பங்களாதேஷ் மியான்மார் எல்லையில் அமைந்துள்ள Rohingya முகாம் பங்களாதேஷ் மியான்மார் எல்லையில் அமைந்துள்ள Rohingya முகாம் 

Rohingya புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தல்

ஆசியத் திருஅவை புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவதில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றது. எனினும், மேய்ப்புப்பணி அளவில் ஒத்துழைப்பு அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டிலிருந்து பங்களாதேஷ் நாட்டில் புலம்பெயர்ந்துள்ள Rohingya மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் பிரச்சனைக்கு, தூதரகத் தீர்வு காணப்படுமாறு, உலகளாவிய சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளது, FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு.

ஆசியாவில் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், நாட்டிற்குள்ளே இடம்பெயர்ந்தோர், மனித வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவை குறித்து பங்களாதேஷில், பிப்ரவரி 11 முதல் 17 முடிய பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் 11 ஆசிய நாடுகளின் நாற்பதுக்கு மேற்பட்ட கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தப் பிரதிநிதிகள், மியான்மார் நாட்டிற்கும், பங்களாதேஷ் நாட்டிற்கும் எல்லையிலுள்ள Cox’s Bazarல் அமைக்கப்பட்டுள்ள, புலம்பெயர்ந்தவர் முகாம்களை, ஆறு குழுக்களாகப் பார்வையிட்டு, அறிக்கைகளும் சமர்ப்பித்தனர். இந்த முகாம்களில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர்.    

புலம்பெயர்ந்த மக்களுக்கு தங்கள் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள பங்களாதேஷ் அரசை பாராட்டியுள்ள இந்தப் பிரதிநிதிகள், இந்த மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தாராளமாக உதவிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் 25 கோடிக்கு அதிகமானோர் குடிபெயர்ந்தோர், 2 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தோர் மற்றும் 4 கோடி முதல் 5 கோடி வரை நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தோர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2019, 15:36