தேடுதல்

கொலம்பியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் கொலம்பியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் 

மாறுபட்ட கருத்துக்களை மதிக்கும் குணத்தை வளர்க்க...

ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொணர, அரசும், அமைதி வழிகளை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தும் கொலம்பிய ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருத்துப் பரிமாற்றக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு, ஒப்புரவு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில் கொலம்பிய மக்கள் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியொன்றை வெளியிட்ட கொலம்பிய ஆயர்கள், பகைமையையும் பழிவாங்கும் உணர்வுகளையும் களைந்து, மாறுபட்ட கருத்துக்களை மதித்து ஏற்கும் குணத்தை வளர்க்கவேண்டும் என மக்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ள கொரில்லாக் குழுவினர், தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, அமைதி குறித்த விருப்பத்தை வெளியிட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள கொலம்பிய ஆயர்கள், ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொணர, அரசும் அமைதி வழிகளை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தொடரவேண்டும் என்பதில் தலத்திருஅவை உறுதியாக இருக்கிறதெனக் கூறும் கொலம்பிய ஆயர்கள், இம்முயற்சிக்கு தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் ஆற்ற தயாராக இருப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2019, 16:27