தேடுதல்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. 1 கொரிந்தியர் 13:13 நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. 1 கொரிந்தியர் 13:13 

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

'அன்பு இல்லையெனில் நான் ஒன்றுமில்லை' (1 கொரி. 13:2) என்று, தன் அன்புப்பாடலை ஆரம்பிக்கும் புனித பவுல், உணர்த்த விரும்பிய 'அன்பு', பல சவால்களை முன்னிறுத்துகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று, நண்பர் ஒருவர், 'வாட்ஸப்' வழியே வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். 'அன்பின் மாதம் பிப்ரவரி மலர்ந்துள்ளது! மலர்ந்த மாதத்தின் முதல் நாள், அன்பான உங்களுக்கு, அன்பான காலை வணக்கம்' என்று அச்செய்தி கூறியது. 'அன்பு' என்ற சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி, அன்பைப் பரப்ப முயலும் செய்தி இது. 'அன்பு' என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி, அதன் உண்மையான ஆழத்தை உணராமல் போய்விட்டோமோ என்ற ஐயம் எழுகிறது.

இம்மாதத்திற்கு சூட்டப்பட்டுள்ள 'பிப்ரவரி' (February) என்ற பெயர், 'Februa' என்ற உரோமையச் சடங்கிலிருந்து உருவானது. இச்சடங்கு, உரோமையப் பேரரசில், தூய்மைப்படுத்தும் சடங்காகக் கடைபிடிக்கப்பட்டது. எனவே, இம்மாதத்தை, 'தூய்மைப்படுத்தும் மாதம்' என்றழைப்பது பொருத்தமாக உள்ளது. அதற்குப் பதிலாக, இதை, 'அன்பின் மாதம்' என்றழைக்க காரணம், இம்மாதத்தின் நடுவில் நாம் கொண்டாடும் 'வேலன்டைன் நாள்'. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இந்நாளை, வர்த்தக உலகம், 'காதலர் தினம்' என்று விளம்பரப்படுத்தி, விற்பனை செய்து வருகிறது. இந்த விளம்பரங்களின் தாக்கத்தால், பிப்ரவரி மாதத்தை, 'அன்பின் மாதம்' என்று எளிதில் பெயர்சூட்டி விடுகிறோம்.

'காதலர் தின'த்தை மூலதனமாக்கி, வர்த்தக உலகம் விற்பனை செய்யும் 'காதல்' அல்லது, 'அன்பு', அழகான, ஆடம்பரமான, இன்னும் சொல்லப்போனால், கவர்ச்சி மிகுந்த ஓர் உணர்வாக விற்கப்படுகிறது. மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுகள் என்று விற்பனை செய்யப்படும் இந்த அன்பில், உண்மையான அன்புக்குரிய பல சவால்கள் மறைக்கப்பட்டுள்ளன.

உண்மையான அன்பின் இலக்கணத்தை உணர்வதற்கு, திருத்தூதர் பவுல் வழங்கும் 'அன்புக்குப் பாடல்' (“Hymn to Love”) என்ற பகுதி பெரும் உதவியாக உள்ளது. கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில் காணப்படும் இப்பகுதி, இந்த ஞாயிறன்று, 2வது வாசகமாக நம்மை அடைந்துள்ளது. இப்பாடலின் துணையுடன், நம் வாழ்வின் உயிர்நாடியான அன்பைப் பற்றிய எண்ணங்களைத் 'தூய்மைப்படுத்த' முயல்வோம்.

அன்பின் உன்னதப் பண்புகளைக் கூறும் இப்பாடலை, திருமணம் மற்றும் துறவற வாழ்வைச் சிறப்பிக்கும் திருப்பலிகளிலும், ஏன், ஒரு சில வேளைகளில், அடக்கத் திருப்பலிகளிலும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்தும்போது, இப்பாடலை, அது எழுதப்பட்டச் சூழலிலிருந்து பிரித்தெடுத்து, ஒரு மேற்கோளாக மட்டும் வாசிப்பதால், இப்பாடல் வழியே, புனித பவுலடியார் முன்வைக்கும் சவால்களை உணர வாய்ப்பில்லாமல் போகலாம். திருத்தூதர் பவுல், இப்பாடலை, கொரிந்து நகரத் திருஅவைக்கு அனுப்பிய வேளையில், அது, அவர்களுக்கு, ஒரு சாட்டையடியாக இருந்திருக்கும்.

