தேடுதல்

Vatican News
வெனிசுவேலாவில் நெருக்கடி வெனிசுவேலாவில் நெருக்கடி  (ANSA)

வெனிசுவேலா மக்களை காப்பது இராணுவத்தின் முக்கிய கடமை

சனவரி 23 இப்புதனன்று வெனிசுவேலா நாடெங்கும் நடத்தப்பட்ட பேரணிகள், நம்பிக்கையின் அடையாளங்கள். மக்களை காப்பது ஒன்றே நாட்டின் காவல் துறை மற்றும் இராணுவத்தின் முக்கிய கடமை - ஆயர்களின் அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டில், மக்களின் ஒற்றுமையைக் குலைத்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய சர்வாதிகார அரசை கவிழ்த்து, மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டிய, சனவரி 23ம் தேதி, நாட்டின் தேசிய நாளாக விளங்குகிறது என்று, வெனிசுவேலா ஆயர் பேரவை வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.

61 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1958ம் ஆண்டு சனவரி 23ம் தேதி, Perez Jiménez அவர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்று, ஆயர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக வெனிசுவேலா நாட்டில் நிலவும் அடக்கு முறைகளும், கலகங்களும், வரலாற்றில் நிகழ்ந்த சனவரி 23ம் தேதியை மீண்டும் நினைவுக்குக் கொணர்கின்றன என்று கூறும் ஆயர்கள், மக்கள் விரும்பும் மாற்றத்தை வழங்கவேண்டியது, அரசின் கடமை என்பதையும், தங்கள் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவ்வாண்டு, சனவரி 23, இப்புதனன்று, நாடெங்கும் நடத்தப்பட்ட பேரணிகள், நம்பிக்கையின் அடையாளங்கள் என்றும், மக்களை காப்பது ஒன்றே, காவல் துறை, மற்றும், இராணுவத்தின் முக்கிய கடமை என்றும், ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

வெனிசுவேலா நாட்டின் பாதுகாவலரான Coromoto திருத்தலத்தின் அன்னை மரியா, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும், நாட்டு மக்கள் அனைவரையும் காக்கவேண்டுமென்ற வேண்டுதலோடு ஆயர்களின் அறிக்கை நிறைவடைகிறது.

வெனிசுவேலாவின் எதிர்கட்சித் தலைவர், Juan Guaidó அவர்கள், தற்போதைய அரசுத்தலைவர் Nicolás Maduro அவர்களுக்கு எதிராக, தன்னை அரசுத்தலைவர் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

24 January 2019, 15:10