தேடுதல்

Vatican News
இலாகூர் பேராலயத்தில் செபிக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இலாகூர் பேராலயத்தில் செபிக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

பாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு

தேவ நிந்தனை கூறியதாகப் பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சவான் மாசி அவர்களை விடுதலை செய்யுமாறு, மீண்டும் ஒருமுறை அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் நாட்டில் தேவ நிந்தனை கூறியதாகப் பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சவான் மாசி (Sawan Masih) என்ற கிறிஸ்தவரை விடுதலை செய்யுமாறு, மீண்டும் ஒருமுறை அழைப்பு விடப்பட்டுள்ளது.

தன் முஸ்லீம் நண்பர் ஒருவருடன் 2013ம் ஆண்டு உருவான ஒரு தகராறின்போது, இறைவாக்கினர் முகம்மதுவுக்கு எதிராக மாசி அவர்கள் பேசினார் என்று நண்பரால் குற்றம் சாட்டப்பட்டு, 2014ம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி, அப்பகுதியிலிருந்து விரட்டியடிப்பது ஒன்றே, இந்த பொய் குற்றச்சாட்டிற்குப் பின்புலத்தில் உள்ள உண்மை நோக்கம், என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர், அருள்பணி எம்மானுவேல் யூஸாப் அவர்கள் கூறினார்.

இதே அவையின் நிர்வாக இயக்குனர், Cecil Shane Chaudhry அவர்கள் பேசுகையில், பாகிஸ்தானில், மேலும் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டுடன் கூடிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

இதற்கிடையே, புர்கினா பாசோ (Burkina Faso) நாட்டின் தென் எல்லையில், ஸ்பானிய அருள்பணியாளர் அந்தோனியோ செசார் பெர்னாண்டஸ் என்பவர், இஸ்லாமியத் தீவிரவாதி ஒருவரால், சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

இவ்வெள்ளி மாலையில் கொலை செய்யப்பட்ட, சலேசியத் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள், 1982ம் ஆண்டு முதல் பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

16 February 2019, 16:50