27வது உலக நோயாளர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சனை 27வது உலக நோயாளர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சனை 

இன்றைய கலிலேயாவென அழைக்கப்படும் கொல்கத்தா

'மகிழ்வின் நகரம்' என்றழைக்கப்படும் கொல்கத்தா, அடுத்த சில நாள்கள், 'குணப்படுத்தும் நகரமாகவும்' மாறும் - பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலிலேயாவில் இயேசு ஆற்றியப் பணிகள், உலகெங்கும் பரவியதைப் போலவே, புனித அன்னை தெரேசா கொல்கத்தாவில் ஆற்றியப் பணிகள், இன்று உலகெங்கும் பரவியுள்ளதால், கொல்கத்தாவை, இன்றைய கலிலேயா என்றழைக்கலாம் என்று ஆசிய கர்தினால் ஒருவர், கூறினார்.

பிப்ரவரி 11, வருகிற திங்களன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளையொட்டி, உலக நோயாளர் நாளை கொல்கத்தாவில் கொண்டாடுவதற்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செல்லும் பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 27வது உலக நோயாளர் நாளுக்கு, "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" (மத். 10:8) என்பதை, தன் மையக்ககருத்தாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்ததை, கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

'மகிழ்வின் நகரம்' என்றழைக்கப்படும் கொல்கத்தா, அடுத்த சில நாள்கள், 'குணப்படுத்தும் நகரமாகவும்' மாறும் என்பதை கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், தன் பேட்டியில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி 9, இச்சனிக்கிழமை முதல், 11 வருகிற திங்கள் முடிய, கொல்கத்தாவில் 27வது உலக நோயாளர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2019, 15:12