தேடுதல்

புனிதர்களின் கண்ணாடி ஓவியங்கள் புனிதர்களின் கண்ணாடி ஓவியங்கள் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் துறவு சபைகள் - 5

கடுமையான தவ வாழ்வை மேற்கொள்ளும் நோக்கில், 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் பிறந்த யாசக துறவு சபைகள்

மேரி தெரேசா - வத்திக்கான்

12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் மலர்ந்த ஐந்து யாசக துறவு சபைகளில் மரியின் ஊழியர் சபையும் ஒன்று. இச்சபை, தனது உறுப்பினர்களின் புனிதத்துவம், நற்செய்தி அறிவித்தல், இறைவனின் அன்னையாம் மரியின் பக்தியை, குறிப்பாக, மரியின் வியாகுல பக்தியைப் பரப்புதல் ஆகிய மூன்றையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரான்சிஸ்கன், தொமினிக்கன் துறவு சபைகளைப் போன்றே, மரியின் ஊழியர் சபையினரும், குழுவாக வாழ்ந்தனர். இத்தாலியின் பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு செல்வந்த வர்த்தகர்கள், 1233ம் ஆண்டில் இச்சபையை ஆரம்பித்தனர்.

Trinitarian சபை

Trinitarians எனப்படும், மூவொரு இறைவன் மற்றும் கைதிகள் துறவு சபை, 12ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில், மூவொரு இறைவன் மீது தனிப் பக்தி கொண்டு துவங்கப்பட்டது. ஏறத்தாழ 1193ம் ஆண்டில், புனித John de Matha என்பவர், கிறிஸ்துவை இரு கைதிகளுடன் காட்சியில் கண்ட பின்னர், மூவொரு இறைவன் சபையைத் துவக்கினார். சிலுவைப்போர்களில் முஸ்லிம்களாலும், ஐரோப்பாவின் மத்திய தரைக் கடற்கரைப் பகுதியில் கடல்கொள்ளையர்களாலும், கைதுசெய்யப்பட்ட கிறிஸ்தவர்களை மீட்பதற்காக இச்சபை துவங்கப்பட்டது. எட்டு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தெற்கு ஐரோப்பிய கிறிஸ்தவ அரசுகளுக்கும், வட ஆப்ரிக்கா, தென் பிரான்ஸ், இத்தாலியின் சிசிலி, மற்றும் இஸ்பெயினின் ஒரு பகுதியைச் சார்ந்த முஸ்லிம் அரசுகளுக்கும் இடையே அவ்வப்போது போர் இடம்பெற்று வந்தது. கடல்கொள்ளையர்களால் அல்லது கடலோரத் திடீர் தாக்குதல்களால் அல்லது போர்களால், மத்தியகால கிறிஸ்தவ ஐரோப்பிய மாநில மக்கள், கைதுசெய்யப்படும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து எதிர்கொண்டனர். புரட்சிக் குழுக்கள், குற்றக்கும்பல்கள், மற்றும் இராணுவங்களால் சூறையாடல்கள், ஏறத்தாழ ஒவ்வோர் ஆண்டும் இடம்பெற்றன. எனவே மூவொரு இறைவன் சபையினருக்கு, கைதிகளை மீட்பதே, உடல்சார்ந்த இரக்கச் செயல்களில் ஒன்றாக இருந்தது. மேலும், சிலுவைப்போர்கள் சமயங்களில், ஏராளமான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களிடம் அகப்படும் ஆபத்தும் நிலவியது. எனவே அந்தக் காலத்தில் தோன்றிய துறவு சபைகள், இரக்கச் செயல்கள் ஆற்றுவதற்கு வாக்குறுதி எடுத்தனர்.

