பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ்  

அபு தாபி பல்சமயக் கருத்தரங்கு பற்றி பாகிஸ்தான் கர்தினால்

2019ம் ஆண்டை, சகிப்புத்தன்மையின் ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பித்து வருவது, பாகிஸ்தானுக்கும், இன்னும் ஏனைய நாடுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உடன்பிறந்த நிலை என்ற கருத்தில், அபு தாபியில் நடைபெற்ற பல்சமயக் கருத்தரங்கு, மத்தியக் கிழக்குப் பகுதியிலும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொணரும் புதிய அலையாக இருந்தது என்று பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் கலந்துகொண்ட கர்தினால் கூட்ஸ் அவர்கள், திருத்தந்தையும், அல் அசார் தலைமை குருவும் கையெழுத்திட்ட ஒப்பந்தம், உலக அமைதிப் பாதையில் ஒரு மைல் கல் என்று கூறினார்.

2019ம் ஆண்டை, சகிப்புத்தன்மையின் ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பித்து வருவது, பாகிஸ்தானுக்கும், இன்னும் ஏனைய நாடுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் என்று தான் நம்புவதாக கர்தினால் கூட்ஸ் அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

அபு தாபியில், புனித யோசேப்பு பேராலயமும், இயேசுவின் தாய் மரியாவின் இஸ்லாமியத் தொழுகைக்கூடமும் அருகருகே கட்டப்பட்டிருப்பது, மதங்களிடையே நிலவவேண்டிய அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் தலைசிறந்த நினைவுச் சின்னங்கள் என்று கர்தினால் கூட்ஸ் அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2019, 14:22