தேடுதல்

Vatican News
மத்திய கிழக்குப் பகுதியின் பழங்கால கோவில் மத்திய கிழக்குப் பகுதியின் பழங்கால கோவில்  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் துறவற சபைகள் -4

டென்மார்க் இளவரசி இறந்ததால், தொமினிக்கும், ஓஸ்மா ஆயரும் அவர்கள் விரும்பிய இடத்திற்குப் பயணம் செய்ய முடிந்தது

மேரி தெரேசா - வத்திக்கான்

12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில், ஐரோப்பாவில் பெருமளவான மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களில் சென்று குடியேறினர். கிராமங்களில் மறைப்பணி மையங்களை வைத்திருந்த திருஅவையின் பணிகளுக்கு மக்களின் இந்தக் குடியேற்றம் சவாலாக இருந்தது. அச்சமயத்தில் உருவான பிரான்சிஸ்கன், தொமினிக்கன், கார்மேல், அகுஸ்தீன் போன்ற துறவு யாசக சபைகள், திருஅவைக்கு பெரிதும் உதவின. தொமினிக்கன் சபையை உருவாக்கிய புனித Dominic de Guzmán அவர்கள்,  1170ம் ஆண்டு  ஆகஸ்ட் 8ம் தேதி, இஸ்பெயின் நாட்டில் காலேருகா (Caleruega, தற்போதைய பெயர் Castile-Leon,) எனும் ஊரில், பிரபுக்கள் குலத்தில் பிறந்தார். இவர், பலேன்சியா (Palencia) பள்ளிகளில் கல்வி கற்றார். 1191ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, தம்மிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடைகள் மற்றும் அனைத்தையும் விற்று பசித்தோர்க்கு உணவிட்டார். இவர் தனது 24வது வயதில், 1194ம் ஆண்டு, ஓஸ்மாவில் (Osma) பெனடிக்ட் சபையில் சேர்ந்தார். 1201ம் ஆண்டில் ஓஸ்மா இல்லத் தலைவரானார். 1203ம் ஆண்டில், ஓஸ்மா ஆயரான Diego de Acebo என்பவருடன் இணைந்து அரசர் எட்டாம் அல்ஃபோன்சோவுக்காக, டென்மார்க் நாட்டுக்குப் பயணமானார். இஸ்பெயின் இளவரசர் பெர்டினாண்டுக்கு, பெண் பார்க்கவே அந்நாடு சென்றனர். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. ஆனால் இளவரசி இஸ்பெயினுக்குச் செல்லுமுன் காலமானார்.

டென்மார்க் இளவரசி இறந்ததால், தொமினிக்கும், ஓஸ்மா ஆயரும் அவர்கள் விரும்பிய இடத்திற்குப் பயணம் செய்ய முடிந்தது. அவ்விருவரும், உரோம் செல்ல தீர்மானித்தனர்., ஓஸ்மா ஆயர் தனது ஆயர் பதவியிலிருந்து விலகி, கிறிஸ்துவை விசுவசிக்காத மக்களை மனந்திருப்பும் புதிய மறைப்பணியை ஆரம்பிக்க விரும்பியதே இதற்கு காரணம். இவர்கள், 1204ம் ஆண்டில் உரோம் நகரை அடைந்து, திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்களைச் சந்தித்தனர். திருத்தந்தை, அவ்விருவரையும் அவர்கள் விரும்பி கேட்ட இடத்திற்கு அனுப்பாமல், தப்பறைக் கொள்கைகள் பரவியிருந்த தென் பிரான்சுக்கு அனுப்பினார். Albigensia, குறிப்பாக, Cathari தப்பறைக் கொள்கைகள், துலுஸ் மற்றும், அதற்கருலிருந்த மாவட்டங்களில் ஆழமாக வேரூன்றியிருந்தன. இக்கொள்கைகளைப் பரப்பியவர்களை மனமாற்றும் பணியை இவ்விருவரிடமும் ஒப்படைத்தார் திருத்தந்தை 3ம் இன்னோசென்ட். அதேநேரம், Albigensian தப்பறைக் கொள்கைகள், மிகுந்த ஆபத்தை உருவாக்கின. இக்கொள்கைகயைப் பின்பற்றுவோர், தங்களையே பசியால் மடியச் செய்தனர். மனித உடல் உள்ளிட்ட அனைத்து உலகப் பொருள்களும் அடிப்படையில் தீயவை என, இக்கொள்கையாளர்கள் போதித்தனர். இவர்கள் மத்தியில் புனித தொமினிக் அவர்கள், விவாதங்கள் நடத்தினார். அதில் தோல்வியடைந்த அக்கொள்கையினர், தொமினிக் அவர்களை வன்முறையால் அச்சுறுத்தினர். எதற்கும் அஞ்சாமல் தென் பிரான்ஸ் முழுவதும் பயணம் மேற்கொண்டு போதித்தார் தொமினிக். இதனால் ஏராளமானோர் கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் ஏற்று, அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.     

தென் பிரான்சில் Albigensia தப்பறைகளுக்கு எதிராக தான் அடைந்த நன்மைகளைக் காப்பதற்காக, ஓர் அமைப்பைத் தொடங்க விரும்பினார் தொமினிக். தப்பறைக் கொள்கையாளர்களிடமிருந்து சிறாரைக் காப்பாற்றி, அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவும், கத்தோலிக்கப் பெண்கள் பாதுகாப்புக்கும், ஓர் இடம்  தேவைப்பட்டது. 1206ம் ஆண்டில், Prouille எனுமிடத்தில் முதல் இல்லத்தைத் தொடங்கினார் தொமினிக். அதுவே புனித தொமினிக் அவர்கள் தொடங்கிய சபையின் முதல் இல்லமானது. ஆயர் தியெகோவும், தொமினிக் அவர்களும் தங்களின் தலைமை இல்லங்களை அதே ஊரிலே அமைத்தனர். அந்த இல்லம் இந்நாள்வரை, Notre-Dame-de-Prouille துறவு இல்லமாக உள்ளது. புனித அசிசி நகர் பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த தொமினிக் அவர்கள், அவரது ஏழ்மையால் கவரப்பட்டார். தான் ஆரம்பித்த புதிய சபையை, புனித அகுஸ்தீனாரின் கொள்கைகளின்படி அமைத்திருந்தாலும், அதில் ஏழ்மையையும் இணைத்தார். ஆயினும், தனது சபை துறவிகள் மறையுரைகளைச் சிறப்பாக ஆற்றுவதற்குத் தேவைப்பட்ட, அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை என்பதை இவர் வலியுறுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை, தொமினிக்கன் அல்லது சாமிநாதர் சபையினர் படித்தவர்களாக, திருஅவையின் பாரம்பரியப் போதனைகளைப் போதிப்பவர்களாக, எழுத்தாளர்களாக இருந்து வருகின்றனர். அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய சபையும், தொடங்கிய காலத்தின் மரபுகளைத் தொடர்ந்து காத்து வருகின்றது.

13 February 2019, 12:54