கொரிந்து நகரத் திருஅவை உறுப்பினர்கள், தங்கள் நடுவே, யாருக்கு இறைவனின் தனிப்பட்ட வரங்கள் அதிகம் உள்ளன என்பதைக் கணக்கிடும் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். அத்தகையப் போட்டிகளைக் கண்டனம் செய்த பவுலடியார், மண்ணோரின் மொழிகளிலும், வானதூதரின் மொழிகளிலும் பேசுதல்; இறைவாக்கு உரைத்தல்; மறைபொருள் அனைத்தையும் அறிந்திருத்தல்; மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவு நம்பிக்கை கொண்டிருத்தல் (காண்க. 1 கொரி. 13:1-2) என்ற பல உயர்ந்த வரங்களை பெற்றிருந்தாலும், 'அன்பு இல்லையெனில் நான் ஒன்றுமில்லை' (1 கொரி. 13:2) என்று, தன் அன்புப்பாடலை ஆரம்பிக்கிறார். அவர் உணர்த்த விரும்பிய 'அன்பு', பல சவால்களை முன்னிறுத்துகிறது.

1 கொரி. 13:4-7

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

அன்புப்பாடல் வழியே திருத்தூதர் பவுல் முன்னிறுத்தும் சவால்கள், இன்றைய உலகிற்கும், நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான சவால்கள். பிளவுகளை, பிரிவுகளை, உருவாக்கி, சுவர்களை எழுப்பி, வெறுப்பையும், வன்முறைகளையும் வெவ்வேறு வடிவங்களில் தூண்டிவிட்டு, இவை அனைத்தையும் நியாயப்படுத்தும் முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். பிரிவினை எண்ணங்களை, இறைவன் பெயராலும், மதங்களின் பெயராலும் வளர்ப்பது, வேதனை தரும் உண்மை.

இத்தகையைச் சூழலில், திருத்தூதர் பவுல் வழியே, இன்று, மீண்டும் ஒருமுறை, அன்பின் அரிச்சுவடிகளைக் கற்றுக்கொள்ள, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். கிறிஸ்தவ வாழ்வில், தலை சிறந்த புண்ணியங்கள் என்றழைக்கப்படும், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றிலும், அன்பே தலைசிறந்தது, நிலைத்து நிற்பது என்று பவுல் அடியார் கூறுவதன் முழுப் பொருளை கற்றுக்கொள்ளும் வரம் பெறுவோமாக!

'அன்புக்குப் பாடல்' என்ற இப்பகுதி, இன்றைய முதல் வாசகத்திற்கும், நற்செய்திக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்துள்ளது. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்தும், லூக்கா நற்செய்தியிலிருந்தும் வாசிக்கப்பட்ட பகுதிகள், இறைவாக்கினர் அடையும் இன்னல்களைப்பற்றி கூறுகின்றன. இந்த இன்னல்களை வெல்வதற்கு ஒரே வழி, உண்மையான அன்பு ஒன்றே!

"இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை." (லூக்கா 4:24) இன்றைய நற்செய்தியில் காணப்படும் இவ்வார்த்தைகள், இறைவாக்கினரைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன. 'இறைவாக்கினர்கள்' என்ற சொல்லைக் கேட்டதும், 'ஓ, அவர்களா?' என்ற எண்ணம், நம் உள்ளத்தில் தோன்றியிருக்கக்கூடும். 'இறைவாக்கினர்கள்' – ‘அவர்கள்’ அல்ல... நாம்தான்! நாம் ஒவ்வொருவரும், பல நிலைகளில், பலச் சூழல்களில் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதை நாம் முதலில் நம்பி, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

'இறைவாக்கினர்' என்றதும், அது நமது பணியல்ல என்று சொல்லி, தப்பித்துக்கொள்ளும் பழக்கம், நம் அனைவரிடமும் உள்ளது. பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், துறவியர், திருஅவைத் தலைவர்கள் அனைவரிடமும் இப்பழக்கம் உள்ளதென்பதை நாம் மறுக்கமுடியாது. இன்று, நேற்று எழுந்த பழக்கம் அல்ல இது. பழைய ஏற்பாட்டு காலத்திலும் இதை நாம் காண்கிறோம்.

'நான் சொல்வதை மக்களிடம் சொல்' என்ற கட்டளை இறைவனிடமிருந்து வந்ததும், பல வழிகளில் தப்பித்து ஓடியவர்களை, நாம், பழைய ஏற்பாட்டில் சந்திக்கிறோம். இறைவாக்கினர் எரேமியாவை, தாயின் கருவிலிருந்தே தேர்ந்ததாகக் கூறும் இறைவன், “உன்னை... அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்”  (எரேமியா 1: 17-19) என்று அவருக்கு அளிக்கும் வாக்குறுதிகள், நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால், இவ்வாக்குறுதிகளை நம்பி பணிசெய்த எரேமியா, இறைவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால், தான் மக்கள் முன் அவமானமடைய வேண்டியதாகிவிட்டது என்றும் புலம்புவதை நாம் காண்கிறோம் (எரேமியா 20:7).

