தேடுதல்

செபிக்கும் இந்திய குழந்தை செபிக்கும் இந்திய குழந்தை 

வாரம் ஓர் அலசல் – நாடு முன்னேற கிராமங்கள்

இந்தியாவின் முதுகெலும்பாக அமைந்துள்ள கிராமங்கள் முன்னேறினால்தான் பாரத மாதா தலைநிமிர்ந்து நேராக நடக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறார் பத்மஸ்ரீ அம்மா சின்னப்பிள்ளை

மேரி தெரேசா - வத்திக்கான்

வாரம் ஓர் அலசல் - 180219

அந்த திறந்தவெளி அரங்கத்தில் இரு பக்கங்களிலும் புல்லும் கொள்ளும் பச்சைப் பசேலென்று செழித்திருந்தன. அந்த இடத்தில் குதிரை ஓட்டப்பந்தயப் போட்டி தொடங்கியது. அதில் பங்குபெற்ற குதிரைகள், கொள்ளையோ, புல்லையோ கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்த, அந்தப் பக்கத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, மற்ற ஆட்டைப் பார்த்து, குதிரைகள் இப்படி, பச்சைப் பசேலென்று செழித்திருக்கும், புல்லையும், கொள்ளையும் பார்க்காமல் ஓடுகின்றனவே, உனக்கு இது வியப்பாக இல்லையா? எனக் கேட்டது. அதற்கு இரண்டாவது ஆடு, போட்டிக் குதிரைகள் அப்படித்தான், என்று சொன்னது. பிறகு அந்த ஆடு சொன்னது – வெல்லப்பாயும் குதிரை, புல்லைப் பார்க்குமா? கொள்ளைப் பார்க்குமா? என்று. (காசி ஆனந்தன்). கருமமே கண்ணாயினர் ஒரு தொழிலைச் செய்து முடிக்க நினைத்துவிட்டால், எதிர்வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்த மாட்டார்கள். இத்தகையோர், மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்.

கருமமே கண்ணாயினராக, வாழ்வில் எப்போதுமே, தங்களின் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள், வெற்றிக் கொடியை நாட்டி வருகின்றார்கள். இவர்களில் பலர், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயமும் தலைநிமிர்ந்து வாழ உதவுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் உயரிய விருதுகளைப் பெறுகின்ற சிலரது சமுதாயநலப் பணிகளும் பல வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகின்றன.  இவ்வாண்டு இந்திய குடியரசு தினத்திற்குப் பின், இந்திய ஊடகங்களில் அதிகமாகப் புகழப்பட்டு வருபவர், சமூகநலத் தொண்டர், மதுரை திருமதி சின்னப்பிள்ளை பெருமாள் அவர்கள். 2019ம் ஆண்டில், இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ள இரு தமிழர்களில், இவரும் ஒருவர். இன்றைய நாள்வரை, எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, சின்னப்பிள்ளை அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக கிராமப்புறங்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருகின்றார். இவர் உருவாக்கிய மகளிர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, இந்திய அரசின் மூன்று இலட்சம் ரூபாயுடன்கூடிய, "சக்தி புரஸ்கார்" விருது, தமிழ்நாடு அரசின் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘பொற்கிழி’ விருது, தமிழ்நாடு அரசின் ‘ஔவையார் விருது’, சிறந்த சமூக சேவைக்காக, ‘தூர்தர்ஷன் பொதிகை’ விருது, தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்காக, ‘பஜாஜ் ஜானகி தேவி’ விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். ‘பஜாஜ் ஜானகி தேவி’ விருதை, மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி அவர்கள், இவருக்கு வழங்கியுள்ளார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, 67 வயது நிரம்பிய பெ.சின்னப்பிள்ளை அவர்கள், களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, கடந்த முப்பது ஆண்டுகளாக கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றி வருகிறார். மது விலக்கு மற்றும், கந்துவட்டி ஒழிப்புக்காகவும் இவர் போராடி வருகிறார். இவரது ‘களஞ்சியம்’ இயக்கத்தின் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு கல்விக் கடன், விவசாயக் கடன் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு, மாடு வளர்க்க கடன் பெறுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சக்தி புரஸ்கர் விருது மூலம் தேசிய அளவில் அறிமுகமான சின்னப்பிள்ளை அவர்களுக்கு, தற்போது அதே மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து மீண்டும் கவுரவித்துள்ளது. 1999ம் ஆண்டு வழங்கப்பட்ட ‘சக்தி புரஸ்கர்’ விருது விழாவின்போது, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளை அவர்களின் காலில், விழுந்து ஆசி பெற்ற நிகழ்வால் பரவலாக அறியப்பட்டார் சின்னப்பிள்ளை. அந்த அனுபவத்தை தி இந்து நாளிதழிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் சின்னப்பிள்ளை அவர்கள்.

