தேடுதல்

பதுவை புனித அந்தோனியார் திருத்தலம் பதுவை புனித அந்தோனியார் திருத்தலம் 

பதுவை நகர் புனித அந்தோனியாரைக் காணவரும் பக்தர்கள்

பதுவைத் திருத்தலத்திற்கு, 2018ம் ஆண்டு, 12,15,961 திருப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று, இத்திருத்தலத்தைப் பராமரிக்கும் பிரான்சிஸ்கன் துறவுக் குழுமம் அறிவித்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் பதுவை நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் புனித அந்தோனியாரின் திருப்பொருளான அவரது நாவை மையப்படுத்தி, பிப்ரவரி 17, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படும் சிறப்புத் திருநாளைக் குறித்த விவரங்களை, இத்திருத்தலம் வெளியிட்டுள்ளது.

புனிதரின் நாவும் ஏனைய திருப்பொருள்களும் பாதுகாக்கப்பட்டு வரும் பதுவைத் திருத்தலத்திற்கு, 2018ம் ஆண்டு, 12,15,961 திருப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று, இத்திருத்தலத்தைப் பராமரிக்கும் பிரான்சிஸ்கன் துறவுக் குழுமம் அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு, திருஅவையில் இரக்கத்தின் யூபிலி கொண்டாடப்பட்டதையொட்டி, பதுவை புனித அந்தோனியாரின் திருத்தலத்திற்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததென்றும், 2018ம் ஆண்டு வந்திருந்த திருப்பயணிகளின் எண்ணிக்கை, அதற்கு முந்திய 2017ம் ஆண்டைக் காட்டிலும், 32,196 பேர் கூடுதல் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

திருத்தலத்திற்கு வருகை தரும் இத்தாலிய மக்களுக்கு அடுத்ததாக, போலந்து, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின் மற்றும் குரோவேஷியா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அதிகம் என்றும், 2018ம் ஆண்டு, முதன்முறையாக, பொலினேசியா, சிரியா, பெனின் ஆகிய நாடுகளிலிருந்தும் திருப்பயணிகள் வந்திருந்தனர் என்றும், இவ்வறிக்கை கூறுகிறது.

1195ம் ஆண்டு, போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்த அந்தோனியார், 1231ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, தன் 36வது வயதில், இத்தாலியின், பதுவை நகரில் இறையடி சேர்ந்தார். அவர் மரணமடைந்ததற்கு அடுத்த ஆண்டிலேயே, அவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

1263ம் ஆண்டு, அவர் புதையுண்ட இடத்தை மீண்டும் தோண்டியபோது, அவரது உடல் முழுவதும் அழிந்திருந்தாலும், அவரது நாவு மட்டும் அழியாமல் இருந்ததென்று வரலாறு சொல்கிறது. அவரது நாவும், ஏனைய திருப்பொருள்களும் தற்போதைய பசிலிக்காவிற்கு, பிப்ரவரி 15ம் தேதி கொண்டுவரப்பட்டது.

புனிதரின் திருநாள் ஜூன் 13ம் தேதி சிறப்பிக்கப்பட்டாலும், அவரது நாவு, திருத்தலத்தில் வைக்கப்பட்ட பிப்ரவரி 15, அல்லது, அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று, அவரது நாவும், திருப்பொருள்களும் கொணரப்பட்ட திருநாள் என்று, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2019, 14:16