இறைவாக்கினராய் மாற ஏன் இந்த பயம், தயக்கம்? இறைவாக்கினர், கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து, மறைந்துபோக முடியாமல், தனித்து நிற்க வேண்டியவர் என்பதே, இந்தப் பயத்தின் முக்கியக் காரணம் என்பதை நாம் அறிவோம். விவிலியத்தின்படி, நன்னெறியின்படி, குறிக்கோளின்படி வாழ்வது எளிதல்ல. அப்படி வாழ்வதால், நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயமே, உன்னத குறிக்கோள்களைக் கைவிட வைக்கிறது. இன்றைய உலகம், அதிலும் சிறப்பாக விளம்பர, வர்த்தக உலகம் சொல்லித்தரும் மந்திரம் - தனித்திருந்தால், தலைவலிதான், எனவே, கூட்டத்தில் கரைந்துவிடு என்பதே.

‘ஊரோடு ஒத்து வாழவேண்டும்’ என்று, குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரப்படும் பாடங்கள் ஆழமாக மனதில் வேரூன்றிப் போகின்றன. அதுவும், நாம் ஒத்து வாழவேண்டிய ஊர், நாம் பிறந்து வளர்ந்த ஊர் என்றால், இன்னும் கவனமாக செயல்படவேண்டியிருக்கும். இத்தகையச் சூழலை இயேசு சந்திக்கிறார் என்பதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில், தன் பணிவாழ்வின் கனவுகளை இயேசு கூறினார் என்று, சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, இயேசு, தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர் (லூக்கா 4:21-22) என்ற சொற்களுடன், இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து நடந்தது, ஆபத்தாக முடிந்தது. தன் சொந்த ஊரில் இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து, இயேசு, அங்கு நிகழ்ந்த பல காரியங்களை, ஆழமாக அலசிப் பார்த்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சங்கடமான, உண்மைகளைச் சொன்னார், இயேசு. சங்கடமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அவர்கள் மனதில், இயேசுவின் மீது அதுவரை இருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவை, கொஞ்சம், கொஞ்சமாய் விடைபெற ஆரம்பித்தன.

‘இவர் யோசேப்பின் மகன்’ என்று இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசியபோது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும்போது, பல நேரங்களில் "ஓ, இவனைத் தெரியாதா?" என்று ஏகவசனத்தில் ஒலிக்கும் கேள்வியும், கேலியும் அங்கு வந்து சேரும். (காண்க. மாற்கு 6:1-6)

சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல; மாறாக, தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது, நமக்குத் தெரிந்த உண்மை. இன்று நற்செய்தியில் இயேசுவுக்கும் அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்கமறுத்த ஊர் மக்களின் கோபம், கொலை வெறியாக மாறுகிறது. மதத் தலைவர்கள் “அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்” என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கிறோம்.

உண்மை பேசிய இயேசுவை உலகைவிட்டே விரட்டவேண்டும் என்று, நாசரேத்து மக்கள் மலையுச்சிக்கு இழுத்துச்சென்ற நிகழ்வு, கல்வாரி மலைக்கு இயேசுவை இழுத்துச்சென்ற வெறுப்புணர்வை நினைவுக்குக் கொணர்கிறது. நாசரேத்தில் இயேசு தப்பித்துக் கொள்கிறார். இயேசு, நம்மைப்போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெறவேண்டும்? தேவையில்லை இவர்கள் உறவு" என்று ஒதுங்கியிருப்பார். ஆனால், அன்று உண்மையை உலகறியப் பறைசாற்றத் துணிந்த இயேசுவின் மூச்சு, கல்வாரிப் பலியில்தான் அடங்கியது. உண்மையான அன்பு, கசப்பான உண்மைகளைச் சொல்லவும், அந்த உண்மைகளுக்காக உயிரைத் தரவும் தயாராக இருக்கும்.

கூட்டத்தோடு கலந்து மறைந்துவிடாமல், குறிக்கோள்களை இழக்காமல் வாழ்ந்த இறைவாக்கினர்களைப் போல், நம்மையும் இறைவன் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம். உலகில் இன்றும் உண்மைகளை எடுத்துரைப்பதால் எதிர்ப்புக்களைச் சந்தித்துவரும் வீர உள்ளங்களை, இறைவன், தொடர்ந்து காக்க வேண்டுமென்றும், உருக்கமாக வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபிக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். இப்பகுதிக்குச் செல்லும் முதல் திருத்தந்தையாக இறைவன் தன்னை அனுப்புவதற்காக அவருக்கு நன்றி கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். பிப்ரவரி 3ம் தேதி முதல், 5ம் தேதி முடிய நடைபெறும் இப்பயணத்தில், "மனித உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில் நடைபெறும் பல்சமய கருத்தரங்கில் திருத்தந்தை கலந்துகொள்கிறார். இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுடன் நம் உறவை இன்னும் உறுதிப்படுத்த, இப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2019, 14:26