சின்னப்பிள்ளை அவர்கள், பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயானார். மூன்று பெண் குழந்தைகளுமே சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். கணவரும் தீராத நோயினால் வீட்டிலே முடங்கி, இறந்துபோக, வறுமையினால், கூலி வேலைகளையும், வயல் வேலைகளையும் செய்துவந்தார் சின்னப்பிள்ளை. அச்சமயத்தில் அங்கு வேலை செய்த பெண்கள் குழுக்களுக்கு மேற்பார்வையாளராகவும் சின்னப்பிள்ளை இருந்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்த பெண்களுக்காக, சம்பளத்தில் வேறுபாடு காட்டும் முதலாளிகளிடம், அவர்கள் சார்பாக குரல் கொடுத்து வந்தார். இவரது வாழ்வு, இங்கிருந்துதான் பாதை மாறத் தொடங்கியுள்ளது. வயலில் என்னுடன் வேலை செய்த பிற பெண்களிடம் பொருளாதார ரீதியாக அவர்கள் படும் துன்பங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். நானும் அதே வேலையைச் செய்ததால் அவர்களின் பிரச்சனையைப் புரிந்துகொள்ள முடிந்தது. நான் பேசியவரை பெரும்பாலானவர்கள் வட்டிக்குக் கடன் பெற்றுதான் வறுமையைச் சமாளித்து வந்தார்கள். ஒருகட்டத்தில் நாமே நமக்குள் உதவிசெய்து நமது பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று அவர்களுடன் பேசினேன். இது தொடர்பாக பிற பெண்களிடம் பேசும்போது,  இலவசமாகத் தருவீர்களா என்றுதான் முதலில் கேட்டார்கள். அவர்களிடம் இல்லை,  நாம்தான் பணத்தைச் சேமித்து, நாமேதான் கொடுத்து உதவ வேண்டும் என்று கூறினேன். முதலில் இது புரியாவிட்டாலும், பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள். முதலில் பதினான்கு பெண்கள் சேர்ந்து, ஆத்தூர் பஞ்சாயத்தில் 'புல்லு களஞ்சியம்' என்ற சிறுசேமிப்புக் குழுவை ஆரம்பித்தோம். முதலில் மாதத்துக்கு இருபது ரூபாய் என்று சேமிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து ஆறு மாதம் சேர்த்தோம். அதிலிருந்த பணத்தை நாங்களே எங்களுக்குள் தேவைப்படுகிறவர்களுக்கு கடனாக வழங்கினோம். திரும்ப நாங்களே வட்டிபோட்டு அந்தக் கடனைக் கட்டிவிடுவோம். அதன்பிறகு சேமிப்பை ஐம்பது ஆக உயர்த்தினோம். இது படிப்படியாக வளர்ந்தது. வங்கிகள் எங்களை நம்பி கடன் கொடுக்காத சூழ்நிலையில், தானம் அறக்கட்டளையின் வசிமலை சார் வங்கிகளிடம் எங்களது சேமிப்புக்கு ஏற்றவாறு கடன் கொடுக்குமாறு வலியுறுத்தினார். இதன்மூலம் களஞ்சியம் சார்பில், நாங்கள் பத்தாயிரம் ரூபாய் சேமிப்பு வைத்திருந்தால் வங்கிகள் எங்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவார்கள். இதனைத் தொடர்ந்து நாங்களும் கடன்பெற்று தொழில் தொடங்கி அதனை அடைக்கவும் செய்தோம்.

இது அப்படியே தொடர்ந்தது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிற ஊர்களுக்குச் சென்று எங்கள் களஞ்சியம் பெண்கள் சார்பாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தோம். இதன்மூலம் எட்டுக்கும் மேற்பட்ட களஞ்சியம் சேமிப்புக் குழுக்கள் உருவாகின. இது அப்படியே விரிவடைந்தது. எங்களுக்கென்று அழகர் கோயிலில் அலுவலகக் கட்டிடமும் கட்டினோம். அவ்வாறே களஞ்சியம் அமைப்பு, மதுரை முழுவதும் பரவியது. எங்கள் குழுவின் மூலம் மருத்துவமனைகளும் கட்டினோம். தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மது ஒழிப்பு, கந்து வட்டிக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறோம். மதுவிலக்கு, கந்துவட்டி ஒழிப்புக்கான எனது போராட்டம் தொடரும்.

இவ்வாறு சொல்லும், படிக்காத பத்மஸ்ரீ சமூகநலத் தொண்டர் சின்னப்பிள்ளை அவர்கள், தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார். மதுப்பழக்கத்தினால்தான் கிராமத்திலிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அவர்கள், தங்களின் ஒருநாள் கூலியின் பெரும்பாலான தொகையை மது அருந்துவதற்கே செலவழித்து விடுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கந்துவட்டிக்கு எதிராக தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். கிராமப்புறங்களில் இன்னும் பெரும்பாலான இளைஞர்களும், பெண்களும் படித்திருந்தும் வேலை கிடைக்காததால் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். வருங்காலத் தலைமுறையினர் படித்துவிட்டு தங்கள் ஊர் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்.

பத்மஸ்ரீ அம்மா சின்னப்பிள்ளை அவர்கள், எனக்கு நானே முன்மாதிரி என்று சொல்லி, கிராமப்புற பெண்கள் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறார். இவர், இந்தியாவின் முதுகெலும்பாக அமைந்துள்ள கிராமங்கள் முன்னேறினால்தான் பாரத மாதா தலைநிமிர்ந்து நேராக நடக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறார். மதுரை சின்னப்பிள்ளை போன்ற பல ஆளுமைகள் கிராமங்களில் உருவாகட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2019, 15:36