Mercedarian சபை

மத்திய காலத்தில் தோன்றிய யாசக துறவு சபைகளில் இரக்கத்தின் அன்னை மற்றும் கைதிகள் மீட்பு இராணுவ சபையும் ஒன்று. கிறிஸ்தவ கைதிகளை மீட்பதற்காக, இஸ்பெயின் நாட்டின் பார்செலோனா நகரில், 1218ம் ஆண்டில், புனித பீட்டர் நொலாஸ்கோ என்பவர் இச்சபையை ஆரம்பித்தார். இச்சபையின் இருபால் துறவிகள் பொதுவாக, Mercedarians என அழைக்கப்படுகின்றனர். இச்சபையினர் தொடக்க முதல், இன்று வரை, நான்காவது வார்த்தைப்பாடு ஒன்றை எடுக்கின்றனர். விசுவாசத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கும்வேளையில், மற்றவர்க்காக, தேவையானால் உயிரையும் கொடுக்கத் தயார் என இச்சபையினர் வார்த்தைப்பாடு கொடுக்கின்றனர். இது அச்சபையின் தனித்துவமாகும். எட்டு முதல், பதினைந்தாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில், அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே போர்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதனால் இரு பக்கங்களிலும் பெருமளவில் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்பெயினில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமுதாயங்களில், கைதிகளை வாங்குவதும் விற்பதுமாக இருந்தனர். முஸ்லிம் கைதிகள், போர்க் கைதிகள் என்பதால், அவர்கள், அடிமைகள் என்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இது எந்த அளவுக்கு நடைபெற்றதென்றால், பத்தாம் நூற்றாண்டில், இஸ்பெயினின் Andalusia மாநில வர்த்தகர்கள், கிழக்கு ஐரோப்பாவில் அடிமைகளை விலைக்கு வாங்குவதற்கு கரவான்களை உருவாக்கினர். 13ம் நூற்றாண்டில், இந்த அடிமைகள் வர்த்தகம், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் துறைமுகங்களில் ஓகோ என வளரத் தொடங்கியது. இந்நிலையில், இரக்கத்தின் அன்னை சபையினர், முஸ்லிம்களிடம், குறிப்பாக, இஸ்பெயினில் முஸ்லிம்களிடம் கைதிகளாக இருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்கு உழைத்தனர்.

Minims சபை

Minims எனப்படும் மினிம் துறவு சபையும், மத்திய காலத்தில் தோன்றிய யாசக சபைகளில் ஒன்று. 15ம் நூற்றாண்டில் இத்தாலியில் புனித பிரான்சிஸ் பவுலா என்பவரால் இச்சபை தொடங்கப்பட்டது. இவர் 1416ம் ஆண்டில் பிறந்தார். இவர் பிறந்து ஒரு மாதம் ஆனபோது, கடும் நோயால் தாக்கப்பட்டார். அதனால் இவரின் தாய், புனித பிரான்சிஸ் அசிசியாரிடம் செபித்தார். தன் மகன் பிழைத்துக்கொண்டால், பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் ஓராண்டு தங்குவான் என செபத்தில் உறுதியளித்தார். அதன்படி மகனும் பிழைத்துக்கொண்டார். இவருக்கு 13 வயது நிரம்பியபோது, தாயின் செபத்தை நிறைவேற்றும் விதமாக, பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் ஓராண்டு தங்கினார். அந்த ஆண்டு முடிந்தபின், தனது வாழ்வை, துறவியாக, தனிமையிலும், தவத்திலும் செலவிட்டார். 1435ம் ஆண்டில், பிரான்சிஸ் பவுலா அவர்களுடன் இருவர் சேர்ந்தனர். அவர்கள் மூவரும் ஒரு குழுவாக வாழ ஆரம்பித்தனர். இவர்கள், புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஏழை துறவிகள் என அழைக்கப்பட்டனர். கடுமையான தவ வாழ்வை மேற்கொள்ளும் இச்சபை, இத்தாலி எங்கும் பரவியது. 1482ம் ஆண்டில் பிரான்சிலும், 1497ம் ஆண்டில் இஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலும் இச்சபை பரவியது. தற்போது Minims சபையினர், ஆப்ரிக்காவில் காமரூன், காங்கோ குடியரசு, இன்னும் இந்தியா, மெக்சிகோ, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடு, கொலம்பியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில், மறைப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 14:50