு இவ்வாறு நிகழ்ந்தது. அவர், தன் மறையுரையில், இயேசு, திருமுழுக்கு பெற்றபோது காட்டியப் பணிவைப்பற்றி மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிக்க நினைத்தார். இயேசுவைக் காட்டிலும், அவருக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான், எவ்வளவோ சிறியவர் என்றாலும், இயேசு, அவருக்கு முன் பணிந்து நின்றதை, பல வழிகளில் விவரித்தார். அந்த மறையுரையின் இறுதியில், உணர்வுப்பூர்வமான சிறு செபத்தையும் அவர் கூறினார். "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்ற வேண்டுதலுடன் அவர் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இது மிகவும் ஆபத்தான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர், நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே, நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அத்தகையப் பெருமிதமான எண்ணங்களுடன், அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும் என்று சொன்ன அதே மூச்சில், போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.  

பணிவைப் பற்றிய தெளிவான எண்ணங்கள் இல்லாதபோது, இவ்விதம் அரைகுறை கருத்துக்கள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன. பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே, நம்மிடையே உள்ள பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது உண்மையான பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள, போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.

கதாசிரியராக, கவிஞராக, இறையியல் பேராசிரியாக விளங்கிய C.S.Lewis அவர்கள், ஈராண்டுகள், BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து, Mere Christianity - குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன: "எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். அதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார்.

பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல், போட்டிப் போடுதல் என்பவைக் குறித்து அழகாக விவரிக்கிறார்: “வேறுபல குறையுள்ள மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இணைந்துவந்து மகிழ்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால், அகந்தையில் ஊறிப் போனவர்கள் சேர்ந்துவருவது இயலாதச் செயல். அப்படியே சேர்ந்துவந்தாலும், அவர்களில் யார் மிக அதிக அகந்தை உள்ளவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும்” என்று C.S.Lewis அவர்கள் கூறியுள்ளார். இந்தப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

அகந்தைக்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். “தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பித்து, அடக்கமுடைமை என்ற பண்பை அழகிய பத்து குறள்களாக நமது சிந்தையில் பதிக்கிறார், திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவரும் உண்மையானத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை, இன்றைய மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.

முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் காணும் எசாயா கூறும் வார்த்தைகள் இவை: தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான். - எசாயா 6:5

இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் புனித பவுல், இறுதியாக, தனக்கும் தோன்றினார் என்று கூறுவதை, இரண்டாம் வாசகத்தில்,  இவ்வாறு வாசிக்கிறோம்: எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். - 1 கொரி. 5:8

இயேசு, பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை நடுப்பகலில் மீன்பிடிக்கச் சொன்ன நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள இக்காட்சியை நாம் சிறிது அசைபோடுவோம். - லூக்கா நற்செய்தி  5 : 1-3

முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் சீமோன். தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைந்தது. நிமிர்ந்து பார்த்த அவருக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபமும் கூட இருந்திருக்கும். முன்பின் தெரியாத ஒரு புது மனிதர், அவரது படகில், அவரது உத்தரவின்றி ஏறியிருந்தார்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். இந்த நுழைவு, நல்ல விளைவுகளை உருவாக்கினால், வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு மலரும். இந்த நுழைவு, தேவையற்ற ஒரு குறுக்கீடாக அமைந்தால், பிரச்சனைகள் என்ற களைகள், வெட்ட, வெட்ட வளரும்.

உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார். தன் படகிலிருந்து இயேசு போதித்தவற்றை, சீமோனும் கேட்டார். தன்னுடைய சொந்தக் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில், இயேசுவின் வார்த்தைகள், மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன.

போதனைகள் முடிந்த கையோடு, "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போகும்படி" (லூக்கா 5:4) இயேசு கட்டளையிடுகிறார். இயேசு விடுத்த இந்தக் கட்டளையைக் கேட்டு, சீமோனும், அவரைச் சுற்றியிருந்தோரும் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது, இயேசுவின் கட்டளை.

சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி சொல்லியிருக்கலாம்: "ஐயா, இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என்ன செய்வதென்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று, பேதுரு, தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்; மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும், இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும் இவ்விதம் சொல்கிறார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். (லூக்கா 5:5)

சீமோனின் நம்பிக்கை வீண்போகவில்லை. 'வலைகள் கிழியும் அளவுக்கு' மீன்கள், அந்தப் பகல் நேரத்தில் பிடிபட்டன. மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் சொல்லும், செயலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். (லூக்கா நற்செய்தி  5:8)

இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து, தங்களைப்பற்றி சரியாகப் புரிந்துகொண்டதால் உருவான உள்ளார்ந்தப் பெருமையிலிருந்து இவ்வாறு பேசினர். தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி, அல்லது, பணிவு என்பது, உள்ள நிறைவிலிருந்து, உண்மையான பெருமையிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.

தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும் பரிதாபமாக போலித்தாழ்ச்சியுடன், போலிப்பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும்.

அகந்தையால் உருவாகும் போலிப் பணிவைப்பற்றி கூறும் ஒரு கதை இது:

தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பதுபோல் நடித்துக்கொண்டு, அந்த ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு, பிறகு, அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், அவர் தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்குவது, அவனது கடமை. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட நான் குறைந்துபோக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். என்னைவிட உயர்ந்துவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும், என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?" அரசன் தந்த விளக்கத்தைக் கேட்டு, அமைச்சர் வாயடைத்து நின்றார்.

உண்மையான பெருமையையும், பணிவையும் கலந்து வாழ்ந்த சாதனையாளர்களை நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான, அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான் இன்னும் அதிக தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல் ஏறிநின்றேன். இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற எசாயா, பவுல், பேதுரு ஆகியோர், இன்றைய வாசகங்கள் வழியே சொல்லித்தரும் பணிவுப் பாடங்களை நம் வாழ்வில் பயில முயல்வோம்.

09 February 2019, 14:48